by admin-blog-kh | June 28, 2024 6:11 am
உணவு, உடற்பயிற்சி, உறக்கம்… இவை மூன்றும் ஒரு பெண்ணின் அனைத்துப் பருவங்களிலும் முக்கியமான பங்கு வசிக்கின்றன. இந்தப் பட்டியலில் மற்றும் இரு முக்கியமான விஷயங்களையும் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவை தடுப்பூசி மற்றும் மன உறுதி.
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் பல பருவங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பருவத்திலும் உடலளவிலும் மனத்தளவிலும் நிறைய மாற்றங்கள் ஏற்படும். இந்த மாற்றங்களுக்கான காரணம் ஹார்மோன், இதோடு, வயது, சுற்றுச்சூழல் காரணிகள், சமூகம் மற்றும் பெண்ணின் நிதி சுதந்திரம் என அனைத்தும் சேர்ந்தே பெண்களின் ஆரோக்கியத்தை உருவாக்கும்.
நம் சுகாதாரத் தேவை என்பது மருத்துவமனையும் மருந்துகளும் மட்டுமல்ல…
உயிரெழுத்துகளில் மிகவும் முக்கியமான ஓர் எழுத்து- ‘உ’. ஆம்.. நம்முடைய உயிரும் உடலும் நன்றாக இயங்க வேண்டுமென்றால், நமக்குத் தேவையான முக்கியமான மூன்று ‘உ’ விஷயங்கள்: உறக்கம், உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு. இவை பொதுவானவை என்றாலும்கூட, பெண்களுக்கு மிகவும் அவசியம். ஏனென்றால், பெரும்பாலான பெண்கள் அவர்களின் குடும்பத்திற்காக இவை மூன்றையும் சமரசம் செய்து கொள்வார்கள். பெரும்பாலான பெண்கள் அதை அன்பாகவும் அனுதாபமாகவும் செய்தாலும் பலருக்கு இது ஒரு நிர்பந்தமாகவே மாறிவிடுகிறது. அவர்களின் உடற்பயிற்சி, உறக்கம், உணவுப் பழக்க வழக்கத்தை சமரசம் செய்துகொள்ளும் சூழ்நிலை ஏற்படுகிறது.
The Important Role Exercise Plays in Managing Diabetes[1]
பெண்களுக்கு அவர்களின் வயதிற்கேற்ற விழிப்புணர்வு மிகவும் முக்கியம். ஒவ்வொரு வயதிலும் என்னென்ன சுகாதார பாதுகாப்புகள் தேவைப்படுகின்றன என்பதை பெண்கள் அறிந்திருக்க வேண்டும். அவ்வாறு அறியும்பட்சத்தில் சமரசம் செய்து கொள்ளாமல், நேரத்தைச் சேமித்து, உடலையும் மனத்தையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.
பதினெட்டு வயது… ஒரு பெண் பள்ளிப் பருவத்தை முடித்து கல்லூரி செல்லும் வயது. ஹார்மோன்கள் அதிகமா உற்பத்தியாகக் கூடிய நேரம் அது. மேலும் மாதவிடாய் சரியாக இயங்கக்கூடிய நேரமும்கூட. அதனால், அவர்களுடைய மாதவிடாய் சுகாதாரம் பற்றிய முழு விவரமும் அறிய வேண்டிய வயது அது. அதாவது மாதவிடாய்க் காலத்தில் அவர்களுடைய உடல் உறுப்புகளை எப்படி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்? மாதவிடாய் நாட்களில் எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற தெளிவு இருத்தல் அவசியம். மேலும், நன்றாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். நன்றாகத் தூங்க வேண்டும். மன உறுதியுடன் இருக்க வேண்டும்.
