by admin-blog-kh | June 27, 2024 5:45 am
மனித உடலின் முக்கிய அங்கமான செல்களின் கட்டுப்படுத்த முடியாத வளர்ச்சிதான் புற்றுநோய். பொதுவாக அபரிமிதமாக வளர்ச்சியடையும் செல்களை டியூமர்(Tumor) என்றும் சொல்கிறோம். இந்த டியூமரில் இரண்டு வகைகள் உள்ளன. Benign என்று குறிப்பிடப்படும் டியூமர் ஆபத்தில்லாதது. இதை புற்றுநோய் என்று சொல்ல முடியாது. Malignant வகையாக அடையாளம் காணப்பட்டால் அதுவே புற்றுநோயாகும்.
Malignant Tumor வகை செல்களானது ஒரு குறிப்பிட்ட இடத்தை மட்டுமே ஆக்கிரமித்து வளரக் கூடியது அல்ல. ரத்தம் மற்றும் நிணநீர் வழியே பயணித்து உடலின் மற்ற பாகங்களையும் தாக்கும் ஆபத்து கொண்டவை. இதை Metastasis நிலை என்று மருத்துவத்தில் சொல்வோம்.
இந்த புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. இதனை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். லுக்கேமியா என்ற ரத்தப்புற்றுநோயும், லிம்போமா என்ற நிணநீர் புற்றுநோயும் Hematological வகை புற்றுநோய்களாகும். இவற்றைத் திரவ வடிவ புற்றுநோய் என்றும் சொல்லலாம்.
இதுதவிர நாம் அடிக்கடி கேள்விப்படும் மார்பகப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், குடல் புற்றுநோய், ப்ராஸ்ட்டேட் புற்றுநோய் போன்றவை எலும்புகளிலும் தசைகளிலும் உடலின் உறுப்புகளிலும் உருவாகக் கூடியவை. இதனை Solid malignancies வகை புற்றுநோய்கள் என்று சொல்வோம்.
புற்றுநோய் செல்களை குறி வைத்து அழிப்பதற்காக வழங்கப்படுவதுதான் ரேடியேஷன் தெரபி(Radiation therapy). சிகிச்சையென்பதுடன் உடலின் கட்டமைப்பு சிதையாமலும் ரேடியேஷன் தெரபியால் பாதுகாக்கப்படும்.
புற்றுநோய் செல்களானது உடலில் இருக்கும் மரபணுவின் மூலக்கூறான DNAவை அழிக்கிறது. இந்த டிஎன்.ஏ-வைக் குறிவைத்து செயல்படும் ரேடியோ தெரபியின் மூலம் புற்றுநோய் செல்கள் அழியும்[1]. அதே நேரத்தில் ஆரோக்கியமான செல்கள் மீண்டு விடும். புற்றுநோய் பரவுவதும் தடுக்கப்படும்.
ரேடியேஷன் தெரபியில் External radiation therapy மற்றும் Brachytherapy என்று இரண்டு விதமான செயல்முறைகள் இருக்கின்றன. External radiation therapy என்பது வெப்பக்கதிர்களின் மூலம் அளிக்கப்படும் வலியில்லாத சிகிச்சை. வெறும் கண்களால் இதனைப் பார்க்க முடியாது. புற்றுநோய் பாதித்துள்ள குறிப்பிட்ட பகுதிக்கு அளிக்கப்படும் சிகிச்சை இது. புற்றுநோய்க்காக அதிகம் வழங்கப்படும் சிகிச்சை இதுதான்.
Brachytherapy என்பது புற்றுநோய் பாதிக்கப்பட்டுள்ள உறுப்புக்கே நேரடியாகக் குறி வைத்து அளிக்கப்படும் கதிர்வீச்சு சிகிச்சையாகும். Brachytherapy அரிதான சூழலிலேயே வழங்கப்படும். உதாரணமாக, தலை மற்றும் கழுத்து புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய் போன்றவற்றுக்கு இந்த சிகிச்சை வழங்கப்படும்.
