நீரிழிவு A to Z

by admin-blog-kh | June 11, 2024 6:12 am

உலகளவில் ஒப்பிடும்போது இந்தியாவில் நீரிழிவுத் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இன்றைக்கு இந்தியாவில் ஏழரை கோடி மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தமிழ்நாட்டின் மக்கள்தொகையைவிட அதிகம் என்றால் சற்று அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.

கொரோனா ஒரு தொற்று நோய். ஆனால், நீரிழிவு என்பது தொற்றா நோய் ஆகும். நீரிழிவு தற்போது சர்வதேசப் பரவலாக இருக்கின்றன. தெருவில் நடக்கும் 10 நபர்களில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவராக இருக்கிறார் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்த நிகழ்வு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.

சர்க்கரை நோய் என்கிற நீரிழிவு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்?

முன்னர் 40 வயதில் வந்த நீரிழிவு நோய் இன்று 25 வயதிலேயே வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. காரணம், இந்நோய் பரம்பரைத் தன்மை காரணமாகவும் வரக்கூடியது. தாத்தா-பாட்டி, அப்பா-அம்மாவுக்கு இருக்கும்பட்சத்தில் பரம்பரை பரம்பரையாக வரலாம். சுற்றுச்சூழல் தூண்டுதால்களாலும் நீரிழிவு தோன்றுகிறது.

முன்பைவிட நம் வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதில் முக்கியமானது உணவு முறையே. தேவையைவிட அதிக கலோரி உள்ள பொருட்களை நுகர்வதும் நீரிவுக்குக் காரணமாகிறது. இதனை டயபடோஜெனிக் அல்லது உடல் பருமன் சூழல் (Diabetogenic Environment or Obesity Environment) என்கிறோம். உணவைத் தொடர்ந்து உடல் உழைப்பின்மை நீரிழிவு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

மன அழுத்தத்தாலும் நீரிழிவு ஏற்படும். இதற்கு பல காரணங்கள் உண்டு. எடுத்துக்காட்டாக ஒருவருக்கு பணியிடத்தில், குடும்பத்தில், சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சினைகளால் மன அழுத்தம் அதிகமாகிறது. இதுவும் நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கிறது. மன அழுத்தம் அதிகமாவதால் கார்டிசால் ஹார்மோனை அதிகரிக்கிறது. கார்டிசால் ஹார்மோன் நம்மை எச்சரிக்கை செய்து கொண்டே இருப்பதால் உடலின் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இது நாளடைவில் நீரிழிவு வரை கொண்டு செல்கிறது.

நீரிழிவின் வகைகள்

நீரிழிவில் டைப் 1 டயாபடீஸ் மற்றும் டைப் 2 டயாபடீஸ் என இரண்டு வகை உண்டு. முன்பு டைப் 1 மட்டுமே இளம் வயதிலே வரும். இப்போது டைப் 2 டயாபடீஸ் குறைபாடுகூட வாழ்க்கைமுறை மாற்றங்கள் காரணமாக உண்டாவதற்கான அபாயம் அதிகரித்துள்ளது. மேலும், மேற்கண்ட இன்சுலின் எதிர்ப்புகளே (Insulin Resistance) டைப் 2 டயாபடீஸ் வருவதற்கு அடிப்படையாக அமைகிறது.

இன்சுலின் என்பது என்ன?

கணையம் இன்சுலினை உற்பத்தி செய்கிறது. இந்த இன்சுலின் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

Also Read: Role of Insulin[1]

கணையம் இன்சுலினை எவ்வாறு கட்டுபடுத்தும்?

நாம் உட்கொள்ளும் உணவானது மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து என மூன்று விதங்களாகப் பிரிகிறது. மாவுச்சத்து என்பது குளுக்கோஸ், எடுத்துக்காட்டாக… நாம் காருக்கு பெட்ரோல் போட்டால்தான் காரை இயக்க முடியும். அதுபோல நம் உடலுக்கு ஆற்றல் கிடைத்தால்தான் உடல் செயல்படும். அவ்வாறு உடலை இயக்க இந்த குளுக்கோஸானது தேவைப்படுகிறது. குளுக்கோஸ் உடலில் உள்ள செல்களுக்கு சென்று ஆற்றலோடு நம்மை செயல்படச் செய்கிறது. அதற்கான நெறிமுறையாகவே கணையத்தில் இருந்து உருவாகும் இன்சுலின் உள்ளது. அது நம் உடலில் இருந்து எடுக்கக்கூடிய குளுக்கோஸை செல்களுக்குக் கொண்டு சென்று உடலின் ஆற்றலை ஊக்குவிக்கிறது. அப்போது உடலில் சர்க்கரையின் அளவு சரியாக இருக்கிறது. இந்த இன்சுலின் குளுக்கோஸை செல்களுக்குள் கொண்டு செல்லும்போது, இன்சுலின் ரிசப்டார் என்ற அமைப்பு (Insulin Receptor) திறக்கும். அது அப்படி திறந்தால்தான் குளுக்கோசானது செல்களுக்குள் செல்ல முடியும். அவ்வாறு குளுக்கோஸானது செல்களுக்குள் செல்ல முடியாத பட்சத்தில் குளுக்கோஸ் பின்னோட்டமாகச் சென்று ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இதனால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

குளுக்கோஸ் செல்லுக்குள் செல்வதை தடுப்பதில் இன்சுலின் எதிர்ப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.