சிலருக்கு மாதவிடாயின்போது அதிகமாக ரத்தப்போக்கு ஏற்பட்டு இரும்புச் சத்து குறைவாகும். இதன் விளைவாக, ரத்தச்சோகை ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும். அதனால் சோர்வாகவோ, அசதியாகவும் உணரும்போது, ‘நமக்கு மட்டும் ஏன் இப்படி ஏற்படுகிறது, இவ்வளவு சிறிய வயதில் நாம் சோர்ந்து படுத்து கொள்கிறோமே’ என்கிற ஒரு பயம் அவர்களை அறியாமல் வரும். அதனால், 18 வயதில் பெண்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை மருத்துவர்களோ தாய்மார்களோ பெண் குழந்தைகளுக்கு எடுத்து சொல்ல வேண்டும். மாதவிடாய்ச் சுழற்சியின் போது எவ்வளவு ரத்தப்போக்கு ஏற்படுகிறது, எவ்வளவு நாப்கின் உபயோகம் ஆகிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
மாதவிடாய் நேரத்தில் அதிக அளவில் வயிற்று வலி ஏற்பட்டால், மருத்துவரிடம் ஆலோசித்து தேவையெனில் அல்ட்ரா சவுண்ட்[2] பெல்விஸ் (USG) பரிசோதனை செய்து கொள்ளலாம். கர்ப்பப்பைமற்றும் கருமுட்டை உற்பத்தியாகும் ஓவரிஸ்… இவை இரண்டும் எப்படி இருக்கிறது என்பதையும் பரிசோதனை மூலம் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
சில பெண்களுக்கு கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் இருக்கலாம். முன்னரே பரிசோதனை செய்துகொண்டால் அதை எளிதாகச் சரிசெய்து விடலாம். எண்டோமெட்ரியாசிஸ் (அடினோமயோசிஸ்) என்று சொல்லக்கூடிய கர்ப்பப்பையின் உள்பகுதியில் சிறிது தடித்து இருப்பதால், மாதவிடாய் ரத்தப்போக்கு அதிகமாக இருக்கிறது போன்ற பிரச்னை இருக்கலாம். தைராய்டு ஹார்மோன் குறைவாகச் சுரக்கலாம் அல்லது அதிகமாக சுரக்கலாம். இவற்றையெல்லாம் 18-30 வயதுக்குள் பரிசோதனை செய்துகொள்வது
பல பிரச்னைகளைத் தவிர்க்க உதவும். அதனால் ஹீமோகுளோபின், தைராய்டு, அல்ட்ரா சவுண்ட் ஆகிய சோதனைகள் முக்கியம். மார்பகத்தில் வலி இருக்கும்பட்சத்தில் மார்பகப் பரிசோதனை செய்துகொள்வது மிக அவசியம். நாம் நமக்கே எளிதாக மார்பகப் பரிசோதனை செய்து கொள்ளலாம். மார்பகத்தை நம் கையால் பரிசோதனை செய்து, ஏதேனும் உருண்டையாக கொழுப்புக் கட்டி போல இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அப்படி இருப்பதற்கான வாய்ப்பு இந்தப் பருவத்தில் இருக்கலாம். அப்படி இருந்தால் மருத்துவரிடம் தகுந்த ஆலோசனை பெற வேண்டும். தேவையெனில், அல்ட்ரா சவுண்ட் கதிர் வீச்சில் கொழுப்புக் கட்டி இருக்கிறதா என்று பார்க்கலாம். இப்பரிசோதனையின் போது வலிகள் இருக்காது. இது மிகவும் எளிதான பரிசோதனையே.
பெண்கள் 18 வயதை அடைந்தவுடனே சில பெற்றோர் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க அதற்கான வேலைகளை தொடங்குவார்கள். ஆனால், 21 வயதுதான் பெண்களுக்கான திருமண வயது.
18 வயது இளம்பெண் அப்போதுதான் பள்ளிப் பருவத்தை முடித்துக்கொண்டு, கல்லூரிக்குச் செல்ல வேண்டிய நிலையில் இருப்பார். இவர்களுக்குச் சொல்ல வேண்டிய முக்கியமான ஒரு விஷயம் உண்டு. இவர்கள் 13 வயதிலிருந்தே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக 13-23 வயதிற்குள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம்.
தற்போது 40-45 வயதுகளில் இருப்பவர்கள் மேற்கூறியுள்ள பரிசோதனைகளோடு மேமோகிராம் பரிசோதனையும் செய்து கொள்ள வேண்டும். இதை எக்ஸ்ரே மேமோகிராம் அல்லது டிஜிட்டல் மேமோகிராம் என்று சொல்லுவோம். 40 வயதுக்குள் இருப்பவர்களை இப்பரிசோதனை செய்து கொள்ளப் பரிந்துரைப்பதில்லை. காரணம் இப்பரிசோதனையில் கதிர்வீச்சு அதிகம். 40 வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கு ஹார்மோன் மாற்றத்தால் மார்பகத்தின் நார்ச்சத்து திசுவின் அடர்த்தி அதிகமாகி்றது. அதனால், நாம் சுய பரிசோதனை செய்யும்போது எதையேனும் தவிர்ப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதேபோல மிகச் சிறியதாக இருக்கின்ற விஷயத்தை அல்ட்ரா சவுண்ட் மூலம் கண்டறிய முடியாது. அதனால் மேமோகிராம் பரிசோதனை மிகவும் அவசியம். இந்த மேமோகிராம் சோதனை 40 வயதில் ஆரம்பித்து 80 வயது வரையுள்ள பெண்மணிகள் வரை பரிந்துரைக்கப்படுவதுண்டு. இதன் மூலம் மார்பகப் புற்றுநோயை எளிதில் கண்டறிந்து விடலாம். அதற்கான சிகிச்சையையும் விரைவில் ஆரம்பித்து விடலாம். ஆகவே, 40 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இது மிகவும் அவசியம்.
