Hi everyone, I am Dr Velmurugan, Senior Consultant Anaesthesiologist at Kauvery hospital. My passion towards reading especially Tamil works started when I was twelve years old and then on I continued to read and by the time when I started to read real literary works, I was in my early thirties. The power of this language is that it has taught me about life. I was floating almost in the sky when I first read Ponniyin Selvan [Kalki] at the age of fifteen. What this reading gives us is first and foremost great friendship. [Yes, books are the best friends]. A bond always exists between my novel, the author and me. Every time I read, it was an opportunity to understand everything from everyone’s point of view.
It’s like Living hundreds of lives in this one life .It’s like a mother’s lap to relax each day after a demanding day. If reading literature makes us more kinder day after day after day, which is happening to me what else we want. Literature has done this to me. I wish to share my experiences with you.
இனித்தினிக்கும் இலக்கியம்
நல்வாழ்வு என்பது உடல், மனம் மற்றும் உணர்வின் இனிய நிலையே. இம்மூன்றின் சமநிலையே வாழ்க்கைப்படகை, புயலிலே ஒரு தோனி [ப சிங்காரம்] போன்று அமைதியாக எதிர் கொள்ள உதவி செய்யும். மனதை விசாலமாக்கவும் உணர்வினை விலகி நின்று பார்க்கவும் இலக்கியம் பேருதவி புரியும் என்று நான் தீர்க்கமாக நம்புகிறேன். நீர்க்குளத்தில் குளிக்கும் இன்பத்தைவிட இலக்கியமெனும் தேன் குளத்தில் இனித்தினிக்க குளிப்பது சாலச்சிறந்ததன்றோ. மிக எளிதாக சலித்திடும் ஒரு வாழ்வில் ஓராயிரம் வாழ்வுதனை வாழச்செய்யும் புனைவிலக்கியம். நான் இங்கு வாசலையே திறக்கிறேன், உள்ளே சென்று தேடுங்கள் உங்கள் வைரவைடூரியங்களை.
கம்பனின் வரிகள்:
“கள் இருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச் சிறையில் கரந்த காதல் உள்ளிருக்கும்?”
எனக் கருதி உடல் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி?”
எந்த ஒரு பெண்ணும் தன் தலைவனை எண்ணி உவகை கொள்ளும் தருணம். ராமனின் எண்ணம் ராவணனின் இதயத்தை அம்பினால் தீண்டும் தருணம். தன் காதல் மனைவியின் மீது காதல் கொண்ட இதயத்தை ராமனின் வாளி [அம்பு] சென்று தைக்கும் தருணத்தையே கம்பன் இக்கவிதையில் வடித்திருக்கிறான் [றான் என்பது அன்பு மற்றும் உரிமையின் மிகுதியாலே]. கம்பன் வாழ்க!!!
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்
அனைத்து விதமான மருத்துவமும் நல்வாழ்வும் இந்த ஒரு குறளிலேயே காணலாம். நோயின் வேர் மட்டுமல்ல எந்த பிரச்சினையிலும் வேர் வரை சென்றே களையவேண்டும்.
ஜெயமோகனின் சோற்றுக்கணக்கு என்னும் சிறுகதையில் உண்மையிலேயே திருவனந்தபுரத்தில் எழுபதுகளில் வாழ்ந்த கெத்தேல் சாயிபு என்ற உயர்ந்த மனிதரைப்பற்றி எழுதியிருப்பார். கெத்தேல் சாயிபு ஒரு மெஸ் ஒன்றை நடத்தி வந்தார், யார் வேண்டுமானாலும் அங்கு சென்று சாப்பிடலாம், சாப்பிட்டு முடித்து விட்டு வெளியே செல்லுமிடத்தில் ஒரு டப்பா இருக்கும். அதில் முடிந்தால் காசு போடலாம் அல்லது அப்படியே சென்று விடலாம். அவர் எவரும் வயிறும் மனமும் நிரபம்புவதை மட்டுமே தன வாழ்நாள் முழுவதும் செய்தார்.பேரன்னை என்பவர் ஒரு பெண்ணாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியம் ஒன்றுமில்லையே.அது ஒரு மனநிலை என்பதை நமக்கு புரிய வைக்கும் சிறுகதை.
ஜெயமோகனின் யானை டாக்டர் என்னும் சிறுகதை.