எனவே, ரேடியேஷன் தெரபியின் முக்கிய நோக்கம் புற்றுநோய் செல்களை அழிக்க வேண்டும். ஆரோக்கியமாக இருக்கும் திசுக்களைப் பாதுகாக்க வேண்டும்.
ஒரு மருத்துவராக புற்றுநோய் சிகிச்சையில் 35 வருடங்களைக் கடந்திருக்கிறேன். இதன் பல்வேறு பரிணாமங்களைப் பார்த்தும் வந்திருக்கிறேன். தொடக்க காலத்தில் கோபால்ட் (Cobalt) எந்திரம் மூலம் வழங்கப்படும் ரேடியோ தெரபியை அளிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். இதன் அடுத்தகட்டமாக புற்றுநோய் செல்களை துல்லியமாகத் தாக்கி அழிக்கிற Linear accelerator நடைமுறை வந்தது. தற்போதைய மில்லினிய யுகத்தில் அது 3டி தொழில்நுட்ப முறையில் Intensity-
modulated radiation therapy ஆகப் பரிணாமம் அடைந்துள்ளது. தற்போதைய நவீன கதிர்வீச்சு சிகிச்சையின்மூலம் புற்றுநோய் பாதித்த இடம் அல்லது உறுப்பின் அமைப்பு சிதையாமலேயே துல்லியமாக அளிக்க முடியும்.
இதற்கு முன்பு வாரத்துக்கு 5 முறை ரேடியேஷன் அளிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. தற்போது ஒரு நாள் ரேடியேஷன் செய்தாலே போதுமானது என்ற முன்னேற்றம் வந்துள்ளது. கதிர்வீச்சினால் வரும் பக்கவிளைவுகளும் குறைந்துள்ளது.
மனிதர்கள் எதிர்கொள்ளும் மற்ற நோய்களுக்கும் புற்றுநோய்க்கும் ஒரு பிரமாண்ட வித்தியாசம் உள்ளது. ஏனைய நோய்கள் பலவும் வந்த பிறகும் சிகிச்சையளித்து குணப்படுத்தும் வாய்ப்புகள் கொண்டவை. ஆனால், புற்றுநோய் சிகிச்சையில் ஆரம்ப நிலை கண்டறிதல் மிகவும் முக்கியமானது. எத்தனை விரைவாகக் கண்டறிகிறோமோ அத்தனை பலன் தரும் சிகிச்சையையும் வழங்க முடியும். புற்றுநோயைப் பொறுத்தவரை சிறப்பான சிகிச்சைக்கும் குணமடைதலுக்கும் Early diagnosis அவசியமானது. மிக கடினமான சிகிச்சைகளுக்கும், பக்க விளைவுகளுக்கும் ஆளாகாமலேயே தவிர்க்க முடியும். பொருளாதார ரீதியிலும் பெரிய இழப்பைக் கட்டுப்படுத்த முடியும்.
ரேடியேஷன்,அறுவை சிகிச்சை, கீமோதெரபி போன்றவை புற்றுநோய்களுக்கான சிகிச்சையாக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகள் பொதுவானவை அல்ல.
புற்றுநோய் எந்த இடத்தில் ஏற்பட்டுள்ளது, என்ன வகையான புற்றுநோய், எந்த நிலையில் உள்ளது, நோயாளியின் மனோநிலை, வயது, பாலினம், பக்கவிளைவின் சாத்தியம், வாழ்க்கை முறை போன்றவற்றின் அடிப்படையிலேயே சிகிச்சை வழங்கப்படும். மேலும் இதில் பல்துறை மருத்துவர்களின் கூட்டு பங்களிப்பும் அடங்கியுள்ளது.
Tumour Board[2]
எந்த பக்கவிளைவுமில்லாமல் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க முடியாது. பொதுவாகவே, ரேடியோ தெரபி பக்கவிளைவுகள் கொண்டது. முடி உதிர்வது, சோர்வு, வாந்தி, வயிற்றுப்போக்கு, சருமத்தில் மாற்றம் போன்றவை உண்டாகலாம். ஆனால், அவையெல்லாம் தற்காலிகமானவையே. நோயாளி அந்த பக்கவிளைவுகளிலிருந்து மீண்டு தன் இயல்பான வாழ்க்கை திரும்ப முடியும்.
