கார்டியோவாஸ்குலர் நோய் (CVD) என்பது இதயம் அல்லது ரத்த நாளங்களை (நரம்புகள் மற்றும் தமனிகள்) பாதிக்கும் நோய்களின் ஒரு வகை ஆகும். உயர் ரத்த அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவு, அதிக கொழுப்பு, நீரிழிவு, காற்று மாசுபாடு, உடல் பருமன், புகையிலை பயன்பாடு, சிறுநீரக நோய், உடல் செயலற்ற தன்மை, ஆல்கஹால் போன்ற தீங்கு விளைவிக்கும் பயன்பாடு உள்ளிட்ட சமூக, பொருளாதார, நடத்தை மற்றும் சுற்றுச்சூழல் ஆபத்து காரணிகளின் கலவையால் இது ஏற்படலாம். மன அழுத்தம், குடும்ப வரலாறு, இனப் பின்னணி, பாலினம், வயது ஆகியவையும் ஒரு நபரின் இதய நோய் அபாயத்தை பாதிக்கலாம்.
இதயம்
மனித இதயம் ஒரு முஷ்டியின் அளவு மட்டுமே. ஆனால், அது உடலின் வலிமையான தசை. ஒவ்வொரு இதயத்துடிப்பிலும், இதயம் ரத்தத்தை பம்ப் செய்கிறது. உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை கொண்டு செல்கிறது.
இதயம் என்பது ஒரு தசை உறுப்பு. ரத்தம் மற்றும் ரத்த நாளங்களால் ஆனது. இது ரத்த ஓட்ட அமைப்பு வழியாக உடல் முழுவதும் ரத்தத்தைச் செலுத்துகிறது.
பம்ப் செய்யப்பட்ட ரத்தம், ரத்த நாளங்கள் வழியாக திசுக்கள் மற்றும் உறுப்புகளுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை எடுத்துச் செல்கிறது. அதே நேரத்தில் கார்பன் டை ஆக்சைடு போன்ற வளர்சிதை மாற்றக் கழிவுகளை வெளியே எடுத்துச் செல்கிறது.
மனித இதயம் ஒரு பெரிய முஷ்டியின் அளவு இருக்கும். இது நுரையீரலுக்கு இடையில், மார்பின் நடுவில், மையத்துக்குச் சற்று இடதுபுறமாக அமைந்திருக்கும்.
ஒவ்வொரு நாளும் இதயம் சுமார் 100,000 முறை துடிக்கிறது. 7,500 லிட்டர் ரத்தத்தை பம்ப் செய்கிறது.
இதய நோய்
கரோனரி இதய நோய், சில நேரங்களில் கரோனரி தமனி நோய் அல்லது இஸ்கிமிக் இதய நோய் என்று அழைக்கப்படுகிறது. இது இதய நோயின் மிகவும் பொதுவான வகையாகும். இது இதய தசைகளுக்கு ரத்தத்தை வழங்கும் குறுகலான கரோனரி தமனிகளால் ஏற்படும் இதய பிரச்சினைகளைக் குறிக்கிறது.
சிலருக்கு கரோனரி இதய நோயின் முதல் அறிகுறியே மாரடைப்பாக இருக்கலாம்.
மாரடைப்பு
மாரடைப்பு, அல்லது ஹார்ட் அட்டாக்… பொதுவாக ரத்த உறைவு, இதயத்துக்கு ரத்த ஓட்டத்தை துண்டிக்கும்போது ஏற்படுகிறது. ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இல்லாமல், இதய தசை இறக்கத் தொடங்குகிறது. உடனடியாக மருத்துவக் கவனிப்பு மற்றும் சிகிச்சையைப் பெற்றால் மாரடைப்பு ஆபத்தானது அல்ல. அது இதயத்துக்கு நீடித்த சேதத்தை ஏற்படுத்தும் என்பதால் கவனம் அவசியம்.
அறிகுறிகள்
இதய நோயின் அறிகுறிகள் பின்வருவனவற்றை உள்ளடக்கியிருக்கலாம்….
