Poem

ஐயா வணக்கம். நேற்று இரவு நலமாக வீடு திரும்பினேன்.
உங்கள் அணுகுமுறை இந்த கவிஞன் விரும்பியது போலவே இருந்தது.
ஒரு மருத்துவருக்கான ப்ரிஷ்க்ரிப்ஷன்

தயங்கித் தயங்கி
இன்று ஒரு மருத்துவரிடம் போகிறேன்

மருத்துவராக இருக்கும் நீங்கள்
அவர் ஒரு ஆணாகவோ பெண்ணாகவோ
இருக்கக் கூடும்
நான் உங்களிடம்
பயத்துடனும்
குழப்பத்துடனும் வருகிறேன்

நான் சும்மாவே
எல்லாவற்றுக்கும் பயப்படுகிறவன்
நீங்கள் என்னை பயமுறுத்தக் கூடாது
எனது சாவின் வாசல்
நான் நினைத்ததைவிடவும்
அண்மையில்தான் இருக்கிறது
என்பதை நீங்கள் காட்டித்தரக்கூடாது
என் உடலிலிருந்து
என்னை நிலைகுலையச் செய்யும்
எதையும் நீங்கள் கண்டுபிடிக்கக் கூடாது
என்னை எந்த ஒரு சிக்கலான
சுழல் வட்டப்பாதையிலும்
நீங்கள் செலுத்திவிடக்கூடாது
என் வாழ்க்கைமுறையை
நீங்கள் அவமதிக்கக் கூடாது
என்னால் பின்பற்ற முடியாத ஒழுங்குகளை
நீங்கள் எனக்கு பரிந்துரைக்கக் கூடாது

மாறாக என் நோய்மைகள்
எல்லோருக்கும் வந்து செல்கக்கூடியவை
என்று நீங்கள் எனக்குச் சொல்ல வேண்டும்
உங்களுக்கும் கூட
இந்தப் பிரச்சினை இருக்கிறது
என்று நீங்கள் சொல்ல வேண்டும்
என் வழக்கமான பணிகளை செய்யலாம்
என்று நீங்கள் சொல்ல வேண்டும்.
பொதுவாக நோய்மைகள் குறித்த
என் பயங்கள்

என் கற்பனைகள் மட்டுமே என்று
நீங்கள் எனக்குச் சொல்ல வேண்டும்
மருத்துகளை எழுதும்போது
என் கண்களை நீங்கள்
நேராக பார்க்க வேண்டும்
விடைபெறும்போது
எனது ஆடை நன்றாக இருக்கிறது
என்று சொல்ல வேண்டும்

எல்லாவற்றையும் விட
ஒன்று இருக்கிறது
உங்களிடம் எந்த வாசல் வழியாக வந்தேனோ
அதே வாசல் வழியாக
எந்த பெரிய குளறுபடியும் இல்லாமல்
என்னை பத்திரமாக நீங்கள்
அனுப்பிவிடவேண்டும்
மனுஷ்ய புத்திரன்

இப்படியாக பத்திரமாக என்னை அனுப்பி வைத்த உங்கள் நேசத்திற்கு நன்றி!