புற்றுநோய் சிகிச்சைகள் வளர்ச்சியடைந்திருந்தாலும், சிகிச்சைகள் நவீனமடைந்திருந்தாலும் இத்துறையில் பணிபுரியும் அனைவருக்கும் தொழில்நுட்ப அறிவும், கற்கும் வாய்ப்பும் இன்னும் முழுமையாகப் போய்ச் சேரவில்லை. எனவே, புற்றுநோய் மருத்துவர்களுக்கு மட்டுமின்றி புற்றுநோய் சிகிச்சை சார்ந்து பணிபுரிகிறவர்களுக்கு Good training programme வழங்க வேண்டிய அவசியம் உள்ளது.
புற்றுநோய் சிகிச்சைக்கான செலவுகள் எல்லா தரப்பினராலும் சமாளிக்கக் கூடியதாக இல்லை. குறிப்பாக தனிமனித புற்றுநோய்க்கு ஏற்ப அளிக்கப்படும் Customized treatment எல்லோருக்குமானதாக இல்லை. இது பெரிய சவாலாக உள்ளது.
இந்தியா மிகப்பெரும் மக்கள் தொகை கொண்ட நாடு. நகர்ப்புறங்கள், கிராமங்கள், மலைப்பிரதேசங்கள் என பல தரப்பட்ட சூழலில் பல தரப்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதுபோன்ற எளிய மனிதர்களுக்கு சிகிச்சை கிடைப்பதில் சவால்கள் உள்ளது.
நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது தொடர்பான தரவுகள்(Data) பதிவு செய்யப்படுவதிலும், பாதுகாக்கப்படுவதிலும் கவனம் தேவை. இது எதிர்காலத்துக்கு உதவும்.
பொதுமக்களிடம் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். குறிப்பாக, நோயாளிகளுக்கு என்ன வகையான புற்றுநோய் ஏற்பட்டுள்ளது, அளிக்கப்படும் சிகிச்சை என்ன, பக்கவிளைவுகள் போன்ற விஷயங்களை தெளிவுபடுத்துவது அவசியம்.
* புற்றுநோய் என்றவுடனே ஓர் அசாதாரணமான சூழல் நிலவும் நோயாளியின் மனநிலையில் நேர்மறையான எண்ணங்களைக் கொண்டு வர வேண்டும். இது மருத்துவர்களின் முதன்மையான பணி. உளவியல் ரீதியிலான ஆலோசனைகள் மிகவும் அவசியம்.
* பொருளாதாரரீதியாக ஆதரவு அளிப்பதோடு மட்டுமே குடும்பத்தினரின் பங்களிப்பு முடிந்துவிடுவதில்லை. உணர்வுரீதியான ஆதரவும் முக்கியமானது.
* வரும் முன்னர் காப்போம் என்கிற பழமொழி புற்றுநோய்க்கு நூறு சதவிகிதம் பொருந்தும். புகைப்பழக்கம், மது போன்றவற்றைத் தவிர்ப்பது, ஆரோக்கியமான உணவுப்பழக்கங்களைப் பின்பற்றுவது, உடற்பயிற்சிகள் செய்வது, சீரான உடல் எடையைப் பராமரிப்பது, பாதுகாப்பான பாலியல் உறவு போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் முக்கியம்.
* புற்றுநோயை உண்டாக்கும் புற ஊதாக்கதிர்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி போன்ற கார்சினோஜெனிக் (Carcinogenic) சுற்றுச்சூழலிலிருந்து தற்காத்துக் கொள்வதும் அவசியம்.
* மனமும் உடலும் ஒன்றோடு ஒன்று இயைந்து செயல்படுபவை என்பதால் யோகா, தியானம் போன்றவை ஆரோக்கியமான மனநிலையைப் பராமரிக்க உதவும்.
* போதுமான இடைவெளியில் உரிய பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும். குறிப்பாக மரபியல் ரீதியாக புற்றுநோய் வரலாறு இருக்கும்பட்சத்தில் பரிசோதனைகள் கட்டாயம்.
