by admin-blog-kh | June 28, 2024 11:04 am
சில நோய்களின் பெயர்களைக் கேட்கும்போதே கொஞ்சம் அச்சம் வரும். அப்படிப் பயமுறுத்தும் பட்டியலில் காசநோயும் முக்கிய இடம்பிடிக்கிறது. ஆனால், அத்தகைய கவலை வேண்டாம். உரிய நேரத்தில் கண்டறியப்பட்டு சரியான சிகிச்சை பெற்றால் காசநோயினை வென்றுவிடலாம். காசநோய் பற்றிய விழிப்புணர்வுதான் தேவை.
காசநோய் குறித்த பல முக்கிய சந்தேகங்களுக்கு இந்தக் கட்டுரையில் விடை காண்போம்.
காய்ச்சல், எடை குறைதல், அதிக பசி, உடல் சோர்வு ஆகியவை காசநோய்
(Tuberculosis) ஏற்பட்டதற்கான பொது அறிகுறிகளாக உள்ளன. இவற்றைத் தாண்டி காசநோய் பாதித்துள்ள உறுப்பினைப் பொறுத்தும் இந்த அறிகுறிகள் மாறும்.
காசநோயால் அதிகம் பாதிக்கப்படும் உறுப்பாக நுரையீரல் உள்ளது. எனவே, 2 வாரங்களுக்கு மேல் சளி, இருமல் தொடர்ந்து தொடர்ந்தால் அது காசநோயின் அறிகுறியாக இருக்கலாம் என்ற எச்சரிக்கை தேவை. சில நேரங்களில் சளியில் ரத்தம் கலந்து வருவதும் காசநோயாக இருக்கக் கூடும்.
நுரையீரல் தவிர்த்து கழுத்துப்பகுதியிலுள்ள சுரப்பிகள், வயிறு, மூளை போன்ற பகுதிகளிலும் காசநோய் தொற்று உண்டாகலாம். மூளையில் காசநோய் ஏற்படும் பட்சத்தில் தலைவலி, பார்வை மங்குதல், நினைவிழப்பு போன்ற அறிகுறிகளை உண்டாக்கும்.
இரண்டு வாரத்துக்கு மேல் சளி, இருமல், காய்ச்சல் இருக்கிறதா?[1]
காசநோய் பாதித்தவர் இருமும்போது, டியூபர்குளோசிஸ் பாக்டீரியா காற்றில் பரவுகிறது. ஆரோக்கியமான நபரின் நுரையீரலுக்குள் இந்த பாக்டீரியா காற்றின் மூலம் செல்லும்போது அவருக்கும் காசநோய் தொற்று உண்டாகிறது.
காசநோய் பாதித்த நபரால் எந்த அளவு பரப்பப்படுகிறது என்பதை வைத்து அது மறைந்திருக்கும் நோயா அல்லது தீவிரமானதா என்று அதன் தன்மையை கணிக்கலாம்.
காசநோயாளி இருமும்போது அருகிலுள்ள எல்லோருக்குமே அது தொற்றினை உண்டாக்கிவிடுவதில்லை. மூன்றில் ஒருவர் அல்லது இருவருக்கு காசநோய்த்தொற்று பரவலாம். ஆனால், சம்பந்தப்பட்டவரின் நோய் எதிர்ப்பு சக்தியானது அந்தத் தொற்றைக் கட்டுப்படுத்தி விடும். நோய் எதிர்ப்பு சக்தியால் கட்டுப்படுத்த இயலாத நிலை உண்டாகும்போது அது ஆரம்ப நிலை காசநோயாக (Primary tuberculosis) மாறும். குறிப்பாக குழந்தைகளிடமும் இதுபோன்ற முதல்நிலை தொற்று உண்டாகும்.
முதல் நிலைத் தொற்றில் இருமல், சளி போன்ற அறிகுறிகள் இருக்காது. மற்றவர்களுக்கும் பரவாது. இதுவே Latent TB என்கிற மறைந்திருக்கிற காசநோய். இவர்களுக்கு பரிசோதனை செய்தால் நார்மலாகவே இருக்கும். ஆனால், Skin test செய்தால் காசநோய் தொற்று ஏற்பட்டிருப்பதன் அறிகுறிகள் உறுதியாகும்.
