தாய்ப்பால் ஊட்டினால் மார்பகப் புற்றுநோயைத் தடுக்க முடியும்!

தாய்ப்பால் ஊட்டினால் மார்பகப் புற்றுநோயைத் தடுக்க முடியும்!
June 05 04:31 2024 by admin-blog-kh Print This Article

காரணம் உண்டா?

மார்பகப் புற்றுநோய் என்பது பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அதில் நிறைய வகைகள் உள்ளன. மார்பகப் புற்றுநோய்க்குக் குறிப்பிட்ட ஒரு காரணம் என்றும் ஏதுமில்லை. பல்வேறு காரணிகளால் மார்பகப் புற்றுநோய் ஏற்படக்கூடும். இவற்றில் முதன்மையான விஷயம் உடலில் உள்ள ஹார்மோன்கள். எல்லா பெண்களுக்கும் ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் என்ற இரண்டு ஹார்மோன்கள் உள்ளன. இந்த இரண்டு ஹார்மோன்கள்தாம் பெண்களின் வளர்ச்சி, மார்பகங்களின் வளர்ச்சி போன்றவற்றைத் தீர்மானிக்கின்றன. 10 அல்லது 11 வயது என மிக இளம் வயதிலேயே பருவம் அடைவது, 50 வயதைத் தாண்டியே மெனோபாஸ் பருவத்தை எட்டுவது போன்ற காரணிகள் இருந்தால், அதிக அளவு ஈஸ்ட்ரோஜன் சுரப்பு காரணமாக மார்பகப் புற்றுநோய்க்கான அபாயம் அதிகமாகலாம். பொதுவாக 45 முதல் 50 வயதுக்குள் இயல்பாக மெனோபாஸ் ஏற்படும்போது இந்த அபாயத்துக்கான வாய்ப்பு குறைவு.

தாய்ப்பால் தரும் பாதுகாப்பு

24 வயதிலேயே குழந்தைப் பிறப்பு இருந்தால், மார்பக கேன்சர் வராமல் இருக்க அதுவே பாதுகாப்பு வளையமாக அமைகிறது. 30 வயதுக்கு மேல் குழந்தைப் பிறப்பு ஏற்பட்டால், அந்தப் பெண்களுக்கு கேன்சர் வரக்கூடிய சாத்தியங்கள் ஏற்படக்கூடும். எவ்வளவு காலத்துக்குக் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கிறார்கள் என்பதும் பாதுகாப்புக்கான முக்கியமான காரணி. ஒன்று முதல் இரண்டு வருடம் வரை பாலூட்டும் தாய்களுக்கு கேன்சர் வாராமல் இருப்பதற்கான தடுப்பு ஏற்படுகிறது. குழந்தை இல்லாமல் இருப்பதும், தாய்ப்பால் தராமல் இருப்பதும் கேன்சர் பாதிப்புக்கான சாத்தியங்களை அதிகமாக்குகின்றன.

பரிசோதனை செய்வது அவசியம்

யாரேனும் ஒரு பெண்ணுக்கு கேன்சர் இருந்தாலும், அந்தக் குடும்பத்தில் உள்ள மற்ற பெண்களும் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். மேலே கூறிய பாதிப்புக்கான காரணிகள் ஏதேனும் இருந்தால் அதை முன்கூட்டியே பரிசோதனை செய்து கண்டறிவது எளிது. பருமனாக இருந்தாலும் புற்று நோய் பாதிப்பதற்கான சாத்தியங்கள் உண்டு.உயரத்துக்குத் தகுந்த எடை (Body Mass Index) அதிகமாக இருந்தாலும் மார்பகப் புற்றுநோய் வரலாம். வைட்டமின் டி அளவு மிகக் குறைவாக இருந்தாலும் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான ஒரு காரணியாக அமையலாம்.

வருமுன் காப்பது எப்படி?

புகைபிடித்தலும் மதுப்பழக்கமும் பொதுவாகவே புற்றுநோய்க்கான காரணிகளாகும். புற்றுநோய் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக, உடல் பருமனைக் குறைக்க உடற்பயிற்சி செய்வது, புகைபிடித்தலையும், மதுப்பழக்கத்தையும் படிப்படியாகக் குறைத்துக்கொள்ளவும் வேண்டும். இப்போது நாம் குடிக்கும் பாக்கெட் பால்களில் ஸ்டீராய்டுகள் குறிப்பிட்ட அளவைவிட அதிகமாகவே இருக்கிறது. இதுகூட கேன்சர் வருவதற்கான ஒரு காரணியே.

பரிசோதனைகள் என்னென்ன?

மாதவிடாய், மோனோபாஸ், குழந்தைப் பேறு போன்றவற்றை நாம் மாற்ற முடியாது. ஆனால், இந்தச் சிக்கல்கள் இருந்தாலோ ஸ்கீரினீங் எடுத்துக்கொள்வது 40 அவசியம். வயதுக்கு மேற்பட்டவர்கள் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மேமோகிராம் எடுத்துக்கொள்ள வேண்டும். மாதவிடாய் பிரச்னைகள் அதீதமாக இருந்தால் 25 வயதிலிருந்து 40 வயதுக்கு உட்பட்டவர்கள் மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டும் மேமேகிராம் டெஸ்ட் எடுக்க வேண்டும். சிலருக்கு அல்ட்ரா சவுண்ட் அல்லது எம்ஆர்ஐ போன்ற சோதனைகள் தேவைப்படலாம்.