- மார்பு வலி, மார்பு இறுக்கம், மார்பு அழுத்தம் மற்றும் மார்பு அசௌகரியம்
- கால்கள் மற்றும்/அல்லது கைகளில் வலி, பலவினம் அல்லது உணர்வின்மை
- கைகள், கழுத்து, தோள்பட்டை, தாடை மற்றும் முதுகில் வலி அல்லது அசௌகரியம்
- மூச்சுத் திணறல்
- உடற்பயிற்சி அல்லது ஏதேனும் ஒரு செயல்பாட்டின்போது எளிதில் சோர்வடைதல்
- இதய தாளத்தில் மாற்றங்கள் ‘
- மிக வேகமாக அல்லது மெதுவாக இதயத்துடிப்பு, பதற்றம் அல்லது மார்பில் படபடப்பு
- மயக்கம், தலைச்சுற்றல் அல்லது மயக்கம்
- பலவீனம் அல்லது சோர்வு
- கைகள், கால்கள், கணுக்கால் அல்லது கால்களின் வீக்கம்
- காய்ச்சல்
- தோல் தடிப்புகள் அல்லது அசாதாரண புள்ளிகள்
- உலர் அல்லது தொடர் இருமல்
ஆண்களுக்கான மாரடைப்பு அறிகுறிகள்
- கடுமையான மார்பு வலி, இடது கை அல்லது தாடையில் வலி மற்றும் சுவாசிப்பதில் சிரமம்.
பெண்களுக்கான மாரடைப்பு அறிகுறிகள்
- பெண்களுக்கும் மேற்சொன்ன சில அறிகுறிகள் இருக்கலாம். ஆனால், அவர்களின் வலி அதிகமாகி, தோள்பட்டை, கழுத்து, கைகள், வயிறு மற்றும் முதுகில் பரவுகிறது.
- பெண்கள் அஜீரணம் போன்ற வலியையும் அனுபவிக்கலாம்.
- வலி சீராக இல்லாமல் இருக்கலாம். வலி இல்லாமலும் இருக்கலாம். ஆனால், விவரிக்க முடியாத கவலை, குமட்டல், தலைச்சுற்றல், படபடப்பு மற்றும் குளிர் வியர்வை ஏற்படலாம்.
- பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கு முன் விவரிக்க முடியாத சோர்வு ஏற்படலாம்.
ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு கடுமையான முதல் மாரடைப்பு ஏற்பட்டால், அது மிகவும் சிக்கலை உண்டாக்கும்.
எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
மார்பு வலி, மூச்சுத் திணறல் மற்றும்/அல்லது மயக்கம் ஏற்பட்டால், உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாடுங்கள். உங்களுக்கு மாரடைப்பு இருக்கலாம் என நீங்கள் நினைத்தால், அவசர உதவி எண்ணை உடனே அழைக்க வேண்டும்.
இதய நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் சிகிச்சையளிப்பது எளிது. உங்கள் இதய ஆரோக்கியத்தைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், உங்கள் இதய நோய் அபாயத்தைக் குறைக்க நீங்கள் எடுக்கக்கூடிய வழிமுறைகளைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள். குறிப்பாக… உங்களுக்கு இதய நோய்க்கான குடும்ப வரலாறு இருந்தால்!
மருத்துவர் உங்கள் மருத்துவ மற்றும் குடும்ப வரலாறு, உங்கள் ஆபத்து காரணிகளை ஆய்வு செய்து, உடல் பரிசோதனை செய்வார். தேவைப்படும்போது, அவர்கள் தங்கள் அறிதல்களை சோதனைகள் மற்றும் நடைமுறை முடிவுகளுடன் இணைத்து முடிவெடுப்பார்கள்.
இதய நோய்களைக் கண்டறியும் சில பொதுவான சோதனைகள்
பல்வேறு ஆய்வக சோதனைகள் மற்றும் இமேஜிங் ஆய்வுகள் மூலம் இதய நோய்கள் கண்டறியப்படுகின்றன.
