நான் எனும் பேரதிசயம்

நான் எனும் பேரதிசயம்
May 27 07:08 2024 by admin Print This Article

இந்த உலகில் ஒவ்வொன்றும் அதிசயமும் ஆச்சரியமும் நிறைந்தது. அந்த ஆச்சரியங்களில், அதிசயங்களில், மேன்மையான ஒன்றை, மிகப் பரிச்சயமான ஒன்றைப் பார்க்க வேண்டுமா? ஆசையாக இருந்தால் கண்ணாடி முன்னால் நில்லுங்கள்.

இதில் என்ன அதிசயம்? எல்லோருக்கும் இருப்பது போல இரண்டு கண்கள், ஒரு வாய், இரண்டு இரண்டு கால்கள், கைகள் தாம் உள்ளன எனச் சாதாரணமாகத் தோன்றினால் கொஞ்சம் யோசியுங்கள்.

உடலை எடுத்துக்கொண்டால், உடல் இயங்குவதற்காக நீங்கள் வேலை எதுவும் செய்யவில்லை. இதயத் துடிப்பாகட்டும், ஜீரணமாகட்டும், சுவாசம் ஆகட்டும், அல்லது உள்ளுறுப்புகள் செய்யக்கூடிய எந்த ஒரு வேலையாகட்டும், ஒவ்வொன்றும் அதனதன் வேலையை அழகாகச் செய்துகொண்டிருக்கிறது. ஆனால், அதன் அத்தனை வேலைகளும் உங்களுக்காக.

உள்ளே மூலப்பொருட்களை அனுப்பினால் விற்பனைப் பொருளாக, நாம் பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தக் கூடிய பொருளாக மாற்றும் இயந்திரங்கள் பலவற்றை நாம் பார்த்திருக்கிறோம். உள்ளே உணவையும் தண்ணீரையும் அனுப்பினால் அதை ரத்தமாகவும் சதையாகவும் எலும்பாகவும் மாற்றும் ஓர் இயந்திரத்தை நீங்கள் எங்காவது பார்த்திருக்கிறீர்களா?

சத்தமில்லாமல் இந்த வேலையைச் செய்துகொண்டிருக்கும் இந்த உடலை ஓர் அதிசயம் என்று சொல்லாமல் வேறென்ன சொல்ல முடியும்?

அடுத்து மனம், நீங்கள் கடந்து வந்த பாதையை நினைத்துப் பாருங்கள். எவ்வளவு  கடினமான பிரச்சினைகளையெல்லாம் கையாண்டு இருக்கிறீர்கள். எத்தனை போராட்டங்களை எதிர்கொண்டு, சவால்களைச் சந்தித்து இன்று இந்த வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள்! இக்கட்டான சூழ்நிலைகளை நிதானமாகக் கையாண்டு,

தெளிவான முடிவுகளை எடுத்து, வாழ்க்கையை அழகாக ஆக்கி இருக்கிறீர்கள். இந்தக் கணம், இதை வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் ஒன்றே ஒன்றுதான் காரணம். உங்கள் மனம்தான். அது தான் உங்களை உயிருடனும் உயிர்ப்புடனும் இந்த நொடி வரை இந்த மனம்தான் தோல்வியின் போது இன்னொரு முறை முயற்சி செய்யலாம் என்று சொன்னது. மன உளைச்சலின் உச்சத்தில் வாழ்க்கையின் மறுபக்கத்தைக் காட்டிப் போனது. கையறு நிலையின் விளிம்பில் நின்றுகொண்டிருந்தபோது ஏதேதோ சொல்லி வாழ்தலைத் தேர்ந்தெடுக்க வைத்தது. இவ்வளவும் செய்த மனதை அதிசயம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?

ஜோசப் மர்ஃபி என்ற புகழ்பெற்ற எழுத்தாளர் எழுதிய ‘ஆழ்மனதின் அற்புத சக்தி’ என்ற நூலில் மனதை, ‘எண்ணமும் உணர்வும் சக்தியும் ஒளியும் அன்பும் அழகும் நிறைந்த உள் உலகு’ எனக் குறிப்பிடுவார். மேலும் ‘அது கண்ணுக்குப் புலப்படாமல் இருந்தாலும் மிகவும் சக்தி வாய்ந்தது. எந்த ஒரு பிரச்சினைக்கான தீர்வையும் எந்த ஒரு விளைவுக்கான  காரணத்தையும் உங்கள் ஆழ்மனத்தில்  கண்டறியலாம்’ எனச் சொல்வார்.

உடலை எடுத்துக்கொண்டால், எவ்வளவு தனித்துவம்! வடிவத்திலும் சரி, அமைப்பிலும் சரி, உருவத்திலும் சரி, உடலின் ஒவ்வோர் அங்கமும் எவ்வளவு தனித்துவம் மிக்கதாக இருக்கின்றன.

மனதை எடுத்துக்கொண்டால் அவரவருக்கான எண்ணங்கள், தீர்மானங்கள், முடிவுகள், கொள்கைகள்,சிந்தனைகள், தத்துவங்கள், அனுபவப் பாடங்கள், தனித்திறமைகள் ஒவ்வொருவரும் எவ்வளவு தனித்தன்மையோடு இருக்கிறோம்?

இப்போது, கேள்வி என்னவெனில் நான் ஒரு பேரதிசயம் என்றால் அதற்கான பலனை ஏன் என்னால் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை?

நான் அவ்வளவு தனித்துவமானவர் என்றால், ஏன் அந்தத் தனித்துவத்தை என்னால் நடைமுறைப்படுத்த முடியவில்லை?

