பயம் வேண்டாம் இனி! வரப்பிரசாதமாக வந்துவிட்டது வலியில்லாத பிரசவம்!

பயம் வேண்டாம் இனி! வரப்பிரசாதமாக வந்துவிட்டது வலியில்லாத பிரசவம்!
December 26 04:16 2024 Print This Article

ஒரு மனிதனால் அதிகபட்சமாகத் தாங்கக்கூடிய வலியின் அளவு 45 டெல் (del’ measured by Dolorimeter). ஆனால், ஒவ்வொரு பெண்ணும் தன் பிரசவத்தின்போது, 57 டெல் வலியைக் கடக்கிறாள். அதாவது ஒரே நேரத்தில் 20 எலும்புகள் உடையும் வலி எப்படியோ அப்படி…

அதனால் முதன்முதலாகக் கருத்தரிக்கும் பெண்கள் எல்லோருக்குமே பிரசவ வலி குறித்த பயம் ஏற்படுவது இயல்புதான். இனியும் இந்த வலி தேவையா?

நிச்சயமாக இல்லை. பிரசவ வலி என்பது பெண் அனுபவித்தே ஆக வேண்டிய ஒன்று என்கிற எண்ணம் இப்போது மாறி வருகிறது. அதனால், பிரசவத்தை ஒரு சுகமான மகிழ்ச்சியான நிகழ்வாக ரசித்து குழந்தையை பெற்றெடுப்பதற்காகவே நவீன மருத்துவ முறையில் ‘லேபர் எபிடூரல்'(Labour Epidural) என்கிற நடைமுறையை செயல்படுத்தி வருகிறோம்.

1. வலியில்லா பிரசவ முறை (Painless labour) என்றால் என்ன? 

பிரசவ வலி ஆரம்பித்தவுடன் கர்ப்பப்பை வாய் திறக்க ஆரம்பிக்கும். அது 1-2 செ.மீ. அளவு திறந்தவுடன் வலியின் அளவும் அதிகரிக்கும். அப்போது எபிட்யூரல் (Epidural) என்னும் ஊசி முதுகில் போடப்படுகிறது. அது வலியை உணரும் நரம்புகளை மரக்கச் செய்துவிடும். அதே நேரத்தில், அது வலியை உண்டு பண்ணும் நரம்புகளை நிரந்தரமாகப் பாதிக்காது. இந்த ஊசியால் வேறு எந்தப் பிரச்னையும் இல்லை.

2. வலியில்லாமல் எப்படி குழந்தை பிறக்கும்? 

எபிடூரல் ஊசி காரணமாக வலி மட்டும்தான் மரத்துவிடும். ஆனால் கர்ப்பப்பை வாய் முழுவதுமாக திறந்தவுடன் கர்ப்பிணியை நன்கு முக்கும்படி மருத்துவர் கூறுவார். அப்போது அவர்களுக்கு சுகப்பிரசவம் ஆவது எளிதாகும்.

3. இந்த ஊசி போடுவதால் எனக்கு சுகப்பிரசவம் ஆகாமல் சிசேரியன் ஆகி விடுமா என்று பயமாக இருக்கிறது டாக்டர்? 

ஒரு பெண்ணுக்கு சுகப்பிரசவம் ஆகும் வாய்ப்பு என்பது குழந்தையின் அமைப்பையும் அவர்களின் இடுப்பு எலும்பின் தன்மையையும் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. இந்த ஊசி போடுவதால் சிசேரியன் ஆகிவிடும் என்று பயப்படத் தேவை இல்லை. இந்த ஊசி போட்டாலும், போடாவிட்டாலும் சுகப் பிரசவம் ஆகும் வாய்ப்பும் சிசேரியன் ஆகும் வாய்ப்பும் ஒன்றுதான். அதில் எந்த மாற்றமும் இல்லை.

4. இதனால் எனக்கு முதுகு வலி வரும் சாத்தியம் இருக்கிறதா டாக்டர்? 

நிச்சயமாக இந்த ஊசி காரணமாக முதுகு வலி வருவதற்கான வாய்ப்பே இல்லை. பேறுகாலத்தில் ஏற்படும் சிலவித முதுகுத்தண்டு வட மாற்றத்தாலோ, சரியான உடற்பயிற்சி இல்லாத காரணத்தாலோ மட்டுமே இயற்கையாக முதுகு வலி வர வாய்ப்பு உள்ளது. இதைத் தவிர்க்க பிரசவத்துக்குப் பின், மருத்துவர் அறிவுறுத்திய பேறுகாலப் பயிற்சிகளை அவசியம் செய்ய வேண்டும். தொடர்ந்து அந்த பயிற்சிகளை செய்து தசை மற்றும் நார்களை இறுக்கி வலிமை பெறச் செய்வதால் முதுகு வலி ஏற்படாமல் தடுக்கலாம்.

5. வலியோடு பெற்றால்தான் குழந்தையின் அருமை தெரியும் என்று என் மாமியார் கூறுகிறாரே, டாக்டர்? 

மருத்துவ அறிவியல் வளர்ந்து வருவதால், இதுபோன்ற நவீன சிகிச்சை முறைகள் நமக்குக் கிடைத்துள்ளன. இது ஒரு வரப்பிரசாதமாகும். இது குறித்து நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும். பிரசவ வலி தெரியாததால் குழந்தையின் அருமை தாய்க்குத் தெரியாமல் போய்விடும் என்பது உண்மையல்ல.

6. இந்த ஊசியினால் வேறு ஏதாவது நன்மைகள் உள்ளனவா, டாக்டர்? 

* வலி தெரியாது என்பது முதல் மிக முக்கியமான நன்மை.

* ஒரு சிலருக்கு வலி காரணமாக அதிக அளவு மன அழுத்தம் ஏற்படுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இந்த ஊசி அதைத் தடுக்கிறது.

* வலியினால் காரணமாக ஏற்படும் அதிக மன அழுத்தத்தினால் கர்ப்பப்பை வாய் இறுக்கமாகிவிடும். இந்த ஊசி செலுத்தப்பட்ட பின், மனம் ரிலாக்ஸாக அதாவது பதற்றம் இல்லாமல் இருப்பதால், கர்ப்பப்பை வாய் இலகுவாகத் திறக்கிறது.

* வலியில்லாமல் இருப்பதால் தாயின் நாடித்துடிப்பும் மூச்சும் சீராக இருக்கும். அதனால், குழந்தைக்குச் செல்லும் ரத்த ஓட்டமும் நன்றாக இருக்கும்.

7. இந்த ஊசிக்குப் பின் சுகப் பிரசவம் ஆகாமல் சிசேரியன் செய்ய நேர்ந்தால், மீண்டும் முதுகில் ஊசி போடுவீர்களா? 

முதலில் போட்ட எபிடூரல் வழியாகவே சிசேரியன் செய்வதற்கான மரப்பு மருந்தை செலுத்தி அறுவைசிகிச்சை செய்து விடுவோம். அதனால் மீண்டும் ஊசி செலுத்த வேண்டிய தேவை இல்லை.

               

பிரசவ வலி தெரியாததால் குழந்தையின் அருமை தாய்க்குத் தெரியாமல் போய்விடும் என்பது உண்மையல்ல!

 

Dr. என். சுசித்ரா MBBS, DGO
HOD மற்றும் மூத்த ஆலோசகர், மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல்
காவேரி மருத்துவமனை, திருச்சி – கண்டோன்மென்ட்

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 •  Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801