எடை குறைப்பது தான் புத்தாண்டு சபதமா?

by admin | December 18, 2023 3:44 am

இந்த வருட புத்தாண்டு சபதம் என்ன? பிரபலங்கள் முதல் உங்கள் பக்கத்துவீட்டு நபர் வரை இந்தக் கேள்வியைக் கேட்டுப் பாருங்கள்.

‘எடையைக் குறைக்கப் போறேன்… ஜனவரி ஒண்ணுலேருந்து எக்சர்சைஸ் பண்ணப் போறேன்… ஜிம்முக்கு போகப் போறேன்… வாக்கிங் போகப் போறேன்… டயட் பண்ணப் போறேன்…’ என சபதங்களை அடுக்குவார்கள்.

புத்தாண்டு ஜோரில் இவற்றையெல்லாம் தீவிரமாகப் பின்பற்றவும் செய்வார்கள். அதிகபட்சமாக ஒரு வாரம் அந்த சபதம் தொடர்ந்தாலே ஆச்சரியம் தான். எடுத்த வேகத்தில் கைவிடப்படுகிற விஷயமும் அதுவாகத்தான் இருக்கும். பிறகு வருடம் முழுவதும் அடிக்கடி அந்த சபத சிந்தனை எட்டிப் பார்ப்பதும், அதைத் திரும்ப தூசி தட்ட நல்ல நாள் குறிக்கப்படுவதும், காற்றில் பறக்கவிடப்படுவதும் தொடர்கதையாகும். இப்படியெல்லாம் நடக்காமல், இந்த வருடமாவது நீங்கள் உங்கள் ஃபிட்னஸ் சபதத்தில் ஜெயிக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?

புத்தாண்டுச் சலுகைகள், தள்ளுபடிகள் போன்ற கவர்ச்சியான விளம்பரங்களைப் பார்த்து ஜிம்மில் சேர்பவர்கள் நிறைய பேர். அப்படிப்பட்டவர்கள்தாம், சேர்ந்து 2,3 மாதங்களில் அது அலுத்துப் போய் நிறுத்தவும் செய்வார்கள். உண்மையிலேயே உடல்நலனில் அக்கறை உள்ள யாரும் இப்படிச் செய்வதில்லை.

நேரமே இல்லை என உடற்பயிற்சி செய்வதைத் தவிர்ப்பவர்கள் தான் நம்மில் எக்கச்சக்கம். உடற்பயிற்சியை ஒரு தனி வேலையாக நினைக்காமல், தினசரி சாப்பாடு, தூக்கம் மாதிரி கடமையாக நினைப்பவர்கள் இப்படி நேரமின்மையைக் காரணம் காட்டித் தப்பிக்க மாட்டார்கள்.

ஆரோக்கியமாக இருப்பதென முடிவு செய்துவிட்டால், முதல் வேலையாக முறையான ஃபிட்னஸ் மையத்தை அணுக வேண்டும். அந்த இடம் சரியானது தானா என்று தெரிந்து கொள்ள வேண்டியது அதை விட முக்கியம். அங்குள்ள ஃபிட்னஸ் நிபுணர்கள் முறைப்படி படித்து, சான்றிதழ் பெற்றவர்களா எனப் பார்க்க வேண்டும். எடை, உயரம் போன்றவற்றைக் கணக்கிட்டு, உங்கள் தேவை என்ன எனத் தெரிந்து கொண்டு, உங்களுக்கான ஃபிட்னஸ் விஷயங்களைப் பரிந்துரைப்பார்கள்.

ஜிம்மெல்லாம் குண்டா இருக்கிறவங்களுக்குத்தான்… நான்

கரெக்டான எடையோடதான் இருக்கேன்…’ என்று உங்களுக்கு நீங்களே சமாதானம் சொல்லிக் கொண்டாலும், உங்கள் வேலையின் தன்மையைப் பொறுத்தே அது முடிவு செய்யப்பட வேண்டும். உதாரணத்துக்கு காலை முதல் மாலை வரை கம்ப்யூட்டரின் முன்னால் உட்கார்ந்தபடி வேலை செய்கிறவர் என்றால் சீக்கிரமே உங்களுக்கு தோள்பட்டை வலியும் முதுகுவலியும் வரலாம். நீண்ட தூரம் பயணம் செய்கிறவர் என்றால் முதுகுவலி வரலாம். வருமுன் காப்பதற்கான ஒரே வழி உடற்பயிற்சிதான்.