முதல்நிலைத் தொற்று உண்டானவர்களுக்கு நாளடைவில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது அல்லது நீரிழிவு, சிறுநீரக கோளாறு போன்ற இணைநோய்கள் கட்டுப்படுத்தப்படாதபோது மறைந்திருக்கும் செயல்படும் தீவிர காசநோயாக (Active TB) மாறும்.
இந்திய மக்கள் தொகையில் Latent TB மிகவும் சாதாரணமானது. சராசரியாக நான்கில் ஒருவருக்கு மறைந்திருக்கும் காசநோய் உள்ளது. இதனால் பெரிய சிக்கல்கள் உண்டாகாது.
தீவிரமாகச் செயல்படும் காசநோய் (Active TB) 1000 பேரில் 4 பேருக்கு உள்ளது. இவர்களுக்குத்தான் ஆரோக்கியரீதியாக புதிய சிக்கல்கள் உண்டாகும் சாத்தியம் அதிகம். ஏற்கனவே கூறியதுபோல் கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு, புகைப்பழக்கம், மதுப்பழக்கம், நாள்பட்ட கல்லீரல் நோய், கீமோதெரபி உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தி சிகிச்சையில் இருப்பவர்களுக்கு காசநோய் அச்சுறுத்தலாக அமையும். முக்கியமாக எச்.ஐ.வி பாதிப்பு கொண்டவர்களுக்கு காசநோய் கூடுதல் அச்சுறுத்தலாகும்.
காசநோய் பெரும்பாலும் நுரையீரலையே பாதிக்கிறது. எனவே, இருமல், சளி ஆகியவை அறிகுறிகளாக இருக்கும். இதனால் சளிப்பரிசோதனை செய்து பாக்டீரியா தொற்று உண்டாகியிருப்பதைக் கண்டுபிடிக்கலாம். Microbilogical test என்ற இந்த சோதனை Acid fast முறையில் செய்யப்படும். இந்த சோதனை அத்தனை நுட்பமானதல்ல. இரண்டு முறையாவது சளிப் பரிசோதனை செய்தால்தான் காசநோயைக் கண்டறிய முடியும். 10 பேரில் 4 பேருக்கு இந்த சோதனை முறையில் காசநோயைக் கண்டறிய முடியாமலும் போகலாம்.
எனவே, அடுத்த கட்டமாக மூலக்கூறு பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும். இதற்கு Genexpert test என்று பெயர். இந்தப் பரிசோதனையில் டியூபர்குளோசிஸ் பாக்டீரியாவின்
டி.என்.ஏவை கண்டுபிடித்துவிட முடியும். இந்த இரண்டு சோதனைகளும் Rapid test என்று சொல்கிற இந்த முறையில் அதே நாளிலேயே முடிவுகளைத் தெரிந்துகொள்ள முடியும்.
இரண்டு முறையிலும் கண்டுபிடிக்க முடியாத பட்சத்தில் Culture test செய்யலாம். இதில் முடிவுகளைப் பெற 6 வாரங்களாகும்.
உடலின் மற்ற உறுப்புகளில் காசநோய் ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் Biopsy செய்து காசநோயை உறுதி செய்யலாம். அரிதாக உறுப்புகளுக்கு வெளியே திரவ வடிவில் காசநோய் பரவியிருக்கும் பட்சத்தில் சளிப்பரிசோதனை போல, திரவத்தை சாம்பிளாக எடுத்தும் பரிசோதனை செய்யலாம்.
ஆரம்ப கட்டத்திலேயே காசநோயைக் கண்டறிந்துவிட்டால், சிகிச்சை அளிப்பது மிக மிக எளிது. காசநோய் உறுதியாகும்பட்சத்தில், மற்ற தொற்றுநோய்களைப் போல ஆன்டிபயாடிக்குகளே சிகிச்சையாக வழங்கப்படும். Anti tuberculosis therapy என்ற இந்த பாக்டீரியா எதிர்ப்பு மாத்திரைகள் குறைந்தபட்சம் 3 அல்லது 4 கோர்ஸ்களாக வழங்கப்படும்.
அரசாங்கத்திலிருந்தும் 2 மாதங்களுக்கு ஒரு முறை என 3 கோர்ஸ்களாக மாத்திரைகள் கொடுக்கப்படுகிறது. இந்த மாத்திரைகளை தொடர்ச்சியாக 6 மாதங்கள் உட்கொள்வதன் மூலம்
99.9 சதவிகிதம் காசநோயிலிருந்து விடுபட்டு விட முடியும். மிகவும் சிக்கலான நிலையிலிருக்கும் காசநோய்க்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.