45-55 வயது பெரிமெனோபாஸ் பருவம்[3]. பெரிமெனோபாஸ் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையின் ஒரு கட்டம். அவள் உடல் மெனோபாஸ் பருவத்துக்கு மாறத் தொடங்குகிறது. பெரிமெனோபாஸ் காலத்தில், ஒரு பெண்ணின் கருப்பைகள் குறைவான ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோனை உற்பத்தி செய்கின்றன. இவை மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன்கள்.
இப்பருவத்தில் மாதவிடாய் அதிகமாக ஏற்படக்கூடிய நிலை வரும். அப்போது, ரத்தச்சோகை இருக்கிறதா, ஹார்மோனல் இன்பாலன்ஸ் இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்க வேண்டும். ஏற்கெனவே சொல்லியது போல 30-45 வயதிலேயே உடல் பருமனை அதிகப்படுத்திக் கொண்டு, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பவர்களுக்கு நீரிழிவுக் குறைபாடு இருந்தால், பெரிமெனோபாஸ் காலகட்டத்தில் அவர்களின் இதயத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். காரணம், மாதவிடாய் நிற்கும்போது இதயப் பாதுகாப்பு குறைந்துவிடும். அதனால் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதிலும் 30-40 வயது பெண்மணிகள் சரியாகச் சாப்பிடாமல், தூங்காமல் முழு நேரமும் வேலையை செய்துகொண்டே, அவர்களை கவனித்துக் கொள்ளாமல் அலட்சியமாக இருந்திருப்பார்கள். அதனால் ‘15 வருடமாக நீரிழிவு நோய் பாதிக்கப்பட்டுள்ளேன்’ என்று சொல்பவர்கள் எக்கோ, த்ரெட்மில், ஈ.சி.ஜி செய்ய வேண்டும். இந்தப் பரிசோதனையின் மூலம் இதயத்தின் பம்பிங் கெபாசிடி தெரிய வரும். த்ரெட்மில்லில் நடக்கும் போது, நம் இதயத்தில் ஏதேனும் அடைப்பு இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளலாம். ஆகையால் 40 வயது கடந்த பெண்மணிகள் கட்டாயம் இதய மதிப்பீடு(Cardiac Evaluation) செய்து கொள்ள வேண்டும். இதைத் தவிர, ஒருவேளை மூட்டு வலி தொடங்கினால், CT கரோனரி கால்சியம் ஸ்கோரிங்(CT Coronary Calcium Scoring) என்கிற பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும். ரத்தக் குழாய்களில் இருக்கக்கூடிய டெபாசிட்டை வைத்து ஒரு ஸ்கோரிங் கொடுப்பார்கள். அந்த ஸ்கோரிங் அதிகமாக இருந்தால், நாம் அதற்கு ஏற்ற ஆலோசனைகளைப் பெற்று அவற்றைப் பின்பற்ற வேண்டும்.
