by admin-blog-kh | May 31, 2024 6:16 am
இந்த வாழ்க்கையில் நமக்கும் நுண்ணுயிரிகளுக்கும் இடையே தினம் தினம் நாம் அறியாமலே பல முறை சண்டை நடக்கிறது. ஒரு குறிப்பிட்ட நுண்ணுயிரிக்கு எதிராக நமது உடல் நோய் எதிர்ப்பு சக்தியை இழந்துவிட்டால் நோய் ஏற்படுகிறது. நோய் வந்த பிறகு சிகிச்சைதானே பெற முடியும். சில நோய்கள் உயிருக்கு ஆபத்தானவை. அப்படியிருப்பின் சரியான நேரத்தில் சிகிச்சை அளித்தாலும்கூட மரணம் அல்லது கடுமையாக நோயுற்ற தன்மை ஏற்படலாம். போலியோ, டிப்தீரியா, டெட்டனஸ், பெர்டுசிஸ், காசநோய், தட்டம்மை, ரூபெல்லா, நிமோனியா (நிமோகாக்கஸ், ஹீமோபிலஸ்), இன்ஃப்ளூயன்ஸா, கோவிட் 19, ஹெபடைடிஸ் (ஏ, பி) மற்றும் வயிற்றுப்போக்கு நோய்கள் (ரோட்டா வைரஸ்) ஆகியவை அப்படிப்பட்ட அபாய நோய்களில் சில..
நோய்த் தடுப்பு (Immunization) என்பது நோயைப் பெறாமலே நோயை எதிர்க்கும் திறனை உருவாக்குவது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒருவருக்கு நோய் வரும் முன்னரே அதனைத் தடுப்பதற்கு இந்தச் செயல்பாடு அவசியமாகிறது. இந்த தடுப்பு மருந்து வழிமுறை சொட்டு மருந்தாகவோ, மூக்கின் வழியே வழங்கப்படுவதாகவோ, ஊசி மூலமாகச் செலுத்தப்படக்கூடியதாகவோ இருக்கலாம்.
சில பத்தாண்டுகளுக்கு முன் நோய்வாய்ப்படுதல் என்பதும், நோயால் உயிரிழப்பு என்பதும் அதிகமாக இருந்தது. இப்போது அப்படியில்லை என்பதைக் கண்கூடாகக் காண்கிறோம். நோய்த்தொற்றுவது மட்டுமல்ல; உயிரிழப்புகளும்
பெருமளவு குறைந்துள்ளன. பொதுவான பல நோய்கள் நம் சமூகத்தில் காணப்படுவதில்லை (சின்னம்மை, போலியோ, டிப்தீரியா, தட்டம்மை, பிறந்த குழந்தை டெட்டனஸ் போன்றவை). சில நோய்களில் நோய்த்தடுப்பு முறை காரணமாக மொத்த இறப்பு மற்றும் நோயுற்றவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது (இன்ஃப்ளூயன்ஸா, கோவிட்19, ரோட்டா வைரஸ்). அது மட்டுமல்ல… தனிமனிதரின் ஆயுட்காலம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. இதற்கு நோய்த்தடுப்பு முறை மிக முக்கியமான காரணம்.
அண்மைக்கால உதாரணமாக, உலகையே புரட்டிப்போட்ட கொரோனா பரவலைக் கூறலாம். தடுப்பூசிகளே கொரோனா பாதிப்பின் வீரியத்தை பெருமளவில் கட்டுப்படுத்தியது என்பதை நாம் அறிவோம். இதுபோன்ற தடுப்பூசிகளின் வெற்றிக்கனிகளே தடுப்பு மருந்துகளை நமக்கு இன்றியமையாததாக உருவாக்கியிருக்கின்றன.
ஒரு நோயானது தொற்றும் நோய்கள் (Communicable disease), தொற்றா நோய்கள் (Non-communicable disease) ஆகிய இரண்டு பிரிவுகளில் ஒன்றில் வகைப்படுத்தப்படுகிறது. இவற்றில் தொற்றும் நோய்களைத் தடுப்பதற்கு தடுப்பூசிகளே கவசமாகச் செயல்பட்டு நம்மைப் பாதுகாக்கின்றன.
சிலருக்கு குறிப்பிட்ட நோய் பாதித்த பின்னர், அதன் மூலமும் குறிப்பிட்ட எதிர்ப்பு சக்தி கிடைக்கக் கூடும். ஆனால், நோயிலிருந்து மீன்வது என்பது கணிக்க முடியாதது. மேலும், இது ஆபத்தான வழிமுறையும்கூட உதாரணத்துக்கு- பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவது முக்கியம். ஆனால், அது மட்டுமே 100% விபத்துகளைத் தடுக்காது. ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவதால் காயம் மற்றும் உயிரிழப்பைத் தடுக்கலாம். வரும் முன் காப்பதே சிறந்தது. எனவே, நோய் எதிர்ப்பு சக்தியை பெறுவதற்கு தடுப்பூசிகளே சிறந்த வழி..
