4-ம் நிலை மின் தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு திருநெல்வேலி காவேரி மருத்துவமனையில் வெற்றிகரமான சிகிச்சை வழங்கப்பட்டது
பொதுவாக வெப்பம், இரசாயனங்கள், சூரியஒளி, மின்சாரம் அல்லது கதிர்வீச்சு ஆகியவற்றின் காரணமாக தோல் திசுக்கள் சேதமடையும் போது தீக்காயம் ஏற்படுகிறது, அதிலும் பெரும்பாலான தீக்காயங்கள் விபத்தினால் நிகழ்கின்றன. ஆழமான அல்லது பரவலான தீக்காயங்களுக்கு உடனடியாக மருத்துவ உதவியை நாடவேண்டும்.
திருநெல்வேலி காவேரி மருத்துவமனையின் பிளாஸ்டிக் மற்றும் புனரமைப்பு அறுவைச் சிகிச்சைத் துறை, தீவிர 3-ஆம் மற்றும் 4-ஆம் நிலை தீக்காயங்களினால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு நோயாளிக்கு, வெற்றிகரமாக சிகிச்சை அளித்து குணப்படுத்தியது.
பணியிடத்தில் உயர்-அழுத்த மின் பலகையில் பணிபுரியும் போது விபத்து ஏற்பட்டு 75% மின்சார தீக்காயங்களுடன் 42-வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், தீக்காயங்கள் ஏற்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். அப்போது, அவரது வலது கை, வலது தொடை, கையின் பின்புறத்தில் இருந்த தசை நார்கள் மற்றும் விரல் நுனியில் 4-ஆம் நிலை தீக்காயங்கள் ஆழமாக இருந்தன.அவருக்கு மயக்கம் கொடுத்து, காயங்கள் சுத்தம் செய்யப்பட்டு, அவரது ஆழமான காயங்களுக்கு தினசரி டிரஸ்ஸிங் மாற்றப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது விரல் நுனிகளில் திசுக்களின் சிதைவு ஏற்பட்டிருந்ததால், அவரது கட்டை விரலைத் தவிர மீதமுள்ள 4 விரல்களும் நுனியில் துண்டிக்கப்பட்டு, மூடப்பட்டன
முறையான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்து மற்றும் காயத்திற்கான சிகிச்சை ஆகியவற்றின் காரணமாக, அவரது 2-ஆம் நிலை தீக்காயங்கள் 2 வாரங்களில் குணமாகிவிட்டது. அவரதுகை, முன்கை மற்றும் வலது தொடையில் இருந்த காயங்களுக்கு ஸ்கின் கிராஃப்டிங் (Skin Grafting) செய்யப்பட்டது. அவரது உடல் நிலை இயல்பான நிலைக்குத் திரும்பி, அவரால் நடக்க முடிந்த நிலையில், அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இது குறித்துப் பேசிய பிளாஸ்டிக் மற்றும் புனரமைப்பு அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஃபெலிக்ஸ்கார்டிலியா, “நோயாளி ஒரு வருடம் முறையாக எங்களிடம் ஃபாலோ-அப்பில் இருந்து ஃபிசியோதெரபி உள்ளிட்ட புனர்வாழ்வு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இப்போது அவரால் தனது அன்றாட நடவடிக்கைகளை வழக்கம் போல செய்யமுடிகிறது, அத்துடன் மீண்டும் வேலைக்குச் செல்லவும் தொடங்கிவிட்டார்
காலம் தாழ்த்தாமல் உடனடியாக தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் பட்சத்தில், பாதிக்கப்பட்டவரின் உயிரை மாட்டுமின்றி, அவரது குடும்பத்தின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற முடியும்”, என்றார்.