30-45 வயதுகளில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பெண்மணியும், அவர்களின் மாதவிடாய்ப் பருவம் தொடர்ச்சியாக இருந்தாலும் கூட, அவர்களின் மாதவிடாய் சீராக இருக்கிறதா, இதனால் அவர்களுக்கு ரத்தச்சோகை, தைராய்டு பிரச்னை இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்து தெரிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு ஹார்மோனல் மாற்றங்கள் இருக்கக்கூடும். முக்கியமாக 30-45 வயதிற்குள் அவர்களுடைய உடல்பருமன் அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகம். காரணம், அவர்களுடைய மூன்று ‘உ’க்களை (உணவுமுறையையும் உடற்பயிற்சியையும் உறக்கத்தையும்) அதிகம் தியாகம் செய்வதுதான். அவர்களுடைய கவனம் முழுவதும் குழந்தைகளை வளர்ப்பதிலும், கணவனைக் கவனிப்பதிலும்தான் இருக்கும். மேலும் பணிபுரியும் பெண்மணியாக இருந்தால் அவர்களின் உணவில் கவனம் இருக்காது. காலையில் சாப்பிடாமல் அவசரமாக வேலைக்குப் புறப்படுவார்கள். வீடு திரும்பிய பிறகும் உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், கொஞ்சமாகச் சாப்பிட்டு, கொஞ்சமாகத் தூங்கி, காலையில் எழுந்து அரக்கப்பறக்க வேலைக்குச் செல்வார்கள். நாம் மிகவும் வேகமாக செயல்படக்கூடிய உலகில் இருப்பதால், எதற்கும் நேரம் செலவிட முடியாத ஒரு சூழ்நிலை 30-45 வயதிற்குள் இருப்பவர்களுக்கு மிக அதிகமாகவே இருக்கும். வழக்கம் போல யாராவது ஒருவர் உதவி செய்வார்கள். எடுத்துக்காட்டாக அப்பா அம்மா வீட்டிலிருந்து உணவு வந்துவிடும் அல்லது வெளியில் ஆர்டர் செய்து சாப்பிடுவார்கள். இவ்வாறே 10-15 வருடம் கடந்து விடுவார்கள். இதன் விளைவாக உடல்பருமன் அதிகரிக்கும். 30-40 வயதுக்குள்தான் வளர்சிதை மாற்ற நோய்கள், தொற்று நோய்கள் ஏற்படக்கூடும். அதாவது உடல் பருமனால் வரக்கூடிய வளர்சிதை மாற்ற நோய்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். ரத்த அழுத்தம் மெதுவாக உயரும்.
அப்போது அந்தப் பெண்மணியின் குழந்தைகள் பதின்பருத்தில் இருப்பார்கள். அம்மா பேச்சைக் கேட்க மாட்டார்கள், படிக்க மாட்டார்கள். இதெல்லாம் அப்பெண்மணிக்கு கோபத்தை உண்டு பண்ணும். பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள். இந்த மாதிரியான பெண்மணிகள் வளர்சிதை மாற்ற நோய்க்குறி(metabolic syndrome), நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், கொழுப்புச் சத்து அதிகரித்தல்… இவற்றையெல்லாம் நிச்சயம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த 10-15 ஆண்டுகளில் நம் உடலில் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், கொழுப்புச் சத்து வராமல் தடுத்து விட்டால், 45-வயதிற்கு மேல் அதனால் வரக்கூடிய சிக்கல்கள் வராமல் தடுக்கலாம். ஆனால், 30-45 வயதில் உள்ள பெரும்பாலானோர் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், கொழுப்புச் சத்து அதிகரிக்கும்படியான வாழ்க்கை முறையை வைத்துக் கொள்வார்கள். அது தவறு. 30-40 வயதுக்குள் ரத்தச்சோகை, ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இதன் பிறகு அடிப்படையாக மார்பக பரிசோதனை செய்து கொள்வது முக்கியம். 18 வயதிலிருந்தே கர்ப்பப்பையை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அந்தப் பரிசோதனையை 3 வருடத்திற்கு ஒரு முறை கர்ப்பப்பை வாய் ஸ்கிரீனிங் பரிசோதனை செய்து கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருந்தால் அதை சரிசெய்ய வேண்டும். இதை தவிர அடிப்படையான செஸ்ட் எக்ஸ்ரே எடுத்து இருமல் சளி ஏதேனும் இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும். மிக முக்கியமாக ரத்தப் பரிசோதனை, மார்பக பரிசோதனை, கர்ப்பப்பை பரிசோதனையை செய்து கொள்வது மிகவும் அவசியம்.