- ரத்த சோதனை, அழுத்த சோதனை, மார்பு எக்ஸ்ரே, எலக்ட்ரோ கார்டியோகிராம், எக்கோ கார்டியோகிராம், கணினிமயமாக்கப்பட்ட டோமோகிராபி (சிஜி) ஸ்கேன், காந்த அதிர்வு இமேஜிங் (எம்ஆர்ஐ) ஸ்கேன், எலக்ட்ரான்பீம் கம்ப்யூட்டட் டோமோகிராபி (CBET), கார்டியாக் வடிகுழாய் மற்றும் கரோனரி, ஆஞ்சியோகிராபி…
ஆபத்து காரணிகள்
இதய நோய்களுடன் தொடர்புடைய பல ஆபத்து காரணிகள் உள்ளன. குடும்ப வரலாறு போன்ற சில ஆபத்து காரணிகளை மாற்ற முடியாது, அதே நேரம் உயர் ரத்த அழுத்தம் போன்ற பிற ஆபத்து காரணிகளை வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் மாற்றியமைக்க முடியும்.
சிகிச்சை என்ன?
உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் இதய நோய்க்கு வழிவகுக்கும் ஆபத்து காரணிகளைக் கட்டுப்படுத்த போராடுகிறார்கள். இன்னும் பலர் தாங்கள் அதிக ஆபத்தில் இருப்பதைக்கூட அறியாமல் உள்ளனர்.
இதய நோயின் மிக முக்கியமான நடத்தை ஆபத்து காரணிகள் இவைதாம்…
ஆரோக்கியமற்ற உணவு, உடல் செயலற்ற தன்மை, புகையிலைப் பயன்பாடு மற்றும் ஆல்கஹால். இவை உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, அதிக கொழுப்பு, அதிக எடை மற்றும் உடல் பருமன் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும். இது ஒரு நபரின் இதய நோய்களை உருவாக்கும் அபாயத்தை மதிப்பிடுவதற்காக அளவிடப்படுகிறது.
உடற்பயிற்சி செய்வது போன்றவை ஆபத்து காரணிக்கு தீர்வு காண உதவும், ஆனால், இதய நோய் ஆபத்தைக் கணிசமாகக் குறைக்க, உங்கள் வாழ்க்கை முறையை ஒட்டுமொத்தமாகப் பார்ப்பது முக்கியம். நீங்கள் ஏற்கனவே இதய நோயோடு வாழ்ந்து கொண்டிருந்தாலும்கூட, ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதன் மூலம் நீண்ட காலம் வாழலாம். அது மோசமடைவதற்கான வாய்ப்புகளை குறைக்கலாம்.
இதில் தனிப்பட்ட செயல்பாடுகள் ஒரு பங்கு என்றாலும், சுத்தமான காற்று, மலிவு விலையில் ஆரோக்கியமான உணவு, நன்கு திட்டமிடப்பட்ட ஆரோக்கிய வாழிடங்கள் உள்ளிட்ட நல்வாழ்க்கை வாழ மக்களுக்குத் தேவையானவற்றை உறுதி செய்வதில் அரசாங்கங்களும் கொள்கை வகுப்பாளர்களும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். சுறுசுறுப்பான வாழ்க்கை முறையும் ஆரோக்கியமான செயல்பாடுகளும் மட்டுமின்றி, மலிவு விலையில் நல்ல சூழல்களை உருவாக்கும் சுகாதாரக் கொள்கைகளே, ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை பின்பற்றுவதற்கு மக்களைத் தூண்டும்.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 80% மாரடைப்புகள் தடுக்கப்படக் கூடியவையே. இதய நோய் காரணமாக ஏற்படும் இறப்புகளில் பெரும்பாலானவை உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, உடல் பருமன் அல்லது நீரிழிவு போன்ற ஆபத்து காரணிகளால் துரிதப்படுத்தப்படுகின்றன. இது ஆரோக்கியமான உணவு, வழக்கமான உடற்பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்வதன் மூலம் பெரிய அளவில் தடுக்கப்படலாம் அல்லது கட்டுப்படுத்தப்படலாம். புகையிலையை நிறுத்துதல், ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவு மற்றும் ரத்த சர்க்கரை அளவைக் கண்காணிப்பது மிகவும் முக்கியம்.