யாருக்கெல்லாம் இன்சுலின் எதிர்ப்பு ஏற்படும்?

  1. தேவைக்கு அதிகமான கலோரி உள்ள பொருட்களை நுகர்வோருக்கு ஏற்படுகிறது. அதாவது அளவுக்கு அதிகமான கலோரி உள்ள பொருட்களை நுகர்ந்து, அவர்களின் வேலைகளை சரியாக செய்யாமல் இருப்பது…
  2. உடல் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடாமல் காட்டுவது…
  3. மன அழுத்தம் உள்ளவர்களுக்கு…

இது நீரிழிவு நோய்க்கு ஒரு தூண்டுதல் காரணியாக அமைகிறது.

இதனால் ரத்தத்தின் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கிறது. மேலும் நம் உடலில் உள்ள சிறுநீரகம் 180 மி.கிராம் என்கிற அளவுக்கு குளுக்கோஸை சேமித்து வைக்கும். அதற்கு மேல் உள்ள குளுக்கோஸை சிறுநீரகத்திலிருந்து வெளியேற்றும். அவ்வாறு சிறுநீரகத்தில் குளுக்கோஸ் அளவுக்கு அதிகமாகச் செல்வதால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும்.

அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் குளுக்கோஸுடன் சேர்ந்து நம் உடலில் இருக்கும் நல்ல நீரும் வெளியேறும். அதனால் அதிக தண்ணீர் தாகம் ஏற்படும். அதே நேரம் குளுக்கோஸ் செல்லுக்குள் செல்லாமல் ஆற்றல் குறைவும். இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து அதீத பசி ஏற்படும். அதுபோன்ற சூழலில்தான் நீரிழிவாளர்கள் அதிகமாக உணவு உட்கொள்கிறார்கள்.

அதிகமாக சிறுநீர் கழித்தல், அதிக அளவு பசித்தல், அதிகமாக தண்ணீர் குடித்தல் போன்றவை சர்க்கரை நோயின் அறிகுறிகளாகும். இந்த மூன்று அறிகுறிகளை முறையே பாலிடிப்சியா (Polydipsia), பாலியுரியா (Polyuria), பாலிபீகியா (Polyphagia) என்று சொல்வோம். தவிர, உடல் எடை குறைவதும் ஓர் அறிகுறியாகும். ஆனால், பெரும்பாலோருக்கு இந்த அறிகுறி இருக்காது. அதனால்தான் நீரிழிவை silent disease என்கிறோம்.

சிலர் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற பிறகுதான், பரிசோதனையின்போது சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தெரிய வரும். அப்போதுதான் பலருக்கு நீரிழிவு இருப்பது கண்டறியப்படுகிறது.

நீரிழிவைத் தடுக்க முடியுமா?

ஒருவருக்கு நீரிழிவு ஆரம்ப கட்டத்தில் இருக்கும்பட்சத்தில் (ஃப்ரீ டயாபடீஸ்) அதை சரி செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. உணவு பழக்க வழக்கங்களை முறையாகப் பின்பற்றாமல் போனாலோ நீரிழிவு நோய் வருவதற்கான அபாய வாய்ப்புகள் அதிகம். அதனால், சரியான உணவு முறை, உடற்பயிற்சி, மன அழுத்தத்தைத் தவிர்த்தல் ஆகிய விதிமுறைகளை கடைபிடித்தால் நீரிழிவு தாக்காமல் தடுக்கலாம்.

கர்ப்ப கால நீரிழிவு

இப்போது பெரும்பாலோருக்கு கர்ப்ப காலத்தில் நீரிழிவு[2] நோய் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனை ஜெஸ்டேஷனல் டயாபடீஸ் (Gestational Diabetes) என்று கூறுவோம்.