சிலர் நோய் எதிர்ப்பு சக்தி என்பதை மேலோட்டமாகப் புரிந்துகொள்கின்றனர். ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, நல்ல தூக்கம் உள்ளிட்ட சரியான வாழ்க்கைமுறையே போதும் என்று நம்புகின்றனர். ஆனால், இது மட்டுமே போதாது. சமூகத்தில் தொற்று பரவுதல் என்பது மற்றவர்களின் இருமல், தும்மல், எச்சில் மற்றும் முகமூடி அணிந்து செல்வதைப் பொறுத்தது. ஹெல்மெட் அணிவதால் அவசரமாக வாகனம் ஓட்டலாம் என்று அர்த்தமில்லை. அது பாதுகாப்பை அளிப்பதாகும். அதேபோல, ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன் தடுப்பு மருந்துகளும் மிக அவசியம்.[1]
தடுப்பு மருந்துகள் பக்கவிளைவை உண்டாக்கும் என்பதுபோன்ற வதந்திகளும் பரவுகின்றன. வதந்தியாளர்களில் கல்வியறிவு பெற்றவர்கள், பெறாதவர்கள் என்ற எந்த வித்தியாசமும் இல்லை. தடுப்பு மருந்துகளின் பக்க விளைவுகள் என்பதெல்லாம் மிகமிக அரிதான நிகழ்வுகளே. தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய அனைத்து நோய்களிலும், குறிப்பிட்ட நோயின் பக்க விளைவுகளின் ஆபத்தானது, தடுப்பூசியின் பக்க விளைவுகளைவிட 1000 மடங்கு அதிகமாக உள்ளது. உதாரணமாக….. சாலையைக் கடக்கும்போது, வாகனம் மோதுவதற்கு மிகச் சிறிய சந்தர்ப்பம் உள்ளது. அதனால் இனி நாம் எந்தச் சாலையையும் கடக்கக் கூடாது என்று இதை அர்த்தப்படுத்துவதில்லையே. ஆனால், கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளாததை பெருமையாகப் பேசிக் கொண்டவர்களும் உண்டு.. எனவே, இதுபோன்ற தவறான நம்பிக்கைகள் களையப்பட வேண்டும். மருத்துவ ஆதாரமற்ற தகவல்களை நம்பி, தடுப்பூசிகளைத் தவிர்க்கக் கூடாது. மருத்துவ ஆலோசனையின்றி எந்த முடிவும் எடுக்கவும் கூடாது.
தொற்று என்பது சமூகத்தில் தொடர்ந்து பரவும் நோய்களுடன் தொடர்புடையது. தொற்றானது நோய்க்கு வழிவகுக்கிறது. இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியுடன் தொடர்புடையது. தொற்றும் நோய்களில், பெரும்பாலான மக்கள் தடுப்பூசி மூலம் நோய் எதிர்ப்பு சக்தி பெற்றிருந்தால், தொடர்ந்து பரவுவது நின்றுவிடும். கோவிட் 19 போன்ற சில வைரஸ் தொற்றுகளில் தடுப்பூசிக்குப் பிறகு தொற்று ஏற்படாது என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், நோய்த்தொற்று ஏற்பட்டாலும் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படாது என்று நம்பிக்கையுடன் சொல்லலாம்.
நோய்த்தடுப்பினைப் பெறுவது என்பது பொருளாதார ரீதியிலும் ஒருவரைப் பாதுகாக்கிறது. இலவச சிகிச்சை, மருத்துவ காப்பீடு போன்றவை இன்னும் எல்லோரையும் முழுமையாகப் போய் சேரவில்லை. இந்நிலையில், ஒருவர் நோயாளியானால் அவரது குடும்பமே பெரும் நிதி இழப்பிலோ, பொருளாதாரச் சுமையிலோ சிக்கும் அபாயம் இருக்கிறது. தடுப்பு மருந்துகள் இந்த வகையிலும் ஒருவருக்கு உதவுகிறது.
ஒரு தேசத்துக்கும் ஆரோக்கியமே செல்வம். நோய் காரணமாக இழந்த வேலை நாட்களைக் குறைத்து உற்பத்தித் திறனை அதிகரிப்பதும் நோய்த்தடுப்பே!