ஆரோக்கியமான சமச்சீர் உணவை உண்ணுங்கள்
ஊட்டச்சத்துகள் நிறைந்த சமச்சீர் உணவை உட்கொள்வது ஆரோக்கியமான இதயத்தைப் பராமரிக்க முக்கியமானது. ஆரோக்கியமான உணவில் பலவகையான பழங்கள் மற்றும் காய்கறிகள், முழு தானியங்கள், நட்ஸ் மற்றும் நல்ல கொழுப்புகள், குறைவான சர்க்கரை மற்றும் உப்பு குறைவாக உள்ள உணவுகள் உட்பட பல்வேறு வகையான பதப்படுத்தப்படாத மற்றும் புதிய உணவுகள் இருக்க வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் எச்சரிக்கையாக இருங்கள். அவற்றில் பெரும்பாலும் அதிக அளவு உப்பு உள்ளது. மேலும் நிறைய தண்ணீர் குடிக்கவும்!
தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்
உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பராமரிக்கவும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி அவசியம். வாரத்தில் ஐந்து நாட்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். பெரியவர்கள் ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி அல்லது குறைந்தபட்சம் 75 நிமிடங்கள் தீவிரமான உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 60 நிமிடங்கள் மிதமான மற்றும் தீவிரமான உடல் செயல்பாடுகளை (விளையாட்டுகள் / உடற்பயிற்சிகள்) மேற்கொள்ள வேண்டும்.
- உடற்பயிற்சியை உங்கள் வாழ்க்கையின் வழக்கமான பகுதியாக மாற்ற முயற்சிக்கவும்.
- லிஃப்டுக்குப் பதிலாக படிக்கட்டுகளைப் பயன்படுத்தவும்.
- சில நிறுத்தங்கள் முன்னதாகவே பேருந்திலிருந்து இறங்கி, மீதமுள்ள வழியில் நடக்கவும்.
சுறுசுறுப்பாக இருப்பது மன அழுத்தத்தைக் குறைக்கவும் உங்கள் எடையைக் கட்டுப்படுத்தவும் ஒரு சிறந்த வழியாகும். மன அழுத்தமும் பருமனும் இதய நோய்க்கான ஆபத்து காரணிகள் என்பதை எப்போதும் நினைவில் கொள்வோம்.
ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கவும்
அதிக எடை மற்றும் உடல் பருமன் அபாயத்தைக் குறைப்பது, கொழுப்பு மற்றும் சர்க்கரைகளிலிருந்து பெறப்படும் கலோரிகளின் அளவைக் குறைப்பது, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் நட்ஸ் ஆகியவற்றின் தினசரி உட்கொள்ளலின் பகுதியை அதிகரிப்பது மற்றும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது ஆகியவை இதயம் காக்க அவசியமான தேவைகள்.
புகையிலை பயன்பாட்டைத் தவிர்க்கவும்
நீங்கள் புகைபிடிப்பதை நிறுத்தினால், கரோனரி இதய நோய்க்கான ஆபத்து ஒரு வருடத்துக்குள் பாதியாகக் குறைந்து, காலப்போக்கில் இயல்பு நிலைக்குத் திரும்பும். அதோடு, புகை நிரம்பிய சூழல்களைத் தவிர்க்கவும். பிறர் புகைக்கும்போது வெளிப்படுத்தும் புகையை சுவாசிப்பதுகூட மாரடைப்பு அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது. புகையிலையின் அனைத்து வடிவங்களும் தீங்கு விளைவிக்கக் கூடியவையே. புகை பிடிப்பதை நிறுத்துவதில் உங்களுக்கு சிக்கல் ஏதேனும் இருந்தால், அதற்கான திட்டத்தை உருவாக்குவது பற்றி மருத்துவரிடம் பேசுங்கள்.
மதுவைத் தவிர்க்கவும்
புகையிலையைப் போலவே, மதுவும் பாதுகாப்பானது அல்ல. குறைவாக குடிப்பது அபாயத்தைக் குறைக்கும். அதே வேளையில் மது அருந்தாமல் இருப்பதே ஆரோக்கியத்துக்கான சிறந்த வாய்ப்பு என்று சான்றுகள் காட்டுகின்றன. மிதமான குடிகாரர்கள் கூட மது அருந்துவதை நிறுத்தும்போது அதிக ஆரோக்கிய நன்மைகளை அடைகிறார்கள்.