* நோய் கண்டறிதலிலும், சிகிச்சையளிப்பதிலும், பக்கவிளைவுகளைக் குறைப்பதிலும் சிறப்பான முன்னேற்றங்கள் ஏற்படும்.
* அதிக கதிர்வீச்சு கொண்ட, விநாடிப்பொழுதில் சிகிச்சையளிக்கும் Flash radio therapy, Flash brachytherapy எதிர்காலத்தில் சிறப்பான கவனம் பெறும். இத்துடன் இம்யூனோதெரபி போன்ற மற்ற சிகிச்சைகளையும் சேர்த்து வழங்க முடியும்.
* சிடி ஸ்கேன், பெட் ஸ்கேன் நோய் கண்டறியும் பரிசோதனைகள் இன்னும் துல்லியமாகும்.
* செயற்கை நுண்ணறிவு என்கிற Artificial intelligence அனைத்துத் துறைகளிலும் அசாதாரண மாற்றங்களை உண்டாக்கி வருகிறது. புற்றுநோய் சிகிச்சையிலும் பல முன்னேற்றங்கள் செயற்கை நுண்ணறிவால் ஏற்படும்.
* உணர்வுரீதியிலான ஆதரவு முதலில் முக்கியம். புற்றுநோய் பற்றி கேள்விப்படும் செய்திகளை எல்லாம் நம்பக் கூடாது. தகவல்கள் கிடைக்கும் இடங்களின் நம்பகத்தன்மையை ஆராய வேண்டும். மருத்துவத்துறை வல்லுநர்களின் கருத்துகளையும், சிகிச்சையளிக்கும் மருத்துவர்களின் அறிவுரைகளையும் மட்டுமே நம்ப வேண்டும்.
* பாசிட்டிவான மனிதர்களுடன் பழக வேண்டும். என்ன பிரச்னையை எதிர்கொள்கிறோம் என்பதை மனம் விட்டுப் பேச வேண்டும்.
* நோயாளியின் இறப்பு உறுதியானால் கூட நேர்மறையான சூழலும், அன்பான உறவுகளும் வாழ்கிற நாட்களை நீடிக்கும். நோயாளியின் வாழ்க்கைத்தரத்தையும் மேம்படுத்தும்.
அறுவை சிகிச்சை, கீமோதெரபி, ரேடியேஷன் தெரபி வழங்குவதற்கு ஒரு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கின்றன. ஆனால், அதனை சூழ்நிலைகளுக்கேற்றவாறு பயன்படுத்த வேண்டியது அவசியம் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைப் பகிர்கிறேன்.
சிகிச்சைக்காக வந்த ஒர் இளைஞருக்கு எலும்புக்குள்ளிருக்கும் குருத்தெலும்பில் புற்றுநோய் ஏற்பட்டிருந்தது. ரேடியோ தெரபியின் மூலம் சிகிச்சையளிப்பது பலன் தராது என்பது புரிந்தது. ‘என் மனைவியும் குழந்தைகளும் முக்கியம். அவர்களை நான் இழக்க முடியாது. என்னைக் காப்பாற்றுங்கள்’ என்றார். எனவே, அறுவை சிகிச்சை செய்து, அதன் பிறகு ரேடியேஷன் தெரபி, கீமோதெரெபி வழங்கினோம். 6 வருடங்கள் தொடர் சிகிச்சை மற்றும் கண்காணிப்புக்கு பிறகு அந்த இளைஞர் குணமடைந்தார். இதுபோல, பல சம்பவங்கள் இருக்கின்றன. எனவே, சூழ்நிலைக்கேற்றவாறு விதிகளை மாற்ற வேண்டும் என்பதும் புற்றுநோய் சிகிச்சையில் அவசியம்.