50 வயதுக்கு மேல் உள்ளவர்கள், மாதவிடாய் நின்றுவிட்டது என்பதை எப்படி கண்டறிவது? 12 மாதங்களுக்கு மேல் இது வராமல் இருந்தால், உங்களுக்கு மாதவிடாய் நின்றுவிட்டது என்று அர்த்தம். இந்த மாதிரி நிலையில் இருப்பவர்கள் அல்ட்ரா சவுண்ட் எடுத்து, கர்ப்பப்பையில் மாதவிடாய் நிறுத்த அறிகுறிகள் இருக்கின்றனவா என சோதிக்க வேண்டும். அது மிகவும் அவசியம். நீண்ட நாள் கழித்து மீண்டும் மாதவிடாய் ஏற்பட்டால், கர்ப்பப்பைக்குள் ஏதேனும் பிரச்னை ஆரம்பிக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கான ஆலோசனையையும் மருத்துவரிடம் பெற வேண்டும். இதைத் தவிர பிந்தைய மாதவிடாயின் போது dexa scan பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் பிந்தைய மாதவிடாயின் போது எலும்பு தேய்மானம் ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இது மூட்டுவலி சம்பந்தமானது மட்டும் இல்லை… Generalized Osteoporosis ஆகும். அதாவது நம்முடைய தலையிலிருந்து கால் வரை பொதுவாகவே எலும்புத் தேய்மானம் ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் நாம் தவறி கீழே விழுந்தால், எலும்பு முறிவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால் பிந்தைய மாதவிடாய்க் காலத்தில் எலும்புகளை பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியம்.
மாதவிடாய் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் உடலியல் பகுதியாகும். பருவமடையும் நிலை, தொடர் மாதவிடாய், மெனோபாஸ் இவை மூன்றும் உடலியல் சம்பந்தப்பட்டது. இதனை நோயாக நினைக்க வேண்டாம். ஆனால், பல ஹார்மோனல் மாற்றங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வு ஏற்படும்போதும், மாதவிடாயின் போதும் ரத்தப்போக்கு அதிகமாக இருக்கிறது, வலி இருக்கிறது போன்ற பிரச்னைகள் வரலாம். நேர நிர்வாகம் கடுமையாக இருக்கும் போது, அப்பெண்களின் மனநிலையும் மிகவும் மோசமாக இருக்கும். அந்த மாதிரி நேரத்தில் வீட்டிலிருப்பவர்கள், வேலை செய்பவர்களும் சரி… அதனை இயல்பாக எடுத்துக் கொள்ளாமல், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு சிறிது ஓய்வு கொடுத்து அவளை நல்ல முறையில் பார்த்துக் கொண்டால் நன்றாக இருக்கும்.
சில பெண்களுக்கு டியூப்பிலேயே கருமுட்டை உருவாகி, டியூப் வெடித்து மிகவும் மோசமான நிலையை அடைவதற்கான அபாயம் இருக்கிறது. இதற்கு இடம் மாறிய கர்ப்பம் (ectopic
pregnancy) என்று கூறுவோம். அடுத்ததாக பிறவி நோய்(Congenital Disease) ஏற்பட வாய்ப்பிருக்கிறது. பிறவி நோய் காரணமாக, குழந்தை சரியாக உருவாகாமல் இருந்தால், முதலிலே பார்த்து கண்டறிந்து, அந்தக் கர்ப்பத்தை முதலிலே தடுத்துக் கொள்ளலாம். அதற்கேற்ப குழந்தையின் இதயத் துடிப்பு, ஸ்கேன், ரத்தப் பரிசோதனை போன்ற சில பரிசோதனைகளை கர்ப்ப காலத்தில் செய்துகொள்வது நல்லது.
அடுத்ததாக… பெண்கள்தாம் வீட்டுவேலை செய்ய வேண்டும் என்பது பலருடைய எதிர்பார்ப்பு. ஆனால், வீட்டு வேலை என்பது கணவன் – மனைவி உள்பட அனைவரும் பகிர்ந்து செய்வதாகவே இருக்க வேண்டும். இப்படியிருந்தால் பெண்களால் வீட்டிலும் வெளியிலும் அனைத்தையும் எளிதாக நிர்வகிக்க முடியும்.
அதேபோல வீட்டில் இருப்பவர்களுடன் நெருக்கமான தொடர்பும் ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையும் இருக்க வேண்டும். இது பெண்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
70-80 வயதுடையவர்கள் கூட கூச்சம் உடையவர்களாக இருப்பார்கள். அதாவது இவ்வளவு நாள் மாதவிடாய் இல்லையே, திடீரென்று மாதவிடாய் வந்துவிட்டதே, இதை எப்படி நாம் யாரிடமாவது சொல்வது என்று தயக்கம் கொள்வது… அப்படி தயக்கம் கொள்ளாமல், உடனடியாக மருத்துவரை அணுகி என்ன மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று விவரித்து அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பொதுவாக எண்டோமேட்ரியம் புற்றுநோய் இருப்பவர்களுக்கு மீண்டும் ரத்தப்போக்கு ஆரம்பிக்கும். அதை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்தால் உடனடியாக சிகிச்சை அளித்து 100% குணப்படுத்த முடியும். அதனால், எந்த விதமான தொந்தரவுகள் இருந்தாலும், அதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சரி செய்ய வேண்டும்.