குழந்தைகளுக்கான தடுப்பு மருந்து முறை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படுகிறது. குழந்தைக்கு உரிய இடைவெளியில் தேவையான தடுப்பு மருந்தினை நாம் பெற்றுக் கொண்டு விடுகிறோம். ஆனால், வயது வந்தவர்களுக்கான தடுப்பு மருந்து திட்டம் நிறைய சந்தேகங்களையும் குழப்பங்களையும் நம்மிடையே உருவாக்குகிறது. கொரோனா பரவல் போன்ற அசாதாரண சூழலில் பலர் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் பெரும் சிக்கல் இருந்தது.தடுப்பு மருந்து என்பது குழந்தைகளுக்கானது மட்டுமே அல்ல. பெரியவர்களுக்கும் தொற்று நோய்கள் ஏற்படுகின்றன. அதற்கான பாதுகாப்பு நமக்கு இல்லை. கோவிட் 19, நிமோனியா (நிமோகாக்கஸ்), காய்ச்சல் மற்றும் சிங்கிள்ஸ் ஆகியவை இவற்றில் அடங்கும். அதனால், வயது வந்தவர்களுக்கும் தடுப்பூசிகள் அவசியம்.
63 வயதுக்கு மேற்பட்டவர்களும், 18 முதல் 65 வயதுக்கு இடையே ஏதேனும் பாதிப்பினைக் கொண்டவர்களும் (இதய நோய், நாள்பட்ட சுவாச நோய், நீரிழிவு, புற்றுநோய், சிறுநீரக நோய், கல்லீரல் நோய் அல்லது உடல் பருமள்) குடும்ப/ பொது மருத்துவரின் ஆலோசனை பெற்று தேவையான தடுப்பூசிகளைச் செலுத்திக்கொள்ள வேண்டும்.
தற்போதைய நவீன உலகில் பயணங்கள் அதிகரித்துள்ளன. உணவுப்பழக்கத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் நோய்த்தடுப்பு மருந்தின் முக்கியத்துவம் மிகவும் அதிகமாக உள்ளது. எனவே, இதுகுறித்த விழிப்புணர்வை நாம் பெற வேண்டும். நம்மை சுற்றியிருப்பவர்களுக்கும் வரும் முன் காக்கும் முறையை கற்பிக்க உதவ வேண்டும்.
சுகாதார விழிப்புணர்வை அதிகரிக்கவும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உறுதிசெய்யவும் ஆண்டுதோறும் World immunization week என்ற உலக நோய்த்தடுப்பு வாரம் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சி ஏப்ரல் கடைசி வாரத்தில் நடைபெறும்.
2023ம் ஆண்டின் நோய்த்தடுப்பு வாரத்துக்கு The Big Catch-Up என்ற கருப்பொருளை உலக சுகாதார நிறுவனம் முன்வைத்துள்ளது. அதாவது, தொற்றுநோய் பரவலின்போது தடுப்பூசியைத் தவறவிட்ட குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த சமூகங்களைய் நோய்த்தடுப்பு என்ற குடையின் கீழ் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இந்த ஆண்டின் கருப்பொருள் அத்தியாவசிய நோய்த்தடுப்பு அமைந்துள்ளது. எனவே, நோய்த்தடுப்பு அமைப்பை மீட்டெடுக்கவும் நோய்த்தடுப்பு வழங்குவதற்கு ஆரம்ப சுகாதார சேவையை வலுப்படுத்தவும் நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தடுப்பூசிகளைச் செலுத்திக்கொண்டு நம்மையும் நம் சமூகத்தையும் பாதுகாப்போம்!
உலகளாவிய நோய்த்தடுப்புத் திட்டம் என்பது ஆண்டுதோறும் 2.67 கோடி புதிதாகப் பிறந்த குழந்தைகளையும் 2.9 கோடி கர்ப்பிணிகளையும் இலக்காகக் கொண்ட மிகப்பெரிய பொது சுகாதாரத் திட்டங்களில் ஒன்று, இதன்மூலம் 3 வயதுக்குட்பட்ட இறப்பு விகிதம் பெருமளவில் குறைந்திருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் டிப்தீரியா, டெட்டனஸ், போலியோ, நட்டம்மை, ரூபெல்லா, காசநோய், ஹெபடைடிஸ் பி, ரோட்டா வைரஸ் வயிற்றுப்போக்கு, நிமோகாக்கல் நிமோனியா மற்றும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் ஆகிய தடுப்பூசி திட்டங்கள் அமலில் உள்ளன.
Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.
Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801
Source URL: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/save-before-coming/
Copyright ©2025 Kauvery Blog unless otherwise noted.