சாதாரணமாக கர்ப்ப காலத்தில் உடலில் நிறைய ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். இந்தக் காலகட்டத்தில் கர்ப்பிணிகள் அதிக மாவுச்சத்து எடுத்துக் கொள்வது வழக்கம். அப்போது உடலில் இன்சுலின் அளவு அதிகமாக இருக்கும். உணவில் மாவுச் சத்து அதிகமாக எடுத்துக் கொண்டு, உடலில் இன்சுலின் அளவு குறைவாக இருக்கும்பட்சத்தில் நீரிழிவு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். மேலும், உடல் எடை அதிகமாக இருந்தாலும், அவரின் குடும்பத்தில் யாருக்கேனும் நீரிழிவுக் குறைபாடு இருந்தாலும், கர்ப்பிணிக்கு கர்ப்ப கால நீரிழிவு பாதிக்கும் சந்தர்ப்பங்கள் அதிகம்.

கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் வருவதை ஆரம்பத்திலே தடுக்க வேண்டும். பிறக்கும் குழந்தைக்கு தொப்புள்கொடி வழியாக நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். இப்படியே அது அடுத்த தலைமுறைக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

கர்ப்பம் தரிக்கும் முன்னரே சர்க்கரை நோய் இருக்கும் பட்சத்தில் சரியான உணவு முறையை பின்பற்ற வேண்டும். இல்லையெனில் பல பின்விளைவுகள் ஏற்படும். ஆகையால், கர்ப்ப காலத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். அப்படிச் செய்தால் தாய் மற்றும் குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

கர்ப்ப கால நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவிகிதத்தினருக்கு பிரசவத்துக்குப் பின் அது சரியாகி விடும். சிலர் சரியான உணவு முறையை கடைபிடிக்காமல் இருந்து, அதனால் உடல் எடை அதிகரித்தால், இது டைப் 2 டயாபடீஸ் ஆக மாற வாய்ப்பு இருக்கிறது.

டைப் 1 டயாபடீஸ்

உடலில் உள்ள எதிப்பு சக்தி மற்றும் கணையத்தில் உள்ள பீட்டா செல்களை எதிர்த்து வேலை செய்வதால் இன்சுலின் உற்பத்தியில் இருப்பவை அனைத்தும் அழிந்துவிடும். இதற்கு ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டர் (Autoimmune Disorder) என்று பெயர். இது குழந்தை வளர்ச்சி அடைகையில் எதிர்ப்பு சக்தி செயல்படாதபோது ஏற்படும் குறைபாடுகள். இன்சுலினை உற்பத்தி செய்யும் செல்கள் அழிந்துவிட்டதால், இன்சுலின் கொடுத்தால்தான் உயிர் வாழ முடியும்.

விளம்பரங்களில் நீரிழிவை மாத்திரை, மருந்து இல்லாமல் முழுவதும் சரி செய்யலாம் என்கிறார்களேஅது அறிவியல்பூர்வமாக சாத்தியமா?

இப்போது உலகளவில் இது சார்ந்த ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. நியூகாஸில் பல்கலைக்கழகத்தில் டாக்டர் ராய் டெய்லர் இது குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டார். அதில் நீரிழிவு நோய் கண்டுபிடிக்கப்பட்டு 5 வருடம் ஆன ஒருவருக்கு குறிப்பிட்ட அளவு கலோரியைச் செலவிடுவதற்கான உடல் செயல்பாடுகளைக் கொடுத்ததில் நீரிழிவு நோயில் இருந்து அவர் சாதாரண நிலைக்கு வந்திருக்கிறார்.

இந்த ஆராய்ச்சி இப்போது இன்னும் விரிவும் வேகமும் எடுத்து வருகிறது. நோயாளிகள் விதிமுறைகளை Peripheral Neuropathy[3] முழுமையாகப் பின்பற்றி ஒத்துழைத்தால் நீரிழிவைச் சரிசெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால், இந்த சிகிச்சை நோய் கண்டுபிடிக்கப்பட்ட முதல் 5 ஆண்டுகளுக்குள் உள்ளவர்களுக்கு மட்டுமே உதவும். பல வருடங்களாக இந்நோய் இருப்பவருக்கு இது ஏற்புடையது அல்ல. அதனால், செய்திகளைத் தவறாகப் புரிந்துகொண்டு மருந்துகள் உட்கொள்வதை நிறுத்துவது தவறான அணுகுமுறை.

நீரிழிவாளர்கள் சரியான உணவு முறையை பின்பற்றினால் இந்த நோயினால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் தடுக்கலாம். நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் கண், சிறுநீரகம் மற்றும் இதயத்திலும் பாதிப்பு ஏற்படுமோ எனப் பயப்படுவார்கள். கவலை வேண்டாம்… கட்டுப்பாடு இல்லாத நீரிழிவுதான் பின்விளைவைக் கொடுக்கும். பெரும்பாலும் மருத்துவர்கள் பின் விளைவுகளைத் தடுக்கும் நோக்கில்தான் நீரிழிவு நோய்க்கு சிகிச்சை கொடுக்கிறார்கள். மேலும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை HbA1c பரிசோதனை செய்து 7 என்ற அளவீட்டுக்குள் கட்டுப்பாடாக வைத்திருந்தால் கவலையே இல்லை!