காசநோய் எல்லா சூழல்களிலும் பரவுவதில்லை. நெருக்கமான இடத்தில் அதிக நபர்கள் வசிக்கக் கூடிய சூழல்கள் காசநோய்க்கான தூண்டுதலாக இருக்கும் வாய்ப்பு உண்டு. உதாரணத்துக்கு சிறைச்சாலைக் கைதிகள், சுரங்கங்கள் தோண்டும் பணியில் இருப்பவர்களில் யாருக்கேனும் ஒருவர் காசநோய் பாதிப்புக்கு ஆளானால், மற்றவர்களுக்கும் அது எளிதில் பரவிவிடும்.
காசநோய் பாதித்தவர் குறைந்தது தன்னுடைய வட்டத்தில் இருக்கும் 10 பேருக்காகவாவது அதைப் பரப்பிவிடும் அபாயம் கொண்டவர். எனவே இருமல், சளி போன்ற அறிகுறிகள் தொடர்ச்சியாக இருக்கும்பட்சத்தில் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. இல்லாவிட்டால் காசநோய் கண்டறியப்பட்டவரின் நெருக்கமான வட்டத்தில் இருக்கும் பணியாளர்களும், குடும்பத்தினரும் தொற்றுக்கு ஆளாகும் அபாயம் உண்டு.
குழந்தைகள், வயதானவர்களுக்கு காசநோய் எளிதில் தொற்றும் என்பதால், குடும்பத்தில் யாருக்கேனும் காசநோய் அறிகுறி இருந்தால் மற்றவர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம்.
காசநோய் கண்டறியப்பட்டவரின் வீட்டில் இருக்கும் குழந்தையை காசநோய் அண்டாமல் பார்த்துக் கொள்வது அவசியம். இதற்கென அரசாங்கம்
Tuberculosis preventive therapy என்ற சிகிச்சையை வழங்குகிறது. இந்தத் தடுப்பு மாத்திரைகளை 4 மாதங்கள் முதல் 9 மாதங்கள் வரை எடுத்துக் கொள்ளலாம். குழந்தை ஒரு வயதுக்குட்பட்டதாக இருக்கும்பட்சத்தில் Tuberculosis prevent therapy கட்டாயம்.
காசநோயின் தீவிரம் மற்றும் தொற்று ஏற்பட்ட உறுப்பினைப் பொறுத்து சிகிச்சைக்கான கால அளவு மாறுபடும். பொதுவாக காசநோய் தொற்றும் உறுப்பாக நுரையீரலும், காசநோய்க்கான சிகிச்சை காலம் 6 மாதங்களாகவும் உள்ளது.
இந்த காசநோய் மாத்திரைகளின் பக்கவிளைவாக வயிறு தொடர்பான இரைப்பை அழற்சி (Gastritis) போன்ற பிரச்னைகள் உண்டாகக் கூடும். குறிப்பாக வெறும் வயிற்றில் காசநோய் மாத்திரைகளை உட்கொள்ளும்போது வயிறு தொடர்பான கோளாறுகள் அதிகம் தூண்டப்படும். இதுதவிர வாந்தி, குமட்டல் உண்டாகலாம். அரிதாக ஆயிரத்தில் ஒருவருக்கு கல்லீரல் தொடர்பான பாதிப்புகள் ஏற்படும். மதுப்பழக்கம், கல்லீரல் தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்களுக்கு கல்லீரல் தொந்தரவு ஏற்படும் வாய்ப்பு உண்டு. பொதுவாகவே காசநோய் சிகிச்சையில் இருப்பவர்களின் கல்லீரல் ஆரோக்கியம் மருத்துவர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்படும். இதுதவிர நரம்பியல் ரீதியான பாதிப்புகள், சருமப் பாதிப்புகளும் அரிதாக உண்டாகலாம்.
தாமதமாக காசநோயைக் கண்டறியும் பட்சத்தில் குணமடைந்த பிறகு வேறு பாதிப்புகள் தொடரலாம். உதாரணமாக, காசநோயால் நுரையீரல் பாதிக்கப்பட்டு கண்டறியப்படாத பட்சத்தில் நுரையீரலின் ஆரோக்கியம் வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கும். இதனால் காசநோயிலிருந்து குணமடைந்த பிறகும் நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் உண்டாகலாம். தொடர் கண்காணிப்பு அவசியம்.
