ஒரு குழவியின் மீள்பிறப்பு

குழவிகள் மீண்டும் மண்ணில் அவதரிக்குமா என்ன? ஆம் தோழர்களே, தோழிகளே! சட்டென ஓரதிகாலை உங்கள் அறை விட்டு நீங்கள் வெளி வருகையில் வயதான உங்கள் தாயோ, தந்தையோ, அத்தையோ யாரோ ஒருவரிலிருந்து ஒரு சொல்லிலோ அல்லது ஒரு சிறு அசைவிலோ ஒரு சிறு மகவொன்று வெளிப்படும் தருணமே குழவிகள் மீள் பிறப்படையும் தருணம்! மறுபிறவி இல்லையென இங்கு சொல்பவர் எவர்!

elderly-and-aging

நமது சிறு வயது நாயகனான, சொல்லிலும் செயலிலும் ஆளுமை மிக்க நம் தந்தை ஒரு தேன் மிட்டாய் கேட்கும் தருணம் அவர்கள் நமது குழவிகளாகும் தருணம்! தந்தை தனையனாக, தனையன் தந்தையாகும் முடிவிலா நாடகம்!

முதியவர்களும் முதுமையும் என்பது, அதிகாலை இளமஞ்சள் நிறச் சூரியன் ஒரு குழந்தை என்றால் அந்தியின் பொன்னொளிர் ஆரஞ்சு வண்ணச் சூரியனே முதுமையென்பது.

நம்மை மண்ணுக்கிறைத்த அக்கடவுளரின் தேவைகள் என்ன, அவர்களின் மருத்துவம் எங்கிருந்து தொடங்குகிறது? நமது வீட்டிலிருந்து மருத்துவமனை வரை நீளுகின்றது. அவர்களின் முதல் சிகிச்சையென்பது முதலில் நாம் வழங்கும் நம் இரு காதுகளும், பின் ஒரு மனமும் தான் ! அதைக் கொடுக்க முடியாதளவிற்கு நாம் வறியவர்களல்லவே!

அவர்களின் உடல் வளர்ந்து பெருகி மண் நிறைத்து பின் சுருங்கி மண் மறைந்தாலும் உள்ளம் பெருகிக் கொண்டே செல்வதைக் காணலாம்.

குழலும் யாழும் மழலைச் சொல்லும் மட்டுமா இனிது, ஒரு முதிய மூதாட்டியின், நான் மயக்க மருந்து செலுத்துவதற்கு முந்திய கணம் தோன்றிய பொக்கை வாய்ச் சிரிப்பும், நீ நல்லா இருப்ப ராசான்னு சொன்னதும் குழலினும் தேனினும் இனித்தன.

மருத்துவமனையில் செவிலியரின் கைபற்றி எண்ணங்களற்று உறங்கும் திருவின் மறுஉறுவினைப் போற்றுவோம் தோழமைகளே.

Dr-Velumurgan---anaesthesiology2019-02-18%2001:05:55pm

Dr. Velmurugan Deisingh
Consultant Anaesthesiologist and Head of the Department,
Kauvery Hospital Chennai

Kauvery Hospital