தழும்புகளுக்காக தயங்க வேண்டாம்!

தழும்புகளுக்காக தயங்க வேண்டாம்!
July 17 11:15 2023 Print This Article

நேற்று வரை மாசு மருவற்று பளிங்கு போலக் காட்சியளித்த கன்னங்களில், பருவோ, கட்டியோ தோன்றினால்?  

நிமிடத்துக்கொரு முறை கண்ணாடி முன் நின்று அதைப் பார்த்துக் கவலைப்படுவீர்கள்தானே? வந்த வேகத்தில் காணாமல் போகிற இதற்கே இந்த நிலை என்றால், அதுவே வாழ்நாள் முழுக்க நீடிக்கிற வடுவானால்?

‘எனக்கு பிரமாதமான சருமம். பருவோ, கரும்புள்ளியோ வந்ததே இல்லை’ எனப் பெருமைப்படுகிற பெண் என்றாலும், பிரசவத்துக்குப் பிறகான தழும்புகளில் இருந்து தப்பிக்க முடியாது. இன்னும் உடல் இளைப்பதால் உண்டாகிற தழும்பு, விபத்தினால் உண்டாகிற தழும்பு என அது எப்படி இருந்தாலும், பெண்களுக்குக் கவலை அளிக்கக் கூடியதே!

தன்னம்பிக்கையையே சிதைக்கிற இத்தகைய தழும்புகளுக்கு என்னதான் தீர்வு? 

 தழும்புகளில் பல வகை உண்டு. குழந்தை தவழும் போது ஏற்படும் தழும்பு, கால்களை மடக்கி ஒரே பொசிஷனில் உட்கார்வதால் உண்டாகும் தழும்பு மற்றும் நிற மாற்றம், பரு வந்து போன இடத்துத் தழும்பு, அம்மைத் தழும்பு, பிரசவத்துக்குப் பிறகான தழும்பு என அடுக்கிக்கொண்டே போகலாம். எதையுமே ஆரம்பத்திலேயே கவனித்து, சிகிச்சை அளித்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும்.

எந்தெந்தத் தழும்புகளை எப்படிப் போக்கலாம்? 

 பரு தழும்பு 

பருக்களை கிள்ளவோ, தொடவோ கூடாது. ஃபேஷியல் செய்யக் கூடாது. சாதாரணமாக வரும் பருவானது, தானாகவே சரியாகி விடும். அதைக் கிள்ளி, அழுத்தி தொந்தரவு செய்தால்தான் பிரச்னையே! சூடான எதையும் சாப்பிட வேண்டாம். கறிவேப்பிலை சேர்த்து கொதிக்க வைத்து, ஆறிய தண்ணீரை குடிக்கவும்.

நான்கு பல் பூண்டை அரைத்து, வலியுள்ள பழுத்த பருவின் மேல் வைக்கவும். அதற்கு மேல் கீழே குறிப்பிட்டுள்ள பேக் போடவும்.

சிறிது வேப்பந்தளிர் எடுத்து கையால் கசக்கி, சாறு எடுக்கவும். கஸ்தூரி மஞ்சள் அல்லது கடலை மாவில் விரலைத் தொட்டு, வேப்பம் சாற்றையும் தொட்டு, பரு மேல் பொட்டு போல வைக்கவும். பருக்கள் பரவலாக இருந்தால், இதையே முகம் முழுக்கத் தடவவும்.

அம்மை தழும்பு

பருக்கள் வந்து மறைந்த பிறகோ, அம்மை வந்து போன பிறகோ, சிலருக்கு முகமெல்லாம் பள்ளம் பள்ளமாக இருக்கும். வேப்பந்தளிர், புதினா, துளசி –  மூன்றையும் சம அளவு எடுத்து சாறு எடுக்கவும். அதில் கடலை மாவு அல்லது பார்லி பொடி கலந்து, பள்ளமான தழும்புகளின் மேல் ஆழமாக வைத்து, 2 விரல்களால் அழுத்தி, மேல் பக்கமாக இழுத்து விடவும். தொடர்ந்து இப்படிச் செய்து வர, பள்ளங்கள் சமனாகும். அதன் பிறகு பாதாம் ஆயில் தடவி வர, சருமம் ஒரே நிறத்துக்கு மாறும்.

பொட்டு வைத்த தழும்பு 

சிலருக்கு குங்குமம், சாந்து, ஸ்டிக்கர் பொட்டு என எதுவுமே ஒத்துக் கொள்ளாமல், அலர்ஜியாகி, அந்த இடம் நிறம் மாறி, தழும்பாகும். வெள்ளை எள்ளுடன், கசகசா, பயத்தம் பருப்பு சேர்த்து ரவை மாதிரி பொடித்து, பொட்டு வைக்கிற மாதிரியே ‘திக்’காக வைத்துக் கொண்டு இரவு தூங்கி, காலையில் கழுவவும்.

டீன் ஏஜ் தழும்பு 

டீன் ஏஜில் தோள் பட்டையிலும், முதுகிலும் திடீரென வரி, வரியாகத் தெரிய ஆரம்பிக்கும்.

