தடுக்க முடியும்! சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்றிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி?

தடுக்க முடியும்! சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்றிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி?
December 27 03:42 2024 Print This Article

சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று (UTI – Urinary Tract Infection) என்னும் பிரச்னை பொதுவாகக் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடியது. சிறுநீரகம், சிறுநீர்க் குழாய்கள், சிறுநீர்ப்பை உள்பட சிறுநீர் அமைப்பின் பல்வேறு பகுதிகளை இது பாதிக்கலாம். சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்றுகளுக்கான காரணங்கள், அறிகுறிகள், நோய் கண்டறிதல், சிகிச்சை மற்றும் தடுப்பு பற்றி அறிவது அவசியம்.

சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று என்றால் என்ன

UTI என்ற சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று என்பது சிறுநீர் மண்டலத்தின் எந்தப் பகுதியிலும் ஏற்படக்கூடிய கிருமித் தொற்று ஆகும்.

குழந்தைகளில், இது பெரும்பாலும் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

மேல் சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று: சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர்க்குழாய்களை உள்ளடக்கியது (எ.கா: பைலோனெப்ரிடிஸ் / Pyelonephritis).

கீழ் சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று: சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்க்குழாய் ஆகியவற்றை உள்ளடக்கியது (எ.கா: சிஸ்டிடிஸ் / Cystitis).

குழந்தைகளுக்கு சிறுநீர்ப் பாதைத் தொற்று  ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன

குழந்தைகளில் இப்பிரச்னை ஏற்பட பல காரணிகள் பங்களிக்கலாம்:

1. பாக்டீரியல் நோய்த்தொற்றுகள் 

மிகவும் பொதுவான காரணம் – எஸ்கெரிச்சியா கோலி (E. coli) போன்ற பாக்டீரியாக்கள் சிறுநீர்ப் பாதையில் நுழைவது.

2. சிறுநீரை அடக்கி வைத்தல் 

நீண்ட நேரம் சிறுநீர் கழிப்பதைத் தவிர்க்கும் குழந்தைகள் இந்நோய்த் தொற்றுக்கான ஆபத்தில் இருக்கக்கூடும்.

3. மலச்சிக்கல்

மலச்சிக்கல் சிறுநீர்ப் பாதைத் தொற்றின் அபாயத்தை அதிகரிக்கலாம்.

4. மோசமான சுகாதாரம் 

கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு போதுமான அளவு சுத்தம் செய்யாதது பாக்டீரியா தொற்றுக்குக் காரணமாகிறது.

5. Vesicoureteral Reflux (VUR)

சிறுநீர்ப்பையில் இருந்து சிறுநீரகத்திற்கு சிறுநீர் பின்னோக்கிச் செல்லும் நிலை.

6. அசாதாரணங்கள்

சிறுநீர்ப் பாதையில் பிறவி அசாதாரணங்கள் (எ.கா: சிறுநீர்ப் பாதையில் அடைப்பு / Posterior Urethral Valves)  சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்றுகளுக்கு வழிவகுக்கும்.

குழந்தைகளுக்கான சிறுநீர்ப் பாதை தொற்றின் அறிகுறிகள் என்னென்ன

குழந்தையின் வயது மற்றும் சிறுநீர்ப் பாதையின் பகுதியைப் பொறுத்து அறிகுறிகள் மாறுபடலாம். கீழ்வருவன பொதுவான அறிகுறிகள்:

* கைக்குழந்தைகள்: காய்ச்சல், சோம்பல், பசியின்மை வாந்தி. வயிற்றுப்போக்கு

* பெரிய குழந்தைகள்: காய்ச்சல், வயிற்று வலி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிக்கும் போது வலி, சிறுநீரில் ரத்தம், துர்நாற்றம் வீசும் சிறுநீர்.

சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்றினைக் கண்டறிவது எப்படி

குழந்தைகளில் சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்றுகளின் (UTI) காரணிகளைக் அறிய, நாம் பல்வேறு கண்டறியும் சோதனைகளைப் பயன்படுத்துகிறோம்.