‘குண்டானவர்களுக்குத்தான் உடற்பயிற்சிகள்’ என்கிற எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். உடலுழைப்பே இல்லாத இன்றைய வாழ்க்கை முறையில், ஆரோக்கியமாக வாழ நினைக்கிற எல்லோருக்கும் ஏதோ ஓர் உடற்பயிற்சி அவசியம்.

பெண்களைப் பொறுத்த வரை இன்று டீன் ஏஜிலிருந்தே பருமன் பிரச்சினை தொடங்கி விடுகிறது. கல்யாணமாகி, குழந்தை பெற்ற பிறகு அது இன்னும் அதிகமாகிறது. நிறைய இளம்பெண்களுக்கு ‘பிசிஓடி’ எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டி பிரச்சினையின் காரணமாகவும் பருமன் இருக்கிறது. உடற்பயிற்சி என்கிற விஷயத்தை பருமன் வந்த பிறகு நினைக்க ஆரம்பிப்பதற்குப் பதிலாக, இள வயதிலிருந்தே அதை ஒரு வழக்கமாகப் பின்பற்றத் தொடங்குவது தான் சரி.

தொடர்புடைய வலைப்பதிவு: உடற்பயிற்சி பற்றிய உண்மைகள்[1]

உடற்பயிற்சி செய்வதால் உங்கள் எடை கட்டுப்பாட்டுக்குள் வருவது மட்டுமின்றி, உங்கள் சருமம் ஆரோக்கியமாகும்… நிறம் கூடும்… முதுமைத் தோற்றம் தள்ளிப் போகும்… உங்கள் உண்மையான வயதைவிட இளமையாக மாறுவதைக் கண்கூடாகப் பார்ப்பீர்கள்!

இவை மட்டுமல்ல… ஞாபக சக்தி அதிகரிக்கும். தூக்கமின்மை சரியாகும். மொத்தத்தில் உடலளவில்மட்டுமின்றி, மனதளவிலும் உற்சாகமாக உணர்வீர்கள்! ஜிம் போய் உடற்பயிற்சி செய்யத் தொடங்கியதுமே உடலில் வலி வருவதைக் காரணமாகக் காட்டி, அதைத் தவிர்ப்பவர்களும் உண்டு. அத்தனை நாள் வேலையே இல்லாமலிருந்த தசைகளுக்கு வேலை கொடுப்பதால் உண்டாகிற அந்த வலியானது தற்காலிகமானது… பயப்படத் தேவையில்லை!

‘ஜிம் போக ஆரம்பித்தால் காலம் முழுக்க தொடர வேண்டும். இடையில் நிறுத்திவிட்டாலோ மறுபடி எடை எக்குத்தப்பாக  எகிறும். அதெல்லாம் ஏமாற்றுவித்தை’ என்கிற அபிப்ராயமும் மக்களிடையே உண்டு. இதன் பின்னணியிலும் ஒரு காரணம் உண்டு. ஜிம்முக்கு போய் உடற்பயிற்சி செய்கிற வரை உணவு விஷயத்தில் கட்டுப்பாடாக இருப்பார்கள். தினசரி உடற்பயிற்சி செய்வார்கள். அதை நிறுத்தியதும் உணவுக்கட்டுப்பாடு தளர்ந்து, கண்டதையும் சாப்பிடுவார்கள். தினசரி உடற்பயிற்சி என்பதும் மாறிப் போகும். இப்படி இல்லாமல், ஜிம்முக்கு போவதை நிறுத்தினாலும் உணவுக் கட்டுப்பாட்டையும் தினசரி உடற்பயிற்சியையும் தவறாமல் செய்கிறவர்களுக்கு நிச்சயம் எடை ஏறாது.

நேரமே இல்லை என உடற்பயிற்சி செய்வதைத் தவிர்ப்பவர்கள் தான் நம்மில் எக்கச்சக்கம். உடற்பயிற்சியை ஒரு தனி வேலையாக நினைக்காமல், தினசரி சாப்பாடு, தூக்கம் மாதிரி கடமையாக நினைப்பவர்கள் இப்படி நேரமின்மையைக் காரணம் காட்டித் தப்பிக்க மாட்டார்கள். 24 மணி நேரத்தில் அரை மணி நேரத்தை ஒதுக்கத் தெரியாதவர்கள், ஆரோக்கியத்தைக் கோட்டை விடுகிறார்கள் என்பதே உண்மை. ஒரு நாளைக்கு 30 முதல் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி அவசியம். அதைத் தாண்டி செய்வதும் ஆபத்தானது. அது தசைகளைப் படையச் செய்து விடும். தினசரி செய்ய முடியாதவர்கள், ஒரு நாள் விட்டு ஒரு நாளாவது உடற்பயிற்சியைத் தவறாமல் செய்ய வேண்டும்.