United Kingdom Prospective Diabetes Study (UKPDS) என்ற ஆராய்ச்சி சொல்வது இதுதான்…

HbA1c பரிசோதனை[4] அளவீட்டில் ஓர் எண் குறைந்தால்கூட இதய பிரச்சினை வராமல் தடுக்க 21 சதவிகிதம் வரை வாய்ப்பிருக்கிறது. எடுத்துக்காட்டாக ஒருவருக்கு HbA1c அளவு 9 ஆக இருக்கிறது.

அவர் மாத்திரைகளைச் சரியாக எடுத்து அந்த அளவை 8க்கு குறைந்தாலே எதிர்காலத்தில் இதயப் பிரச்சினை ஏற்படாமல் இருக்கும் என ஆராய்ச்சியில் சொல்லப்படுகிறது.

நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க HbA1c பரிசோதனை மிகவும் அவசியம். சிலர் மருத்துவர் கொடுக்கும் மருந்துகளை சில காலம் எடுத்துக் கொண்டு சரியாகி விட்டது என பாதியில் விட்டு விடுவர். பிறகு காயங்களில் புண் ஆறாமல் இருத்தல், சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்பட்டு பரிசோதித்த பிற்குதான் சர்க்கரையின் அளவு கூடி இருப்பது தெரிய வரும். அப்போது மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுக்கும் நிலை ஏற்படும். மாத்திரை மருந்துகளை எடுக்காமல் செலவுகளை மிச்சம் செய்தார்களோ, அவர்கள் அதைவிட அதிக பணத்தை மருத்துவமனையில் செலவழிக்கிறார்கள். இப்போது இந்தியாவில் முக்கியமாக தமிழ் நாட்டில் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சினை இது. இதைத் தடுக்க விழிப்புணர்வுப் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும்.

நீரீழிவுக்காக அதிக காலம் தொடர்ந்து மருந்து, இன்சுலின் எடுத்துக் கொள்வதால் ஏதேனும் சிக்கல் இருக்கிறதா?

சில நீரிழிவாளர்கள் அதிக அளவு மாத்திரைகளை எடுத்தால் பிரச்சினை வருமோ என்று அஞ்சி, மருந்து எடுப்பதை நிறுத்தி விடுகிறார்கள். 2008ம் ஆண்டுக்குப் பிறகு சந்தைக்கு எந்த மருந்து வந்தாலும், அது இதயத்தைப் பாதிக்குமா என்று பலவித ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அனுப்பப்படுகிறது. இப்போது கிடைக்கிற நீரிழிவு மருந்துகள் அனைத்தும் சர்க்கரையின் அளவைக் குறைப்பதோடு, இதயத்தையும், சிறுநீரகத்தையும் பாதுகாக்கும் வண்ணம் உள்ளது. பொதுவாக நீரிழிவுக்காக எடுக்கும் மருந்துகள் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

இன்சுலினால் என்ன நன்மை?

இன்சுலின் கண்டுபிடிக்கப்படாத காலகட்டத்தில் இன்சுலின் சுரப்பு இல்லாத குழந்தைகள் பிறந்த உடனே இறந்து விடும். இன்சுலின் கண்டுபிடித்த பிறகு இன்சுலின் சுரப்பு இல்லாத குழந்தைகள்கூட 60 முதல் 75 வயது வரை வாழ்ந்திருக்கிறார்கள். 1922ம் ஆண்டில் பலப்பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டது.

இன்சுலின் என்பது நம் உடலில் உற்பத்தி ஆகக்கூடிய ஹார்மோன். அது குறையும் பட்சத்தில் வெளியில் இருந்து செலுத்துகிறோம். அதனால், இன்சுலின் உபயோகிப்பது மிகவும் நல்லது.இதனால் எவ்வித விளைவும் ஏற்படாது.

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 •  Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801

Endnotes:
  1. Role of Insulin: https://kauveryhospital.com/blog/family-and-general-medicine/role-of-insulin/
  2. கர்ப்ப காலத்தில் நீரிழிவு: https://www.kauveryhospital.com/news-events/november-gestational-diabetes-2021/
  3. Peripheral Neuropathy: https://kauveryhospital.com/blog/family-and-general-medicine/diabetic-neuropathy-types-and-symptoms/
  4. HbA1c பரிசோதனை: https://kauveryhospital.com/blog/family-and-general-medicine/faqs-on-hba1c-test/

Source URL: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/diabetes-a-to-z/