சிறுநீர்ப் பாதைத் தொற்றுக்கான நோயறிதல் இது பொதுவாக பின்வருவனவற்றை உள்ளடக்கியது.

* மருத்துவ வரலாறு மற்றும் உடல் பரிசோதனை

அறிகுறிகள் மற்றும் சாத்தியமான ஆபத்துக் காரணிகளை புரிந்து கொள்ள.

* சிறுநீர் சோதனைகள்

பாக்டீரியா இருப்பதைக் கண்டறிய சிறுநீர்ப் பகுப்பாய்வு (Urine Condense Analysis) மற்றும் சிறுநீர் கல்ச்சர் (Urine Culture).

* இமேஜிங் சோதனைகள்

அல்ட்ராசோனோகிராஃபி சோதனையோடு, சிறுநீர்ப் பாதை சாதாரணமாக செயல்படுகிறதா என்பதை அறியவும், எந்தச் சேதமும் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும் மருத்துவரால் கூடுதல் சோதனைகள் பரிந்துரைக்கப்படலாம். இந்த சோதனைகளில் பின்வருவன அடங்கும்:

1. மிக்சுரேட்டிங் சிஸ்டோரெத்ரோகிராபி (MCU): வியூஆர் மற்றும் சிறுநீர்ப்பையில் உள்ள அசாதாரணங்களை மதிப்பிடுவதற்கான ஒரு சிறப்பு எக்ஸ்ரே செயல்முறை. இப்பரிசோதனையில், சிறுநீர் கழிக்கும் துவாரத்தின் வழியாக ஒரு சிறிய டியூப் செலுத்தப்பட்டு, சிறுநீர்ப்பை எக்ஸ்ரேயில் காணக்கூடிய ஒரு மாறுபட்ட பொருளால் நிரப்பப்படுகிறது. அதன்பின் குழந்தை சிறுநீர் கழிக்க அனுமதிக்கப்படுகிறது. அப்போது ஒரு எக்ஸ்ரே படம் எடுக்கப்படுகிறது, குழந்தை சிறுநீர் கழிக்கும்போது சிறுநீர்க்குழாய்களில் மாறுபாடு ஏற்பட்டு திரும்பப் பாய்வதைப் பார்க்கவும், ஆண் குழந்தைகளில் சிறுநீர்க் குழாயில் ஏதேனும் அடைப்பு உள்ளதா எனச் சரிபார்க்கவும் இது உதவும்.

2. DMSA ஸ்கேன்: இதனுடன், சிறுநீரகத்தின் அளவு, வடிவம் மற்றும் நிலையை மதிப்பிடுவதற்கு இன்றியமையாத DMSA (டைமர்கேப்டோ சக்சினிக் அமிலம்) ஸ்கேன் செய்யப்படுகிறது. இந்த ஸ்கேன், மீண்டும் மீண்டும் வரும் தொற்றுநோய்களால் ஏற்படும் சிறுநீரக வடுக்களை கண்டறிய உதவுகிறது.

சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்றுக்கான சிகிச்சை என்ன

சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்றுகளுக்கான முதன்மை சிகிச்சையானது தொற்றுநோயை அகற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை உள்ளடக்கியது. நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் தேர்வு மற்றும் சிகிச்சையின் காலம் குழந்தையின் வயது, நோய்த்தொற்றின் தீவிரம் மற்றும் தொற்று இருக்கும் இடம் ஆகியவற்றைப் பொறுத்துள்ளது.

பொதுவாக கீழ் சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்றுக்கு பொதுவான நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மட்டும் வழங்கப்படுகின்றன. மேல் சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்றுக்கு சிறப்பு நுண்ணுயிர் எதிர்ப்பிகளும், கடுமையான தொற்றுக்கு நரம்பு வழி நுண்ணுயிர் எதிர்ப்பிகளும் அளிக்கப்படுகின்றன.

