Love to Live. Live to Love.
This article is dedicated to raising awareness about the significance of World Elders Day, celebrated on October 1st, and the importance of Mental Health Awareness Day, observed on October 10th.
தோழர்களே தோழிகளே, வாழ்வின் கொடையாக நாம் மண் வரும் பொழுது இரு தோழர்கள் அல்லது தோழிகள்! வேணாம் தோழிகள் என்றே வைத்துக் கொள்வோமே, நமக்கு அருளப்படுகிறது. ஒன்று நமது உடல் மற்றொன்று உள்ளம். இவ்விரு தோழியரையும் எவ்வாறு பேண வேண்டும், போற்ற வேண்டும், ஆற்றல் கொண்டவர்களாக மாற்ற வேண்டும்? இக்கேள்விகளுக்கு விடை கொடுத்து வழிகாட்டுவதே கல்வி.
இவ்விரு தோழியரையும் எவ்வாறு நட்பு பாராட்டி வளர்த்தெடுப்பது? இரு தோழியருமே ஒருவரை ஒருவர் நிகர்த்து, நிரப்பி, பாராட்டியே வளர முடியும், அதுவே சிறந்த வாழ்க்கை.
பயிற்சி
ஒவ்வொரு தினமும் இவ்விரு தோழியருக்கும் பதினைந்து நிமிடம் ஒவ்வொருவருக்கும் (இருவரும் கோபக்காரிகள் தோழர்களே, சரிபாதி வழங்க வேண்டும் மறவாதீர் எச்சரிக்கை) பயிற்சிக்கென வழங்க வேண்டும். உடலுக்கு நிச்சயம் யோகா அல்லது சிறிய அளவில் எடை தூக்கி பயிற்சி. உள்ளத்துக்கு தனியறையில் 15 நிமிடம் கண்மூடி அமர்தல், அந்த நேரத்தில் பல ஆயிரம் எண்ணமெழும். கவனியுங்கள். ஆயிரம் எண்ணங்களுடன் ஆரம்பித்து சில நூறு எண்ணங்களாக குறைய ஆரம்பித்தால் நீங்கள் வளர்கிறீர்கள்! ஆம் இங்கு குறைவதே நிறைவு. உள்ளம் புத்துணர்வு கொண்டு இயங்க நாள் ஒன்றுக்கு ஒரே ஒரு பத்தி, ஒரு புது விஷயம் உங்கள் தாய்மொழியில் வாசியுங்கள்.
உடலில் சக்கரை மூளை செல்களுக்கு மட்டுமே இன்சுலின் இல்லாமல் உள்செல்ல முடியும், அது உயிர் காக்க பிரம்மம் வகுத்தது. ஆனால் ஓர் விதிவிலக்குண்டு ! உடற்பயிற்சி செய்யும் பொழுது மட்டும் நம் தசைகளுக்கு, அதன் செல்களுக்குள் இன்சுலின் இல்லாமலே சக்கரை உள்ளே செல்ல முடியும், அதன் பொருள் நாம் சக்கரை நோயை வெல்கிறோம் உடற்பயிற்சி செய்யும் தோறும்.
உறக்கம்
நல்லுறக்கம் போல் உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்வளிப்பது பிறிதல்ல. சிறிது உடற்பயிற்சியும், வெந்நீர்க் குளியலும், சிறிதுணவும், அன்று முழுதும் நிகழ்ந்த அனைத்து உள்ளக்குப்பைகளையும் வெளிவீசி தூங்குங்கள். உலகின் தலைசிறந்த மருத்துவன் தூக்கமே.
ஆதவன் கரங்கள்
குழவிக்கு அன்னையின் அணைக்கும் இரு கரங்கள், நாமனைவருக்கும் நம் பெருந்தந்தை வெய்யோன் (சூரியன் ) பல்லாயிரம் கோடி கரங்களுடன் ஒவ்வொரு நாளும் மாறாநெறி கொண்டு அணைத்து வாழ்விக்கிறார்.
ஆதித்யனின் கரங்களை அனுதினமும் ஆரத்தழுவுங்கள் தோழர்களே, அவனே நம் உடலுள்ளமெனும் இரு தோழியரை மேன்மையுறச் செய்பவன்.
ஆம் தோழர்களே வாழ்வினிது வாழ்வினிது வாழ்வினிது.
Dr. Velmurugan Deisingh
Senior Consultant Anaesthesiologist,
Kauvery Hospital, Chennai