காசநோய் கண்டறிதல் விகிதம் அல்லது காசநோய் சிகிச்சை கவரேஜ்: பல ஆண்டுகளாக காசநோய் சிகிச்சை கவரேஜ் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. 2023-ம் ஆண்டில், கவரேஜ் தோராயமாக 80% ஐ எட்டியது, இது காசநோய்களைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதில் முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
குழந்தைப் பருவ காசநோய்: 2022-ம் ஆண்டில் 129,440 தொற்றுகள் குறிப்பிடப்பட்ட குழந்தைகளிடையே ஏற்பட்டிருக்கின்றன.
இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த அதிகரிப்பு இந்தியாவில் குழந்தைகளுக்கு காசநோய் ஏற்படுத்தும் சவாலை எடுத்துக்காட்டுகிறது.
மருந்து-எதிர்ப்பு காசநோய் அறிவிப்புகள்: 2022-ம் ஆண்டில் 64,411 வழக்குகள் பதிவாகி, மருந்து-எதிர்ப்பு காசநோய்க்கான அறிவிப்புகளும் அதிகரித்துள்ளன. காசநோய் நிர்வாகத்தில் மருந்து எதிர்ப்பு என்பது ஒரு முக்கியமான பிரச்னையாக உள்ளது.
தனியார் துறை காசநோய் அறிவிப்புகள்: தனியார் துறையின் காசநோய் அறிவிப்புகளில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
2022-ம் ஆண்டில் 809,484ஐ எட்டியது. காசநோயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் பொது மற்றும் தனியார் துறைகளுக்கு இடையே மேம்படுத்தப்பட்ட அறிக்கை மற்றும் ஒத்துழைப்பை இது பரிந்துரைக்கிறது.
காசநோய் சிகிச்சை வெற்றி விகிதம்: ஒட்டுமொத்தமாக 86.77% வெற்றி விகிதம் பதிவாகியுள்ளது. இது பெரும்பாலான நோயாளிகளுக்குப் பயனுள்ள சிகிச்சை விளைவுகளைக் குறிக்கிறது.
மருந்து-எதிர்ப்பு காசநோய் சிகிச்சை வெற்றி விகிதம்: மருந்து-எதிர்ப்பு காசநோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான வெற்றி விகிதம் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கண்டுள்ளது, இது 67.71%ஐ எட்டியுள்ளது. சவாலானதாக இருந்தாலும், இந்த புள்ளிவிவரங்கள் மிகவும் சிக்கலான காசநோய் வழக்குகளை நிர்வகிப்பதில் முன்னேற்றத்தைக் குறிக்கின்றன.
காசநோய் தடுப்பு சிகிச்சை: காசநோய் தடுப்பு சிகிச்சை (TPT) பெற்ற நபர்களின் எண்ணிக்கை 2023-ம் ஆண்டில் கணிசமான அளவில் – அதாவது 1,023,040 ஆக அதிகரித்துள்ளது. ஆகவே, காச நோயில் கவனம் செலுத்துவோம்!
மாத்திரைகளை சரியாக உட்கொள்வதும், குறிப்பிட்ட காலத்தை முழுமையாக நிறைவு செய்வதும் காசநோய் சிகிச்சையில் முக்கியம். இல்லாவிட்டால் பாக்டீரியாக்களை மருந்துகளால் கட்டுப்படுத்த இயலாத நிலை உண்டாகிவிடும். Drug resistant TB என்று குறிப்பிடப்படும் இந்த நிலையால் மீண்டும் மாத்திரைகள் கொடுக்கும்போது பலன் குறைவாகவும், பக்கவிளைவு அதிகமாகவும் ஆகிவிடலாம். அதிர்ஷ்டவசமாக இதுபோன்ற Drug ressitant TB ஏற்படுகிறவர்களின் சதவிகிதம் 2 சதவிகிதமாக இருப்பது ஓர் ஆறுதல். எனவே முறையான, முழுமையான சிகிச்சையைப் பெறுவது நோயாளியின் கடமை.
Dr. Srinivas Rajagopala[2],
Senior Consultant – Interventional Pulmonology & Sleep Medicine,
Kauvery Hospital Chennai
Source URL: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/proper-treatment-complete-liberation/
Copyright ©2025 Kauvery Blog unless otherwise noted.