உங்கள் குழந்தை நன்றாக உணர்ந்தாலும், மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை முழுமையாகக் குறிப்பிட்ட நாட்களுக்குக் கொடுக்கவும். நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துகளை முழுமையாகக் கொடுத்து முடித்த பிறகு, தொற்று நீங்கிவிட்டதா என்பதை உறுதிப்படுத்த உங்கள் மருத்துவர் சிறுநீர் பரிசோதனையை மீண்டும் செய்யலாம். ஏனெனில், இந்த நோய்த் தொற்றுக்கு முழுமையாகச் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் மீண்டும் வரலாம் அல்லது பரவலாம்.

சிகிச்சையின்போது திரவ உட்கொள்ளல் போதுமானதாக இருப்பதை உறுதி செய்வதும், காய்ச்சலுக்கு சரியான அளவில் பாராசிட்டமால் சிகிச்சை அளிக்கப்படுவதும் முக்கியம்.

எப்போது மருத்துவரைச் சந்திக்க வேண்டும்

UTI நோய்க்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டால்…

மருத்துவர் பரிந்துரைத்த நுண்ணுயிர் எதிர்ப்பிகளை எடுத்துக்கொண்ட

இரண்டு நாட்களுக்குப் பிறகும் முன்னேற்றம் இல்லையென்றால்…

நுண்ணுயிர் எதிர்ப்பிகளை உட்கொள்வதில் சிக்கல் அல்லது வாந்தியெடுத்தல் ஏற்பட்டால்…

போதுமான திரவம் குடிக்க முடியவில்லை என்றால்…

முதுகுவலி ஏற்பட்டால்..

உங்களைக் கவலையடையச் செய்யும் வகையில் குழந்தையின் ஆரோக்கியம்  இருந்தால்…

பெற்றோர் செய்ய வேண்டிய சில முக்கியமான நடைமுறைகள்

 * உங்கள் குழந்தை போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை (தினமும் 6-8 டம்ளர்) உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

* உங்கள் குழந்தையை தவறாமல் சிறுநீர் கழிக்கச் செல்ல ஊக்குவிக்கவும். பகலில் ஒவ்வொரு 3-4 மணி நேரத்துக்கும், படுக்கைக்குச் செல்வதற்கு முன்பும்.

* கழிப்பறையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவோ, சிறுநீர் கழிப்பதைத் தள்ளிப்போடவோ வேண்டாம் என உங்கள் பிள்ளைக்கு அறிவுறுத்துங்கள். கழிப்பறைகள் சுத்தமாக இல்லாவிட்டாலும்கூட, சிறுநீர் உள்ளுக்குள்ளேயே தேங்காமல் இருக்க அவற்றைப் பயன்படுத்துவதே நல்லது. அழுக்கு கழிவறைகள் UTIயை ஏற்படுத்தாது.

* உங்கள் பெண் குழந்தையின் சிறுநீர் கழிக்கும் மற்றும் பிறப்பு உறுப்புகளைச் சுத்தமாக வைத்திருக்கக் கற்றுக்கொடுங்கள். அசுத்தமடைதலைத் தடுக்க, மலம் கழித்த பின் முன்னிருந்து பின்னாகவே சுத்தம் செய்ய வேண்டும்.

* உணவில் போதுமான நார்ச்சத்து, போதுமான திரவங்கள், வழக்கமான உடற்பயிற்சி மற்றும் நல்ல கழிப்பறைப் பழக்கங்களை உறுதி செய்வதன் மூலம் மலச்சிக்கலைத் தடுக்கவும்.

* கழிவறைப் பயிற்சிக்குப் பிறகும், பகலில் உள்ளாடைகளை நனைத்தல், அடிக்கடி கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் அல்லது அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வு, இடுப்புப் பகுதியை கைகள் அல்லது கால்களால் அழுத்தி தாமதப்படுத்துதல், சிறுநீர் கழிக்கும்போது வலி அல்லது இடைநின்றல் போன்ற அறிகுறிகள் உங்கள் குழந்தைக்கு இருந்தால், இவை (Bladder & Bowel Dysfunction / BBD) குறித்து உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.

* நோய்த் தொற்றைத் தடுக்க ஆண்டிபயாடிக் மருந்தை மருத்துவர் பரிந்துரைத்திருந்தால், அதைத் தவறாமல் அளிக்க வேண்டும்.