கீமோதெரபி மருந்தால் பக்கவிளைவுகள் இருந்தாலும், புற்று நோயிலிருந்து ஒருவரைக் காப்பாற்றவும், புற்றுநோய் வந்து அறுவை சிகிச்சை முடிந்து அவர்களை நீண்ட நாட்கள் வாழவைக்கவும், கீமோதெரபி தவிர வேறு சிகிச்சை முறைகளே இல்லை என்பதுதான் உண்மை. எனவேதான், Oncologists எனும் கீமோதெரபி கொடுக்கும் மருத்துவர்கள், ஒரு மனநல மருத்துவர் உதவியுடன்தான் கீமோதெரபி கொடுப்பார்கள். அவர் நமக்கு கீமோதெரபி தொடர்பாக, இதன் நன்மைகளையும் பக்க விளைவுகளையும் அவற்றால் நாம் எப்படிப் புற்றுநோயில் இருந்து மீளப்போகிறோம் என்றும் தெளிவாகப் பேசுவார்.
கீமோதெரபி மருந்துகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. அதனால்தான் இதனை பல நாட்கள் இடைவெளி விட்டுக் கொடுப்பார்கள். ஏனெனில், இடையில் சாதாரண செல்கள் நன்றாகச் செயல்பட சில நாட்கள் தேவைப்படும். இதில் உள்ள முக்கிய விஷயம் என்னவென்றால், இரு வேறு நபர்களுக்கு ஒரே வகையான புற்றுநோய், அதாவது நுரையீரல் புற்று நோய் இருக்கலாம். ஆனால், இருவருக்கும் ஒரே வகையான கீமோ தெரபி இருக்காது. ஒவ்வொருவருக்கும் அவரின் தன்மை பொறுத்துப் புற்றுநோய் சிகிச்சை வேறுபடும். ஒரேவகை புற்றுநோய் எத்தனை பேருக்கு வந்தாலும் ஒவ்வொருவருக்கும் அவரவர் தன்மை பொருத்து சிகிச்சை தன்மை வேறுபடும். இரண்டு புற்றுநோய்களும் ஒரே மாதிரியானவை அல்ல. ஒவ்வொரு தனிப்பட்ட புற்றுநோய்க்கும் வெவ்வேறு குணாதிசயங்கள் உள்ளன. ஒரே வகைப் புற்றுநோயும்கூட அவற்றின் தன்மைகள் பெரியதாகவோ சிறியதாகவோ இருக்கலாம்.
Chemotherapy For Cancer: What it is, how it works, and chemo side effects[3]
கதிர்வீச்சு சிகிச்சையானது புற்றுநோய் செல்களைக் கொல்லுவதற்கு எக்ஸ்-கதிர்கள் அல்லது புரோட்டான்கள் போன்ற உயர் ஆற்றல் கொண்ட ஆற்றல் கற்றைகளைப் பயன்படுத்தும் சிகிச்சை. இந்தக் கதிர்வீச்சு சிகிச்சையானது உடலுக்கு வெளியே உள்ள ஓர் இயந்திரத்திலிருந்து (வெளிப்புற கற்றை கதிர்வீச்சு) வரலாம் அல்லது அதனை உடலுக்குள்ளேயே வைத்தும் சிகிச்சை தருவார்கள். இதனை பிராச்சிதெரபி (brachytherapy) என்று அழைக்கின்றனர்.
எலும்பு மஜ்ஜை[4] என்பது நம் எலும்புகளுக்குள் உள்ள பொருள். முழங்கால், முழங்கை போன்ற எலும்பின் இணைப்பு இடங்களில் இது உள்ளது. ரத்த ஸ்டெம் செல்களிலிருந்து ரத்த அணுக்களை உருவாக்குகிறது. இந்தச் சிகிச்சை எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை, ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த எலும்பு மஜ்ஜையை நன்கொடையாளரிடமிருந்து எடுத்தம் பயன்படுத்தப்படலாம்.