மேமோகிராம் சோதனைக்கு முன் மார்பகத்தில் ஏதேனும் கட்டிகள் தென்படுகிறதா என்று மருத்துவர் சோதிப்பார். அதன் பிறகு இதர பரிசோதனைகளை மேற்கொள்வார்கள். பரிசோதனை முடிவில் கட்டிகளுக்கான அறிகுறிகள் தெரியவந்தால் உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, கேன்சர் வராமல் தடுத்திட முடியும்.

மரபணுக்களால் வரும் பிரச்னை

குடும்ப மரபு வழியாக மார்பகப் புற்றுநோய் வருவதற்கு இரண்டு முக்கிய மரபணுக்கள் (BRCA1, BRCA2) காரணிகளாக இருக்கின்றன. இதில் ஏதேனும் ஒன்றில் குறிப்பிட்ட அளவு மாறுதல் இருந்தால் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான அபாயமும் அதிகம். இதையும் கண்டறிந்தால் அறுவை முன்கூட்டியே கண்டறிந்தால் சிகிச்சை மற்றும் தகுந்த மருந்துகளால் மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கலாம். மரபணுவில் மாறுதல்கள் ஏற்படவில்லையென்றால் முன்கூட்டியே அறுவைசிகிச்சை செய்ய வேண்டியதில்லை.

சிகிச்சை வாய்ப்புகள்

முன்கூட்டியே ஸ்கிரினீங் சோதனை செய்யும்போது அசாதாரண வளர்ச்சி உள்ள செல்களை கண்டறிந்து அதை மட்டும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விடலாம். இதுதான் முதல்கட்ட நடவடிக்கை. இதனை ஸ்டேஜ் 0 என்று சொல்வோம். ஆரம்பத்திலேயே அசாதாரண செல்களை கண்டறிவதன் மூலம் மார்பை முழுமையாக அகற்ற வேண்டிய அவசியமில்லை. ஸ்டேஜ் 1 மற்றும் 2 நிலை யிலிருந்தால் உரிய சிகிச்சை மூலம் 20 வருடங்கள்கூட எந்தப் பிரச்னையும் இல்லாமல் பார்த்துக்கொள்ளலாம். ஸ்டேஜ் 3 நிலையில் வருபவர்களுக்கு சிகிச்சையளித்து பாதிக்கப்பட்ட செல்களை வெளியே எடுத்து விடலாம். ஆனால், ஐந்து அல்லது பத்து வருடத்தில் மீண்டும் அதே பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

ஸ்டேஜ் 4 என்பது மிகவும் முற்றிய நிலை. அசாதாரண செல்கள் மற்ற இடங்களும் பரவிய நிலை. இந்த நிலையில் வருபவர்களுக்கு அறுவைசிகிச்சை, கீமோதெரபி, ரேடியேஷன் சிகிச்சைகள் உண்டு. இப்போது டார்கெட்டட் தெரபி, இம்யூனோ தெரபி என்று புதிய சிகிச்சை முறைகளும் உள்ளன.

பொதுவாக மார்பகப் புற்றுநோயில் நிறைய வகைகள் உள்ளன. எந்த வகையான பாதிப்பு என்று கண்டறிந்து அதற்குத் தகுந்தாற்போல் சிகிச்சையளிப்பதே டார்கெட்டட் தெரபி.

ஸ்டேஜ் 4 யில் இருந்தாலும் நிறையச் சிகிச்சை முறைகள் உள்ளன. இந்த சிகிச்சைகளின் மூலம் முழுமையாக வெளியே வர முடியாவிட்டாலும் இரண்டு முதல் நான்கு வருடங்கள் வரை எந்த பிரச்னையும் இல்லாமல் இருக்க முடியும்.

பொதுவாக, மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டால் முழு மார்பகத்தையும் அகற்றி விடுவார்கள் என்கிற எண்ணம் பலருக்கு இருக்கிறது. இப்போது நவீன சிகிச்சை முறையில் பாதிப்புக்குள்ளான கட்டி மட்டுமே அகற்றப்படுகிறது.

கேன்சர் பற்றிப் பயப்பட வேண்டாம்… அவ்வப்போது சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள். ஏதேனும் வலியோ, கட்டியோ தோன்றினால் மருத்துவரின் ஆலோசனைப்படி ஸ்கீரினீங் செய்துகொள்ளுங்கள். அப்படிச் செய்தால் வருமுன் காப்பது சாத்தியமே!

அக்குள் வியர்வை எதிர்ப்பு மருந்துகள் அல்லது டியோடரண்டுகளின் பயன்பாடு காரணமாக மார்பகப் புற்றுநோய் ஏற்படும் என்பதற்கான எந்த உறுதியான ஆதாரமும் இல்லை என்று அமெரிக்காவின் நேஷனல் கேன்சர் இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டாக்டர் கிர்த்தி கேத்தரீன் கபீர் MBBS, MS(Gen.Surg), Fellowship Breast(Oncoplasty) Surgery (RCS) மார்பக ஆன்கோபிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் காவேரி மருத்துவமனை, சென்னை

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 •  Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801

  Categories:
write a comment

Comments

No Comments Yet!

You can be the one to start a conversation.

Add a Comment

Your data will be safe! Your e-mail address will not be published. Other data you enter will not be shared with any third party.
All * fields are required.