* சிறுகுழந்தைகளுக்கு நல்ல தரமான டயப்பர்களைப் பயன்படுத்தவும் (சுத்தமான காட்டன் நாப்கின்களையும் பயன்படுத்தலாம்). டயப்பர் மற்றும் நாப்கின்களை அடிக்கடி மாற்றவும்.

ஆண் குழந்தைக்கு மீண்டும் மீண்டும் சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று இருந்தால், பிறப்புறுப்பின் நுனித் தோல் அகற்றுதல் (circumcision) செய்முறையை மேற்கொள்ள வேண்டுமா?

குழந்தைப் பருவத்திலேயே பிறப்புறுப்பின் நுனித் தோல் அகற்றுதல் செய்யப்பட்ட சிறுவர்களுக்கு சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று பாதிப்பு குறைவாக இருக்கும். எனினும், மீண்டும் மீண்டும் வரும்போது, சிறுவர்களுக்கு இந்தச் செயல்முறையில் எந்த அளவு நன்மை என்பது தெளிவாக இல்லை. இது குறித்து உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்.

நெல்லிச் சாறு அல்லது புரோபயாடிக்குகள் மீண்டும் மீண்டும் வரும் சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்றைத் தடுக்க உதவுமா

  • நெல்லிச் சாற்றைச் சரியான அளவுகளில் பயன்படுத்துவது குழந்தைகளின் சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்றைத் தடுக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. இருப்பினும், இது பற்றி மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.
  • பொதுவாக, சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக புரோபயாடிக்குகளைப் பயன்படுத்துவதற்கு ஆதரவாக எந்த ஆதாரமும் இல்லை.
  • மீண்டும் மீண்டும் வரும் சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று காரணமாக குழந்தைக்கு சிறுநீரகப் பாதிப்பு அல்லது சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படுமா?
  • மீண்டும் மீண்டும் சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று ஏற்படுவது காரணமாக சிறுநீரகச் செயலிழப்புக்கான அபாயம் குறைவு. இருப்பினும், மீண்டும் மீண்டும் வரும் UTI சிறுநீரகத்தில் காயம் மற்றும் தழும்புகளை ஏற்படுத்தும். இந்தத் தழும்புகள் உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்; சிறுநீரில் புரதத்தை இழக்க வழிவகுக்கும்.
  • எனவே, சரியான பரிசோதனையைப் பயன்படுத்தி, அதிக ரத்த அழுத்தம், சிறுநீரகச் செயல்பாடு மற்றும் புரோட்டினூரியா (சிறுநீரில் புரத இழப்பு) ஆகியவற்றைப் பரிசோதிக்க மருத்துவரிடம் தொடர்ச்சியான பின்தொடர்தல் அவசியம்.
  • கூடுதலாக, BBD கண்டறியப்பட்டால் அதற்குரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
  • சிறுநீர்ப் பாதையில் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தால், அறுவை சிகிச்சை நிபுணரிடம் பின்தொடர்தல் தேவைப்படலாம்.

சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று என்பது குழந்தைகளில் ஒரு பொதுவான – ஆனால், சரிப்படுத்தக்கூடிய நிலையே.  சிக்கல்களைத் தடுக்க ஆரம்பகால நோயறிதலும் சரியான சிகிச்சையும் அவசியம். பெற்றோர்களும் பராமரிப்பாளர்களும் இதன் அறிகுறிகளைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். UTI என சந்தேகப்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், தொற்றுநோய்களின் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கலாம்.

சிறுநீர்ப் பாதைத் தொற்று என்பது குழந்தைகளில் ஒரு பொதுவான – ஆனால், சரிப்படுத்தக்கூடிய நிலையே. சிக்கல்களைத் தடுக்க ஆரம்பகால நோயறிதலும் சரியான சிகிச்சையும் அவசியம்.

 

Dr. எம். சுரேஷ், MBBS, MD (Paediatrics, Fellowship in Paediatric Nephrology)
குழந்தைகள் சிறுநீரக மருத்துவர் (Paediatric Nephrologist)
காவேரி மருத்துவமனை, திருச்சி

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 •  Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801