பெற்றோர் கவனத்துக்கு… குழந்தைகளுக்கு ரத்தசோகை வருவதற்கான காரணமும் தீர்வும்!

by admin-blog-kh | December 20, 2024 7:51 am

ரத்தசோகை என்றால் என்ன? 

ரத்தசோகையை ஆங்கிலத்தில் அனீமியா[1] என்று கூறுவோம். ரத்தத்தில் இருக்கக்கூடிய சிவப்பணுக்கள் குறையும் நிலைதான் ரத்தசோகை.

சிவப்பணுக்கள் குறைவதால் என்ன நிகழும்? 

சிவப்பணுக்களுக்குள் ஹீமோகுளோபின் எனும் புரதம் (புரோட்டீன்) இருக்கும். அந்த ஹீமோகுளோபின்தான் நம் உடலில் இருக்கக்கூடிய ஆக்ஸிஜனை நுரையீரலிலிருந்து உடல் முழுவதும் எடுத்துச் செல்கிறது. அவ்வாறு எடுத்துச் செல்லும்போது நம் உடலில் ஆக்ஸிஜன் பயன்படுத்தப்பட்டு மெட்டபாலிசம் எனும் வளர்சிதை மாற்றம் நிகழ்கிறது. உடலில் இந்த ஹீமோகுளோபினின் அளவு  குறையும்போது ஏற்படக்கூடிய பின்விளைவுகளையே அனீமியா என்று சொல்கிறோம்.

குழந்தைகளுக்கும் ரத்தசோகை ஏற்படுமா? அதற்கு காரணம் என்ன?

பொதுவாக குழந்தைகளுக்குதான் அனீமியா அதிக அளவில் ஏற்படுகிறது. பெரியவர்களைக் காட்டிலும், குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும்தான் பொதுவாக அதிக அளவில்  ரத்தசோகை ஏற்படுகிறது. காரணம், பொதுவாக கர்ப்பணி மற்றும் குழந்தைகளுக்கு அதிக அளவில் இரும்புச்சத்து மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. அவ்வாறு ஊட்டச்சத்துமிக்க உணவுகளை நாம் கொடுக்கத் தவறுவதால், அவர்களின் உடலில் இரும்புச்சத்து குறைகிறது. இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படக்கூடிய அனீமியாவையே நாம் பொதுவாக
குழந்தைகளி டமும் கர்ப்பிணிகளி டமும் பார்க்கிறோம்.

ரத்தசோகை ஏற்படுவதற்கு இன்னும் சில காரணங்கள் இருக்கின்றன.

அவற்றை நாம் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

  1. ரத்த அணுக்கள் பொதுவாக எலும்பு மஜ்ஜையில் உற்பத்தி ஆகின்றன. எலும்பு மஜ்ஜையில் ரத்த அணுக்கள் உற்பத்தி குறைந்துவிட்டால், அதுவும் ரத்தசோகைக்கு ஒரு காரணம்.
  2. ரத்த அணுக்கள், ரத்த ஓட்டத்தின்போது வேகமாக உடையலாம். அதற்கு Hemolytic Anemia என்று பெயர்.
  3. ரத்த இழப்பு – நமக்குத் தெரிந்தோ, தெரியாமலோ ரத்தம் எங்கேனும் கசிவதுதான் ரத்த இழப்பு. பருவம் அடைந்த பெண்களுக்கு மாதவிடாயின் மூலம் அதிக அளவில் ரத்தக் கசிவு ஏற்பட்டு அதனால் சத்துக் குறைபாடு ஏற்பட்டு அனீமியா ஏற்படலாம்.

தவிர, மலச்சிக்கல் அதனால் குடல் மூலமாக ரத்தக் கசிவு ஏற்பட்டு அனீமியா ஏற்படலாம்.

குழந்தைகளில் ஏற்படக்கூடிய ரத்தசோகைக்கான அறிகுறிகள் என்ன? 

ரத்தசோகை உள்ள குழந்தை பார்க்கவே சோர்வாக இருப்பார்கள். பசியின்மை ஏற்படும். சரியாக உணவு சாப்பிடுவதில்லை. அதனால், உடல் எடை அதிகரிக்காமல் இருத்தல், மலச்சிக்கல்… இவையெல்லாம் ரத்தசோகை இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு ஏற்படும் ஆரம்பநிலை அறிகுறிகள். இன்னும் சில குழந்தைகள் சாக்பீஸ், மண் போன்றவற்றைச் சாப்பிடுவார்கள், சுவரில் இருக்கக்கூடிய சுண்ணாம்பைச் சுரண்டிச் சாப்பிடுவார்கள். இவற்றையெல்லாம். ‘பைகா’ என்று சொல்வோம். அதாவது உணவுப் பொருட்களை தவிர்த்து மற்ற பொருட்களை சாப்பிட வேண்டும் என்கிற ஆர்வம் அதிகமாக இருக்கும். இவற்றை ரத்தசோகையின் முக்கியமான அறிகுறியாக கூறலாம்.