மன அழுத்தத்தை நிர்வகிக்கவும்
மன அழுத்தம் தமனிகளை இறுக்கமடையச் செய்யலாம். இது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் – குறிப்பாக பெண்களுக்கு. உடற்பயிற்சி, ஆழ்ந்த சுவாசம், உங்கள் தசைகளை தளர்த்துவது மற்றும் நீங்கள் விரும்பும் விஷயங்களுக்கு நேரம் ஒதுக்குவது ஆகியவை உங்கள் மன அழுத்தத்தை நிர்வகிக்க உதவும். சில விஷயங்கள் உங்கள் கையை மீறுவதாகத் தோன்றினால், யாரிடமாவது பேசவோ, நிபுணர் உதவியை நாடவோ தயங்க வேண்டாம்.
சோதனை முடிவுகளை அறிந்து கொள்ளுங்கள்
வழக்கமான சோதனை முடிவுகளை அறிவது உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் ஒரு முக்கிய பகுதியாகும்.
உங்கள் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவுகள் மற்றும் ரத்த சர்க்கரை அளவுகளை தவறாமல் பரிசோதிப்பது இதய நோயை உருவாக்கும் அபாயத்தைக் கண்டறியவும் கட்டுப்படுத்தவும் உதவும்.
உங்கள் ரத்த அழுத்தத்தை அறிந்து கொள்ளுங்கள்
உயர் ரத்த அழுத்தமானது மாரடைப்பு மற்றும் பக்கவாதத்துக்கான மிகப்பெரிய காரணங்களில் ஒன்றாகும். இது பொதுவாக எந்த அறிகுறிகளையும் கொண்டிருக்கவில்லை. எனவே, அதை தொடர்ந்து பரிசோதிப்பது முக்கியம். தேவைப்பட்டால், ரத்த அழுத்தத்தைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும். இதில் உணவுமுறை மாற்றங்கள், அதிக உடல் செயல்பாடு மற்றும் மருத்துவர் பரிந்துரைக்கும் மாத்திரைகள் ஆகியவை அடங்கும்.
உங்கள் கொலஸ்ட்ராலை அறிந்து கொள்ளுங்கள்
ரத்தத்தில் அதிக அளவு கொலஸ்ட்ரால் இருப்பது மாரடைப்பு, பக்கவாதம் உட்பட இதய நோய் ஆபத்தை அதிகரிக்கிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பை பொதுவாக ஆரோக்கியமான உணவு மற்றும் தேவைப்பட்டால் மருந்துகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.
உங்கள் ரத்த சர்க்கரையை அறிந்து கொள்ளுங்கள்
நீரிழிவு அல்லது உயர் ரத்த சர்க்கரை மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே, மருத்துவர் பரிந்துரைபடி ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது முக்கியம்.
பரிந்துரைக்கப்பட்டபடி உங்கள் மருந்தை எடுத்துக் கொள்ளுங்கள்
உங்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான அதிக ஆபத்து இருந்தால், அந்த ஆபத்தைக் குறைக்க மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும். ரத்தக் கொழுப்பின் அளவைக் குறைக்கும் ஸ்டேடின்கள், ரத்தக் கட்டிகளைத் தடுக்கும் குறைந்த அளவிலான ஆஸ்பிரின், நீரிழிவுக்கான இன்சுலின் மற்றும் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மாத்திரைகள் இவற்றில் அடங்கும். உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை அவர் அனுமதியின்றி நிறுத்தவோ, அளவுகளில் மாற்றம் செய்யவோ வேண்டாம்.
எச்சரிக்கை அறிகுறிகளை அறிந்து கொள்ளுங்கள்
விரைவில் உதவி கோரப்பட்டால், முழுமையாகக் குணமடைதலுக்கான வாய்ப்புகள் அதிகம். ஆகவே, அறிகுறிகளை அறிந்துகொள்வதும், கவனமாக இருப்பதும் அவசியம்.