இந்தச் சிகிச்சையானது புற்றுநோய் செல்களை வெப்பப்படுத்த மின் ஆற்றலைப் பயன்படுத்துகிறது. இதனால் அவை இறக்கின்றன. கதிரியக்க அதிர்வெண் நீக்கத்தின் போது, மருத்துவர் ஒரு மெல்லிய ஊசியைத் தோல் வழியாக அல்லது ஒரு கீறல் வழியாகப் புற்றுநோய் திசுக்களில் செலுத்துகிறார். உயர் அதிர்வெண் ஆற்றல் ஊசி வழியாகச் செல்கிறது. சுற்றியுள்ள திசுக்களை வெப்பமாக்குகிறது, அருகிலுள்ள செல்களை அழிக்கிறது.
எக்ஸ்ரே கதிர்வீச்சு சிகிச்சையுடன் ஒப்பிடுகையில், புரோட்டான் சிகிச்சை பல நன்மைகளைக் கொண்டுள்ளது. இது திசுக்களுக்கு கதிர்வீச்சு சேதத்தின் குறைந்த ஆபத்து. கட்டிக்கு அதிக கதிர்வீச்சு அளவு, அனைத்துக் கட்டி செல்கள் அழிக்கப்படுவதற்கான சிறந்த வாய்ப்பு.
உயிரியல் சிகிச்சை என்றும் அறியப்படும் இம்யூனோதெரபி என்றும் அறியப்படும் இந்தச் சிகிச்சை, புற்றுநோயை எதிர்த்துப் போராட, உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பயன்படுத்துகிறது. புற்றுநோயானது நம் உடலில் கட்டுப்படாமல் உயிர்வாழ முடியும். ஏனெனில் நோயெதிர்ப்பு அமைப்பு அதை ஊடுருவும் நபராக அங்கீகரிக்கவில்லை. நோயெதிர்ப்பு சிகிச்சை என்பது நோயெதிர்ப்பு அமைப்பு புற்றுநோயைப் ‘பார்த்து’ அதைத் தாக்க உதவும்.
சில வகையான புற்றுநோய்கள் உடலின் ஹார்மோன்களால் தூண்டப்படுகின்றன. மார்பகப் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் ஆகியவை இவற்றில் அடங்கும். உடலில் இருந்து அந்த ஹார்மோன்களை அகற்றுவது அல்லது அவற்றின் விளைவுகளைத் தடுப்பதன் மூலம் புற்றுநோய் செல்கள் வளர்வதை நிறுத்தலாம். மார்பகப் புற்றுநோய் சிகிச்சையில் அறுவை சிகிச்சை, கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை முடித்த பின்னர் தொடர்ந்து 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு கொடுக்கப்படும் Tamoxifen மற்றும் Letrozole மருந்துகளின் சிகிச்சையும் ஒருவகை ஹார்மோன் சிகிச்சைதான்.
இலக்கு மருந்து சிகிச்சையானது புற்றுநோய் உயிரணுக்களுக்குள் இருக்கும் குறிப்பிட்ட பகுதிகளின் மீது கவனம் செலுத்துகிறது.
இந்தச் சிகிச்சையானது குளிர்ச்சியுடன் புற்றுநோய் செல்களை அழிக்கிறது. கிரையோஆப்லேஷன் போது, மெல்லிய ஊசி (கிரையோபிரோப்) தோல் வழியாக நேரடியாகப் புற்றுநோய்க் கட்டிக்குள் செருகப்படுகிறது. திசுவை உறைய வைப்பதற்காக ஒரு வாயு கிரையோபிரோப்பில் செலுத்தப்படுகிறது. பின்னர் திசு உருக அனுமதிக்கப்படுகிறது. புற்றுநோய் செல்களை அழிக்க ஒரே சிகிச்சை அமர்வின் போது உறைதல் மற்றும் உருகுதல் செயல்முறை பல முறை மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறது.