என் பிரச்சினைகளுக்கான தீர்வு என் மனதில் தான் உள்ளது என்றால் அதை ஏன் என்னால் எளிதாகக் கண்டுணர முடியவில்லை, அன்றாட வாழ்க்கையில் செயல்படுத்த முடியவில்லை?

ஏனென்றால், நாம் இந்த அதிசயத்தக்க உடலையும் பொக்கிஷமான மனதையும் ஒரு கொடையாக நினைப்பதும் இல்லை,பராமரிப்பதும் இல்லை.இந்த இரண்டு அதிசயங்களின் பலனை அனுபவிக்க வேண்டுமென்றால் முதலில் அவற்றைப் பராமரியுங்கள்.

உடலைப் பராமரிக்கச் செய்ய வேண்டியவை என்ன?

சத்தான உணவுகளை, பசியை அலட்சியம் செய்யாமல், அளவாக உண்பது.

உடலுக்குச் சரியான அளவு ஓய்வு கொடுப்பது. அளவான உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி கொடுப்பது.

உடற்பயிற்சி இப்போதுதான் தொடங்குபவராக இருந்தால், உங்களுக்குப் பிடித்தமான உடற்பயிற்சி அல்லது உடல் அசைவுகளை உங்களால் முடிந்த அளவுக்கு, உங்களால் சந்தோஷமாக எவ்வளவு நேரம் செய்ய முடியுமோ, அவ்வளவு நேரம் மட்டும் செய்தாலே போதும்.

மனதைப் பராமரிப்பதற்கான முக்கியமான இரண்டு வழிகள், ஒன்று தியானம் மற்றொன்று புத்தகங்கள் வாசித்தல். தியானம் பழக, முதலில் உங்களுடன் நீங்கள் சௌகரியமாக உட்காரப் பழகுங்கள். உங்கள் எண்ணங்களைக் கவனியுங்கள். சரி, தவறு என்று இல்லாமல் ஒப்புக் (acknowledge) கொள்ளப் பழகுங்கள். தியானம் பழக இதுதான் அடிப்படை.

உடல் மற்றும் உள்ளத்தை நன்றாகப் பராமரித்து வந்தால் அதற்கான பலனை எளிதாக அனுபவிக்க முடியும்.

தனித்துவத்தை நடைமுறைப்படுத்த என்ன செய்யலாம்? மீண்டும் சொல்கிறேன், ‘நீங்கள் ஒரு பேரதிசயம். ஏனென்றால், இந்த உலகம் தோன்றிய காலத்திலிருந்து இதுவரை, உங்களைப் போல் ஒருவர் இங்கு இருந்ததில்லை. இதற்குப் பின்னும் உங்களைப் போல ஒருவர் இருக்கப் போவதில்லை. ஆதலால், பிறருடன் உங்களை ஒப்பிடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். பிறருடன் போட்டிப் போடுவதற்குத் தேவையே இல்லை என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். அப்போதே உங்கள் தனித்துவம் தானாகவே வெளிவரத் தொடங்கிவிடும்.

அடுத்து பிரச்சினைக்கான தீர்வுகள். சில பிரச்சினைகளை, நாட்கணக்கில் நினைத்து வருந்திக் கொண்டிருக்கிறோம். எனக்கு மட்டும் ஏன் இப்படி என்று புலம்பிக்கொண்டு, விடை தெரியாமல் அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறோம். என்னுடைய பிரச்சினை யாருக்கும் புரியவில்லை எனச் சொல்லி பிதற்றிக்கொண்டு இருக்கிறோம்.

என் இனிய பேரதிசயமே… நீங்கள் தனித்துவம் மிக்கவரானால், உங்கள் வாழ்க்கையின் சவால்களும் தனித்துவம் மிக்கவையாகத்தானே இருந்தாக வேண்டும்?

ஆனாலும், நீங்கள் எடுக்கவேண்டிய முதற்படி இந்த வாழ்க்கையைக் கொண்டாடுவதற்காகத்தான் இருக்க வேண்டும். பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இருக்க வேண்டியதில்லை. அது உங்கள் மனதை, உங்கள் உடலை நன்றாகப் பராமரிப்பதுதான்!

இந்த உடல் ஓர் அதிசயம். இந்த மனம் ஓர் அதிசயம். இந்த இரண்டும் என் வாழ்வில் எனக்குக் கிடைத்த மிகப் பெரும் கொடைகள் என எப்போது உணர ஆரம்பிக்கிறீர்களோ, அப்போதே உங்கள் வாழ்வை ஒரு கொடையாகப் பார்க்க ஆரம்பித்துவிடுவீர்கள். அப்போதே உங்கள் சவால்களுக்குத் தீர்வுகள் எளிதாகக் கிடைத்துவிடும்.

உங்கள்  வாழ்வில் சவால்கள் எதுவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். முதல் வேலையாக உங்கள் உடலையும் மனதையும் பராமரிக்க ஆரம்பியுங்கள்.

இந்த ‘நான்’ எனும் பேரதிசயத்தை உணர்ந்து, அனுபவிக்கத் தொடங்கிவிட்டாலே போதும், அதுவே வாழ்வைக் கொண்டாடுவதற்கான முதற்படி.

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 •  Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801

  Categories:
write a comment

Comments

No Comments Yet!

You can be the one to start a conversation.

Add a Comment

Your data will be safe! Your e-mail address will not be published. Other data you enter will not be shared with any third party.
All * fields are required.