ஹீமோகுளோபின் அளவு அதிக அளவில் குறைய குறைய சாதாரணமாக நடந்தாலே மூச்சு வாங்கும், விளையாட முடியாது, படுத்தே இருப்பார்கள், மிகவும் சோர்ந்து இருப்பார்கள், வேகமாக மூச்சு விடுதல் என இவையெல்லாம் தீவிர ரத்தசோகைக்கான அறிகுறிகள்.

குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய ரத்தசோகையை தடுப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன? 

இரும்புச்சத்து மிக்க உணவுகளை சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். எப்போது ஆரம்பிக்க வேண்டும்? குழந்தை வயிற்றில் இருக்கும் போதே, தாய் இரும்புச்சத்து பொருட்களை சாப்பிட வேண்டும். பொதுவாக அனைத்து மகப்பேறு மருத்துவர்களும் கர்ப்பிணிகளுக்கு இரும்புச்சத்து மாத்திரை கொடுப்பார்கள். அதனை கர்ப்பிணிகள் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

குழந்தை பிறந்த பிறகு முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் மட்டும்தான் கொடுக்க வேண்டும். ஆகையால் தாயுடைய இரும்புச்சத்து அளவு போதுமான அளவு இருக்க வேண்டும். மேலும் 6 மாதம் கழித்து குழந்தைகளுக்கு இதர உணவுகளை கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். அப்போது பெரும்பாலும் நடக்கக்கூடிய தவறுகள், இதர உணவுகள் கொடுக்க ஆரம்பித்த பிறகு எருமைப்பால் அல்லது பசும் பால் கொடுப்பார்கள். அவ்வாறு செய்வது தவறு. விலங்குகளின் பாலை குழந்தைகளுக்கு 1 வருடத்திற்குத் தரக் கூடாது. அதற்கு மாறாக தானிய வகைகள், பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் தர வேண்டும். அசைவ உணவுகளும் கொடுக்கலாம். அதிலிருக்கக் கூடிய இரும்புச்சத்துக்களை உடலுக்குக் கொடுக்கும்போதுதான், குழந்தைகளுக்கு ரத்தசோகை வராமல் நாம் தடுக்க முடியும். மருத்துவரின் பரிந்துரை அடிப்படையில் குழந்தைகளுக்கு நாம் இரும்புச்சத்து சொட்டு மருந்து கொடுக்க வேண்டும்.

மரபணு காரணங்களாலும் குழந்தைக்கு ரத்தசோகை ஏற்படலாம். உறவு முறைகளுக்குள் ஏற்படக்கூடிய திருமணங்களில் இந்தமாதிரியான மரபணு நோய்த் தொற்று பொதுவாக ஏற்படும்.

தொடர்புடைய வலைப்பதிவு: Iron-deficiency Anaemia in Children[2]

சத்துக் குறைபாடால் ஏற்படக்கூடிய ரத்தசோகைக்கான சிகிச்சை முறைகள் என்னென்ன?  

ஆரம்ப நிலைகளில் குழந்தைகளுக்கு ரத்தசோகைக்கான அறிகுறிகள் பெரிதாக இருக்காது. ஆனால், ரத்தசோகை ஏற்பட்டு ஹீமோகுளோபின் அளவு மிகவும் குறைவாகும்போதுதான் பெற்றோர்கள் குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்து வருகிறார்கள். அதற்கு இரும்புச்சத்து மருந்துகள் கொடுத்து, உணவு முறைகளை எடுத்து சொன்னால் மிக வேகமாக ஹீமோகுளோபின் அதிகரிக்கும். இரும்புச்சத்து குறைபாட்டிற்கு நாம் சரியான மருத்துவ ஆலோசனை கொடுத்தால், சுலபமாக குணப்படுத்திடலாம். ரத்தசோகை மீண்டும் வராமல் இருக்க கொடுக்க வேண்டிய ஆலோசனையும் மிக முக்கியம்.

எடுத்துக்காட்டாக… ஒரு மருத்துவராக நான், நோயாளிக்கு அயன் சிரப் எழுதிக் கொடுப்பேன். கொடுத்த ஒரு 2 வாரம் கழித்து ஹீமோகுளோபின் 1-2 கிராம் அதிகரித்திருக்கும். அப்போது சிகிச்சையை உடனே நிறுத்துவிடுவார்கள். ஆனால் அது தவறு. சிகிச்சை மூலம் ஹீமோகுளோபின் சாதாரண அளவிற்கு வர வேண்டும் மற்றும் உடலுக்குத் தேவையான அளவு இரும்புச் சத்தை குழந்தைக்குக் கொடுத்தால்தான், பிற்காலத்தில் மீண்டும் ஹீமோகுளோபின் குறையாமல் இருக்கும். குறைந்தபட்சம் 3-4 மாதங்களுக்கு அவர்களுக்கு அயன் சிரப் அல்லது அயன் மாத்திரை தொடர்ந்து கொடுக்க வேண்டும். பிறகு சரியான உணவு முறைகளுக்கு ஆலோசனை கொடுத்தால், இரும்புச்சத்து குறைபாடு நிரந்தரமாகக் குணமடையும்.

குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும்தான் பொதுவாக அதிக அளவில் ரத்தசோகை ஏற்படுகிறது. ஊட்டச்சத்துமிக்க உணவுகளை நாம் கொடுக்கத் தவறுவதால், அவர்களின் உடலில் இரும்புச்சத்து குறைகிறது.

மற்ற காரணங்கள்:

தலசீமியா(Thalassemia), Sickle cell anemia[3] போன்றவற்றைக் கூறலாம். இவையெல்லாம் ரத்தம் உடைவதற்கான காரணங்கள். ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக சிகிச்சை முறை இருக்கிறது. எடுத்துக்காட்டாக: தலசீமியா(Thalassemia)[4] என்றால் தொடர்ந்து ரத்த மாற்ற (Blood Transfusion) சிகிச்சையை சொல்வோம். முழுமையாக சரி செய்ய வேண்டும் என்றால் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை (Bone Marrow Transplantation) அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

தொடர்புடைய வலைப்பதிவு: எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை என்றால் என்ன?[5]

ஆட்டோ இம்யூன் ஹீமோலிடிக் அனீமியா (Autoimmune Hemolytic Anemia)… இதில் நோய்த்தொற்றுக்குப் பின் ரத்தம் (ரத்த சிவப்பணுக்கள்) வேகமாக அழியும். குறுகிய காலத்திற்கு ஸ்டீராய்டு போன்ற மருந்துகள் உபயோகிக்கும்போது  இந்த அழிதல் (destroy) கட்டுப்பாடுக்குள் இருக்கும்.

ஏப்லஸ்டிக் அனீமியா என்பது எலும்பு மஜ்ஜை செயலிழப்பு ஏற்படுவதால் வரும் நோய். இதில் சிவப்பணுக்கள் மட்டுமல்லாமல் வெள்ளையணுக்கள் மற்றும் தட்டையணுக்களின் எண்ணிக்கையும் குறைந்து காணப்படும். இதன் காரணம் கண்டறியப்பட்டு நோயாளிகளுக்கும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை அல்லது மருந்துகள் மூலம் சிகிச்சையளித்து மீண்டும் எலும்பு மஜ்ஜையை செயல்படச் செய்யலாம்.

தற்போது அனீமியா என்று எல்லோரும் கூகுள் செய்து பார்க்கிறார்கள். கூகுள் பல விஷயங்களை சொல்லி நம்மை பயமுறுத்தி விடும். அதுபோன்ற அநாவசியமான பயம் நமக்கு வேண்டாம். இரும்புச்சத்து போன்ற சாதாரண காரணங்களாக இருந்தாலும் சரி, மரபணு ரீதியாக அல்லது புற்றுநோய் ரீதியாக ஒரு அபாயகரமான காரணங்களால் ரத்தசோகை ஏற்பட்டாலும் சரி… அனைத்துக்குமே இன்றைய மருத்துவத்தில்  சரியான சிகிச்சைமுறைகள் இருக்கின்றன. அதனால் அனைத்தையும் குணப்படுத்தி மீண்டும்; சாதாரண வாழ்க்கைக்குத் திரும்புவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதனால், எதற்கும் பயப்பட வேண்டாம். சரியான மருத்துவரின் அணுகுமுறைதான் இதில் முக்கியம்.

Dr. வினோத் குணசேகரன்[6]
MBBS, MD (Paediatric), FIAP, FNB (Paediatric Haemato Oncology), Fellowship in Paediatric BMT (S’pore)
குழந்தைகளுக்கான ரத்த நோய் புற்றுநோய் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மருத்துவர்
மா காவேரி மருத்துவமனை, திருச்சி

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 •  Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801

Endnotes:
  1. அனீமியா: https://www.kauveryhospital.com/blog/family-and-general-medicine/anemia-causes-treatment-and-prevention/
  2. Iron-deficiency Anaemia in Children: https://www.kauveryhospital.com/blog/family-and-general-medicine/iron-deficiency-anaemia-in-children/
  3. Sickle cell anemia: https://www.kauveryhospital.com/blog/family-and-general-medicine/what-is-sickle-cell-disease/
  4. தலசீமியா(Thalassemia): https://www.youtube.com/watch?v=ZiPr4lYZTWo
  5. எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை என்றால் என்ன?: https://www.kauveryhospital.com/blog/tamil-articles/what-is-a-bone-marrow-transplant/
  6. Dr. வினோத் குணசேகரன்: https://www.kauveryhospital.com/doctors/trichy-cantonment/paediatrics/dr-vinod-gunasekaran/

Source URL: https://www.kauveryhospital.com/blog/tamil-articles/attention-parents-the-cause-and-solution-of-anemia-in-children/