இதய நோய்க்கான சிகிச்சைகள்
நிலைமையைப் பொறுத்து சிகிச்சை முறைகள் வேறுபடலாம். அவை பின்வருவனவற்றை உள்ளடக்கியிருக்கலாம்:
- உணவு, உடற்பயிற்சி, மது மற்றும் புகையிலையை கைவிடுதல் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள்
- ரத்த அழுத்தம் போன்ற ஆபத்து காரணிகளுக்கு சிகிச்சையளிப்பது, அவசியமான மருந்துகளை எடுத்துக்கொள்ளுதல்
- மருந்துகள், இதயமுடுக்கிகள் அல்லது கார்டியோவர்டர்டிஃபி பிரிலேட்டர்கள் போன்ற சாதனங்கள் பொருத்துதல்
- ஸ்டென்ட், இதய வால்வு அறுவை சிகிச்சை அல்லது கரோனரி பைபாஸ் அறுவை சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ நடைமுறைகள்
- இதயம் செயலிழந்து, எதிர்பாராதவிதமாக துடிப்பதை நிறுத்தும்போது, திடீர் இதயத் தடுப்புக்கு ஆளாகும்போது, CPR செயல்முறையானது ஒரு நபர் உயிர்வாழ்வதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
மாரடைப்பு மரணத்துக்கும் வழிவகுக்கும். ஏனெனில், அவை இதயத் தசைகளை பலவீனப்படுத்துகின்றன. அதனால் மாரடைப்புக்கான எச்சரிக்கை அறிகுறிகளை அறிந்துகொண்டு, கூடிய விரைவில் மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம்.
தீவிரமான உடல் செயல்பாடு, பரம்பரைக் கோளாறுகள் அல்லது இதயத்தின் அளவு அல்லது அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற உடல் அழுத்தங்களாலும் மாரடைப்பு ஏற்படலாம்.
CPR-ல் என்ன செய்யப்படுகிறது?
முழு CPR செயல்முறையானது 30 மார்பு அழுத்தங்களின் தொடர்ச்சியான சுழற்சியை உள்ளடக்கியது. அதைத் தொடர்ந்து 2 மீட்பு சுவாசங்கள்…
மார்பு அழுத்தங்கள் மூலம் உடல் முழுவதும் ரத்தத்தை கைமுறையாக பம்ப் செய்வதன் மூலமும், சுவாசம் அளித்து ஆக்ஸிஜனை வழங்குவதன் மூலமும், நீங்கள் பாதிக்கப்பட்டவருக்கு இதயமாக செயல்படுகிறீர்கள்!
இருப்பினும், நீங்கள் அசௌகரியமாக இருந்தாலோ, மீட்பு சுவாசத்தை வழங்குவதற்கான பயிற்சி பெறவில்லை என்றாலோ, நீங்கள் தொடர்ந்து மார்பு அழுத்தங்களைச் செய்யலாம். அவசரகால சூழ்நிலையில், எதுவும் செய்யாமல் இருப்பதைவிட, கைகளைப் பயன்படுத்தி CPR மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தானியங்கி வெளிப்புற டிஃபிபிரிலேட்டர் (AED)
இந்த சிறிய கையடக்க டிஃபிபிரிலேட்டர், திடீரென இதயத் தடுப்பு ஏற்பட்டால், அந்த நபரது இதயத்தை மறுதொடக்கம் செய்யப் பயன்படுகிறது. இது நபரின் இதய தாளத்தை பகுப்பாய்வு செய்வதன் மூலம் செயல்படுகிறது. பின்னர் இதயத்தை மீண்டும் சாதாரணமாகத் துடிக்க இதயத்துக்கு மின்சார அதிர்ச்சியை அனுப்புகிறது. அவசர கால சூழ்நிலையில் இக்கருவியை மருத்துவர்களால் எளிதில் இயக்க முடியும்.
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நல்ல உறவைப் பேணுவதன் மூலம், தீங்கு விளைவிக்கும் மன அழுத்தத்தைக் குறைத்து, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.
டாக்டர் வெங்கிடா சுரேஷ், MBBS., MD (Internal Medicine), PGD (Cardiology)
குழும மருத்துவ இயக்குனர்
காவேரி மருத்துவமனை, திருச்சி