‘தினசரி வாக்கிங் போகிறேன்… அதைத் தாண்டி வேறு உடற்பயிற்சி தேவையா?’ என்கிற கேள்வியும் பலருக்கு உண்டு. வாக்கிங் மட்டுமே உதவாது. தசைகளைத் தளர்ச்சியின்றி, இறுக்கமாக வைக்க வேறு சில பயிற்சிகளும் அவசியம்.

ஜிம் போகப் பிடிக்காதவர்கள் ஏரோபிக்ஸ், டான்ஸ், நீச்சல் என முயற்சி செய்யலாம். ‘வேறு வழியே இல்லை.. ஜிம் போக வாய்ப்பே இல்லை’ என்பவர்கள், வீட்டிலேயே செய்யக் கூடிய பயிற்சிகளை ஃபிட்னஸ் ஆலோசகரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு பின்பற்றலாம். வீட்டில் வைத்துச் செய்யக்கூடிய உடற்பயிற்சிக் கருவிகளையும் வாங்கிச் செய்யலாம். டம்பெல்ஸ் எனப்படுவது தசைகளை இறுகச் செய்யவும், மணல் கால்களுக்கும் பைகள் கணுக்கால்களுக்கும் பலம் தரவும் உதவும். எந்தக் கருவியையும் முறையான ஆலோசனையின்றி, நீங்களாகவே வாங்கிச் செய்வது சரியானதல்ல. வீட்டு வேலைகளைக் கூடியவரையில் நீங்களே செய்யப் பழகுவதைவிட மிகச் சிறந்த உடற்பயிற்சி வேறு இருக்காது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

சரியான எடையுடனும், இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க நினைக்கிற உங்கள் முயற்சியில், உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக் கொள்ள இந்த டிப்ஸையும் பின்பற்றிப் பாருங்கள்…

உங்களுடைய இள வயது புகைப்படங்களை உங்கள் பார்வையில் படும்படியான இடத்தில் மாட்டி வையுங்கள். அப்போது நீங்கள் எவ்வளவு அழகாக, ஸ்லிம்மாக இருந்தீர்கள் என்பதை நினைத்துப் பார்த்து, மறுபடி அந்த உருவத்துக்குத் திரும்பும் முயற்சியில் இறங்குங்கள்.

உங்களுடைய உடை அளவு என்னவென்று பாருங்கள். அதைவிட ஒன்றிரண்டு சைஸ் சின்னதாக சில உடைகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அந்த சின்ன அளவு உடை உங்களுக்குப் பொருந்திப் போகிற மாதிரி உங்கள் தோற்றம் மாற வேண்டும் என லட்சியம் கொள்ளுங்கள். அதை நோக்கிய முயற்சிகளில் இறங்குங்கள்.

‘எடை குறைந்தால் முகம் உள்ளே போகும், அழகு போகும்’ என்றெல்லாம் தவறான நம்பிக்கைகள் உள்ளவர்களும் இருக்கிறார்கள். சரியான உணவுக் கட்டுப்பாடும், அதற்கேற்ற உடற்பயிற்சிகளும் இருந்தால், நிச்சயம் உங்கள் முக அழகு முன்னைவிட கூடுமே தவிர, குறையாது. உங்கள் உடலில் எங்கெல்லாம் கொழுப்பு உள்ளதோ, எடை குறையும் போது முகம் உள்பட அத்தனையும் குறையவே செய்யும். அனாவசிய ஊளைச்சதை குறைந்து, சரியான வடிவம் பெறுவதுதான் ஆரோக்கியம்.

லைட் கலர் உடைகள் பொதுவாகவே ஒருவரை குண்டாகக் காட்டக்கூடியவை. டார்க் நிற உடைகள் ஒல்லியாகக் காட்டும். லைட் கலர் உடை அ ணியும்போதும் ஒல்லியாகத் தெரிய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எப்போதோ, எங்கேயோ எடை மெஷினை பார்க்கும் போது மட்டும் எடையை சரி பார்ப்பதைத் தவிர்த்து, வீட்டிலேயே ஓர் எடை மெஷின் வைத்துக் கொள்ளுங்கள். வாரம் ஒரு முறையோ, மாதம் இருமுறையோ உங்கள் எடையை சரி பாருங்கள்.

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 •  Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801

Endnotes:
  1. உடற்பயிற்சி பற்றிய உண்மைகள்: https://kauveryhospital.com/blog/tamil-articles/facts-about-exercise/

Source URL: https://kauveryhospital.com/blog/tamil-articles/is-losing-weight-your-new-years-resolution/