கருப்பாக இருப்பவர்களுக்கு வெள்ளையாகவும், வெள்ளையாக  இருப்போருக்கு இந்தக் கோடுகள் தெரியும். இதற்கெல்லாம் எந்த சிகிச்சையும் தேவையில்லை. சமதளத் தரையில் படுத்துக் கொண்டு, மூச்சை இழுத்து, வெளியே விடுகிற பயிற்சியை செய்தாலே போதும். கைகளை கடிகாரச் சுற்றிலும், பிறகு அதற்கு எதிர் திசையிலும் சுழற்றுகிற பயிற்சியை செய்தால், கைகளில் உள்ள தழும்பு வரிகள் சரியாகும்.

பிரசவ தழும்பு 

கர்ப்பம் தரித்த 6வது மாதத்தில் இருந்து, அதாவது வயிறு பெரிதாகத் தொடங்கியதும், சருமத்தில் லேசான மாற்றம் தெரிய ஆரம்பிக்கும். தினமும் குளிக்கும் போது, வயிற்றுப் பகுதியில் நல்லெண்ணெய் தடவி, பொறுக்கும் அளவு சூடான தண்ணீரை அதன் மேல் ஸ்பிரே செய்ய வேண்டும். இது பிரசவத்துக்குப் பிறகு தழும்புகள் வராமலிருக்க உதவும்.

தழும்பு உண்டாக என்ன காரணம்? அதை போக்கும் லேட்டஸ்ட் மருத்துவ சிகிச்சைகள் என்னென்ன? 

சருமம் அதன் சராசரி அளவைத் தாண்டி அதிகமாக இழுக்கப்படுவதால், அதன் திசு நார்கள் உடைந்து, தமது மீள் தன்மையை இழக்கின்றன. பிறகு, அது மறுபடி தன் பழைய நிலையை அடைய முடியாமல் சருமத்தின் மேல் லேயரில் தழும்பாகப் பதிகிறது. அதே போல சருமமானது அளவுக்கு அதிகமாக இழுக்கப்படுவதால், கொலாஜன் உற்பத்தியானது பாதிக்கப்பட்டு, அதுவும் தழும்பாக உருவாகும். ஆரம்பத்தில் இளஞ் சிவப்பு நிறத்தில் இருக்கிற தழும்பு, மெல்ல மெல்ல வெளிறிய வெள்ளி கலருக்கு மாறும். சருமம் குறைவாக இழுக்கப்பட்டால், தழும்பும் மிதமாகவே இருக்கும். எப்படியிருந்தாலும் தழும்புகள் தாமாகவே மறைவதில்லை.

ஃபிராக்ஷனல் லேசர் தெரபி மூலம் கை, இடுப்பு, தொடை, வயிற்றுப் பகுதி மற்றும் பிரசவத்துக்குப் பிறகு பெண்களுக்கு அடிவயிற்றில் ஏற்படுகிற அழுத்தமான, விரிவடைந்த கோடுகளை நீக்கலாம். இந்த சிகிச்சையில் பிரத்யேக ஒளிக்கற்றையானது, விரிவடைந்த கோடுகளில் செலுத்தப்பட்டு, அவற்றை சுருங்கச் செய்கிறது. அதன் பிறகு நுண்ணிய ஊசி மூலம் இயற்கையாக, மருத்துவ ரீதியாக உபயோகிக்கப்படும் பிரத்யேக வாயு அதன் மேல் செலுத்தப்படும். இதன் விளைவாக ஆக்சிஜனும் நுண்ணூட்டச் சத்துக்களும் சருமத்துக்குக்  கிடைப்பதால், சுருங்கிய, தொய்வடைந்த, விரிவடைந்த கோடுகள் சீரமைக்கப்பட்டு, தழும்பு இருந்த இடம் பழைய நிலைக்குத் திரும்புகிறது.

இது தவிர, மைக்ரோடெர்மாப்ரேஷன் முறை, சருமத்துக்குத் தேவையான சில முக்கியமான வைட்டமின்கள், தாதுச்சத்துகள், புரதங்களை சருமத்துக்குள் செலுத்தும் அல்ட்ரா சவுண்ட் முறை, ரேடியோ ஃப்ரீக்வன்சி முறை, கார்பன் டை ஆக்சைடை உள் செலுத்தும் ‘கார்பாக்சி தெரபி’, ஈஸ்ட்ரோஜென் உள்ளிட்ட ஹார்மோன்களை சமநிலைப்படுத்தி, அதன் விளைவாக சருமத்தின் கொலாஜன் தரத்தை உயர்த்தும் ஹார்மோன் தெரபி, ஸ்டெம் செல் தெரபி போன்றவையும் தழும்புகளை நீக்கச் செய்கிற லேட்டஸ்ட் சிகிச்சைகள்!

வந்துவிட்ட தழும்புகளை என்ன செய்வது? 

பிரசவமான ஒரு மாதத்துக்குள் இதை சரி செய்வது நல்லது. குளிக்கும்போது, நல்லெண்ணெயில் கிழங்கு மஞ்சள் பொடியைக் கரைத்துத் தடவி, வெந்நீரால் அந்தப் பகுதியை அடித்து சுத்தம் செய்ய வேண்டும். 45 நாட்கள் இப்படிச் செய்யவும். தாய்ப்பால் கொடுக்கிற பெண்களுக்கு இந்தத் தழும்புகள் சுலபமாக மறையும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai, Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.

Chennai – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801