பொதுவாகவே மருந்து சாப்பிடுவதை விட நல்ல வாழ்க்கைமுறையே சிறந்தது. நாம் வாழ்க்கைமுறையை நன்றாக அமைத்துக் கொள்ள வேண்டும். நாம் விழிப்புணர்வுடன் ஸ்க்ரீனிங் டெஸ்ட் செய்து கொண்டால், நாம் நினைத்த நல்ல வாழ்க்கை முறையை இறுதி வரை வாழ முடியும்!
சோர்வாகவோ, அசதியாகவும் உணரும் போது, ‘நமக்கு மட்டும் ஏன் இப்படி ஏற்படுகிறது, இவ்வளவு சிறிய வயதில் நாம் சோர்ந்து படுத்து கொள்கிறோமே’ என்கிற
ஒரு பயம் அவர்களை அறியாமலே வரும்.
ஒரு பெண்ணாக இருப்பதில் ஒரு தனித்துவமான அம்சம் உள்ளது. நாம் பெண் குழந்தையாகப் பிறக்கும் போது நம் வாழ்க்கையில் நமக்கு பல நிலைகள் உள்ளன. குழந்தை, வயது வந்தோர், பின் முதுமைப் பருவத்தில் மூத்தோர் என அந்த நிலைகளை நாம் இயல்பாகச் சொல்லிச் செல்கிறோம். இதுவே ஒரு பெண்ணுக்கு வரும்போது இந்த நிலைகள் அவ்வளவு எளிதானவையாக இருப்பதில்லை. ஒரு குழந்தையாகப் பிறக்கும் அவள் வளர் இளம்பருவத்தில் பருவமடைந்து டீனேஜ் எனும் இளமைப் பருவத்தில் கலந்துகொள்கிறாள். பின்னர் 18 வயதில் முழுமையான பெண்ணாக மாறுகிறாள். இதைத் தொடர்ந்து அவள் வாழ்க்கையில் பல்வேறு ஹார்மோன் மாற்றங்களுக்கு உள்ளாகிறாள். இது அவளது வயது மற்றும் சூழலுக்கேற்ப அமைகிறது.
வாழ்க்கை முழுக்கவே ஒரு பெண் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது, அதோடு, உயிரியல் ரீதியான மாற்றங்கள் அவளுக்கு எல்லா காலகட்டங்களிலும் நிகழ்கின்றன. உயிரியல் மாற்றங்கள் காரணமாகவும் மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தில் பிரச்னைகள் எழுகின்றன.
பெண்கள் பல சவால்களைத் தாண்டி சமூகத்தின் பல அம்சங்களிலும் முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கின்றனர். பெண்கள் இந்த நிலையை எட்டுவதற்கு எத்தனையோ ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன. இந்த வெற்றி தொடரப்பட பெண்கள் தங்கள் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். வேலை-வாழ்க்கை சமன்பாடு, நேர நிர்வாகம், குடும்பம் சந்திக்கும் சமநிலை, வாழ்க்கைச் சமநிலை ஆகியவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
பெண்களின் ஆரோக்கியத்தை வளர்ப்பதும் பாதுகாப்பதுமே ஒரு நாட்டின் ஆரோக்கியத்தின் அடித்தளம், ஏனெனில், பெண்களின் ஆரோக்கியம் என்பது ஒரு குடும்பத்தின் ஆரோக்கியம்; சமூகத்தின் ஆரோக்கியம். ஆகவே, இவ்வுலகின் மிக முக்கியமான தூண்களான பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும், உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல; மன ஆரோக்கியத்திலும் பெண்களுக்குத் தனித்துவமான மருத்துவ வசதிகள் மூலம் வழிகாட்டுதல் தேவை. ஒவ்வொரு பெண்ணும் ஆரோக்கிய விஷயங்கள் எல்லாவற்றையும் அறிந்திருப்பதே சமூக ஆரோக்கியத்தைக் காப்பதற்கான எளிதான வழி. ஆகவே பெண் நலம் பேணுவோம்!
Dr. Kavitha Sundaravadanam[4],
Family Physician,
Kauvery Hospital Alwarpet
Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.
Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801
Source URL: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/three-important-u/
Copyright ©2025 Kauvery Blog unless otherwise noted.