இந்த அறுவை சிகிச்சையில் வலி குறைவானது. புதிய வழிமுறை என்பதால் செலவு கொஞ்சம் அதிகம். ரோபாடிக் என்றாலும் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் அருகில் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்ய முடியாது. இது கிட்டத்தட்ட Laproscopy போலவேதான். லேப்ராஸ்கோபியில் மருத்துவர்களே அறுவை சிகிச்சை கருவிகளைக் கையாள்வார்கள். ரோபாடிக் அறுவை சிகிச்சையில் ரோபாட் அறுவை சிகிச்சை கருவியைக் கொண்டு, மிக மிகத் துல்லியமாக அறுவை சிகிச்சை செய்யும். நோயாளிக்கு வலி, பிரச்னைகள் 80% குறையும். ஆனால், மருத்துவர்கள் நோயாளியின் அருகிலேயே இருந்து அதை வழிநடத்துவார்கள். அந்த இடங்களில், மருத்துவர்கள் சொல்வதற்கேற்ப ஒரு சிறிய துளைக்குள் நுழைந்து ரத்த சேதம் அதிகம் இன்றி, வலி இன்றி வெட்டி எடுத்துவிடும். உயிர் இல்லாத கருவியான ரோபாட்டுக்கு கவனமாக கட்டளைகள் பிறப்பித்து இச்சிகிச்சையை சிறப்பாக மேற்கொள்கிறார்கள் மருத்துவர்கள்.
Robotic Surgery in Oncology – Breaking Barriers and Redefining Treatment[5]
மார்பகப் புற்றுநோய் சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு, அந்த இடத்தில் மார்பகம் போலவே ஒன்றை உருவாக்குவார்கள். தொடையில் இருந்து தசையை எடுத்து மார்பகம் போலவே தைத்து, மார்பகம் உள்ள இடத்தில் வைத்துவிடுவார்கள். இந்தச் சிகிச்சை நோயாளியின் விருப்பத்தைப் பொறுத்ததே. ஏனெனில் மார்பகம் இல்லாவிட்டால் என்ன செய்வது என்று வருத்தப்படும் பெண்களுக்கே இப்படி வேறு இடத்திலிருந்து தசையை வெட்டி எடுத்து மார்பகம் இருந்த இடத்தில் ஒட்டி வைக்கிறார்கள்.
சில நேரங்களில் மருத்துவர்கள் மார்பகப் புற்றுநோய் வந்தவர்களுக்கு, எந்த மார்பகத்தில் புற்றுநோய்க் கட்டி உள்ளதோ அதனை மட்டும் வெட்டி எடுத்துவிடுவார்கள், மார்பகம் அப்படியே இருக்கும். இது புற்றுநோயின் இரண்டாம் நிலையில்தான் சாத்தியம், மருத்துவர்கள் எது நோயாளிக்குச் சரி என்று தோன்றுகிறதோ அதன்படி செய்வார்கள். எல்லோருக்கும் ஒரே மாதிரி சிகிச்சை அளிக்க முடியாது.
இன்று புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன தொழில்நுட்பங்கள் நிறையவே வந்துவிட்டன. இந்தத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் புற்றுநோய்க்கு எதிரான போரை நடத்தி, மனிதர்களைக் காப்பற்ற முடியம். இதனால் சிகிச்சையை விரைவுபடுத்துவதற்கான கதவைத் திறக்கலாம். CRISPR, செயற்கை நுண்ணறிவு, டெலிஹெல்த், இன்பினியம் அஸ்ஸே (Infinium Assay), கிரையோ-எலக்ட்ரான் மைக்ரோஸ்கோபி(cryo-electron microscopy,) மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை போன்ற தொழில்நுட்பங்கள் புற்றுநோய்க்கு எதிரான முன்னேற்றத்தைத் துரிதப்படுத்த உதவுகின்றன. இந்தத் தொழில்நுட்பம், நோய்களை – முக்கியமாகப் புற்றுநோயைக் குணப்படுத்த உதவுகிறது. யாருக்குச் சிகிச்சை செய்ய விரும்புகிறோமோ, அவரது DNA துணுக்கை எடுத்து அதனை மாற்றி அமைத்து, அதன் மூலம் புற்றுநோயைக் குணப்படுத்துவதே இதன் வழிமுறை.
Dr. A. N. Vaidhyswaran,
Senior Consultant and Director of Radiation Oncology,
Kauvery Hospital Chennai
Source URL: https://www.kauveryhospital.com/blog/tamil-articles/how-to-prevent-cancer/
Copyright ©2024 Kauvery Blog unless otherwise noted.