மலச்சிக்கலானது ஒரு வயதுக்கு மேற்பட்ட எந்தக் குழந்தைக்கு வேண்டுமானாலும் வரலாம். குழந்தை 2-3 நாட்களுக்கு ஒருமுறை மலம் கழித்தால், அவர்களுக்கு மலச்சிக்கல் இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம். சில குழந்தைகள் மலம் கழிக்கும் போது, கஷ்டப்பட்டு வலியோடு அல்லது மலம் கழிக்கும்போது ரத்தம் வந்தால் அல்லது நின்றுகொண்டு மலம் கழித்தால், அந்தக் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம்.
மலச்சிக்கலில் 2 வகைகள் உண்டு.
ஒன்று Acute Constipation என்ற குறுகிய கால மலச்சிக்கல். மற்றொன்று Chronic Constipation என்ற நாள்பட்ட மலச்சிக்கல்.
Acute Constipation என்பது 4 வாரம் வரை தொடரும். சரியான உணவுப் பழக்கம் இல்லாமல், தண்ணீர் அருந்தாமல் இருந்தால் இது ஏற்படும். பொதுவாக அவர்களின் உணவு மாற்றத்தை சரிசெய்து, போதுமான அளவு தண்ணீர் பருகச் செய்தாலே இப்பிரச்னை சரியாகிவிடும்.
Chronic Constipation ஆனது 4 வாரத்துக்கு மேல் தொடரும். சில குழந்தைகளுக்கு சில வருடக்கணக்கில்கூட இருக்கும். இந்த வகை மலச்சிக்கல் உள்ளவர்கள் 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை மலம் கழிப்பார்கள். மலம் கழிக்கும்போது சிலர் வலியோடு போவார்கள். சில குழந்தைகள் மலம் கழிக்கும்போது உட்காராமல், எழுந்து நின்றுகொண்டே மலம் கழிக்க முயற்சி செய்வார்கள். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால், அந்தக் குழந்தைக்கு நாள்பட்ட மலச்சிக்கல் இருப்பதை அறிந்துகொள்ளலாம்.
இதற்கான காரணங்கள் மாறுபடும். பொதுவாக
60-70% குழந்தைகளுக்கு வரக்கூடிய இப்பிரச்னைக்கு மிகவும் முக்கியமான காரணம், சரியான உணவுப் பழக்கம் இல்லாததும், சரியான முறையில் குழந்தைகளை மலம் கழிக்கப் பழக்கப்படுத்தாததும்தான்.
குழந்தைக்கு 2 வயது ஆனாலே அவர்களை மலம் கழிக்க பழக்க வேண்டும். அதை ‘Potty Training’ என்போம். தினமும் இரண்டு வேளை, உணவுக்குப் பிறகு அவர்களை இந்தியன் டாய்லெட்டில் முறையாக உட்கார வைத்து இந்தப் பயிற்சியை அளித்தால், குழந்தைகள் மலம் கழிக்க பழகிக் கொள்வார்கள்.
சில குழந்தைகளுக்கு அதிக அளவு பால் கொடுக்கப்படும். சில குழந்தைகள் பிஸ்கட், பேக்கரி உணவுகளை அதிக அளவில் உட்கொள்வார்கள். இவற்றின் காரணமாகவும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகின்றன. அதனால், இதுபோன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு அதிக அளவில் தண்ணீர் மற்றும் பழங்கள் கொடுக்க வேண்டும். இவற்றைச் செய்தாலே குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படுவது அரிதாகிவிடும்.
மலச்சிக்கலைத் தீர்க்க சில மருந்துகள் இருக்கின்றன. இந்த மருந்துகளை சில வாரங்களிலிருந்து சில மாதங்கள் வரை கொடுக்க வேண்டியிருக்கும். அப்படி கொடுக்கும் போதுதான் Chronic Constipation சரியாகும். இந்த சிகிச்சையெல்லாம் செய்தும்கூட குழந்தைக்கு மலச்சிக்கல் சரியாகவில்லை என்றால், மலச்சிக்கலுக்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கின்றனவா என்பதை அவசியம் கவனிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு நாள்பட்ட மலச்சிக்கலினால் அடிக்கடி சிறுநீர் நோய்த்தொற்று வரலாம். மலம் கழிக்கும்போது, ஆசனாவாயில் கிழிதல் ஏற்பட்டு ரத்தம் கசியும். மூன்றாவதாக, சில குழந்தைகள் அவர்களே அறியாமல், உடையிலேயே மலம் கழிப்பார்கள். குறிப்பாக 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள், அவர்களையே அறியாமல், மலம் கழிக்கும்போது இந்த மாதிரி பிரச்னை இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.
சிலர் மலச்சிக்கலுக்கான சிகிச்சை ஆரம்பிக்கும்போது கொஞ்ச நாளைக்கு மருந்து கொடுப்பார்கள்; பிறகு மலச்சிக்கல் சரியான பின்னர் மருத்துவரிடம் கேட்காமல் அவர்களே நிறுத்தி விடுவார்கள். நிச்சயமாக அப்படி செய்யக்கூடாது. மலச்சிக்கலுக்கான சிகிச்சையை சில வாரங்களிலிருந்து சில மாதம் வரை கொடுக்க வேண்டியிருக்கும். அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து மருத்துவர் ஆலோசனையின்படி நிறுத்த வேண்டும்.
Dr. ராகேஷ் மனோகர் MBBS, MD (Paediatrics), Fellowship in Paediatric Gastroenterology, Hepatology & Nutrition குழந்தைகளுக்கான குடல் மற்றும் கல்லீரல் மருத்துவர் மா காவேரி மருத்துவமனை, திருச்சி
Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.
Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801