இந்த சிறுகதை காடும், அதன் வாழ்வும் ,அதனை மனிதன் எவ்வாறு சிறுமைப்படுத்துகிறான் என்பதை டாக்டர் வைத்தியநாதன் கிரிஷ்ணமுர்த்தி என்ற முதுமலை காடுகளில் பணிபுரிந்த ஒரு வெட்டெனரி டாக்டரின் பார்வையில் காணலாம்.காடுகள் மற்றும் மிருகங்களின் பேருருவையும் பேரன்பையும் நமக்கும் காட்டும் சிறுகதை. அதில் சில வரிகள்
‘டாக்டர் கே முகம் சிவந்தார். ‘பைரன் கவிதை ஒண்ணு இருக்கு.
‘ஒரு நாயின் கல்லறையில் எழுதப்பட்ட வாசகம்’. படிச்சிருக்கியா?’
‘இல்லை’ என்றேன். அவர் காட்டையே சிவந்த முகத்துடன் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு திடீரென்று மந்திர உச்சாடனம் போலச் சொல்ல ஆரம்பித்தார்.
‘When some proud son of man returns to earth, Unknown to glory, but upheld by birth..’ நான் அந்த அவ்வரிகளை அவரது முகமாகவே எப்போதும் நினைத்துக்கொள்வேன்.
ஆனால் நாய் வாழ்க்கையில் உன்னத நண்பன் வரவேற்பதில் முதல்வன்! பாதுகாப்பதில் முந்துபவன்! அவன் நேர்மை நெஞ்சம் உரிமையாளனுக்கே சொந்தம், அவனுக்காகவே உழைக்கிறான் உண்டு உயிர்க்கிறான்!
டாக்டர் கே [வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி] என்பவரை பற்றிய உண்மை கதை இது. அவர் யானை டாக்டர் என்றேஅழைக்கப்பட்டார். உலகம் முழுவதும் போற்றப்பட்ட யானைகளின் நிபுணர்.மிருகங்களை [அனைத்து உயிர்களையும்] மிகவும் நேசித்தவர். ஜெயமோகனின் அறம் சிறுகதைத் தொகுப்பில் சோற்றுக்கணக்கு,வணங்கான், யானை டாக்டர் மற்றும் நூறு நாற்காலிகள் அனைவரும் நிச்சயம் வாசிக்க வேண்டிய சிறுகதைகள்.
லெபனான் நாட்டின் மக்களுக்காக பிரார்த்திக்கிறோம். அந்நாடு பல இலக்கிய மேதைகளை உருவாக்கிய நாடு. அதில் குறிப்பிடத்தக்கவர்களான இரு நண்பர்கள் கலீல் ஜிப்ரான் [தீர்க்கதரிசி என்னும் படைப்பு] மற்றும் மிகைல் நைமியின் [மிர்தாதின் புத்தகம்]. இவ்விரண்டும் ஆகச்சிறந்த தத்துவ படைப்பு. மிர்தாதின் புத்தகத்தில் வரும் வரிகள்
‘அன்பே வாழ்வின் சாறு, வெறுப்பு மரணத்தின் சீழ்’
இது நமது வள்ளுவனின் ‘அன்பிற்குண்டோ அடைக்கும் தாழ்’ என்பதன் நீட்சியே.
பணியாள் எஜமானனுக்கு எஜமான், எஜமான் பணியாளனுக்கு பணியாள் – மிர்தாதின் புத்தகத்தில் வரும் வரிகள் – கார்ல் மார்க்ஸ் கனவு கண்ட சமத்துவ சமநீதியல்லவா.
சங்கஇலக்கியங்கள் – எரிபரிந்தெடுத்தல் பெரு வீரமாக [போருக்கு பிறகு மற்ற நாட்டின் அனைத்து வீடுகளையும் தீயிட்டு எரித்தல்] கொண்டாடப்பட்ட காலத்திலே ஒரு சிறு கிராமத்திலே அமர்ந்து
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா’
என்றுரைத்த கணியன் பூங்குன்றனாரின் பேருருவ பேரன்னையின் அகன்ற மனதினை உணரலாம்.
சங்கஇலக்கியத்தில் குறுந்தொகையில் ஒரு கவிஞரின் பெயரே கல்பொறுசிறுநுரையார். அவரது இயற்பெயர் தெரியாததால் அவரின் சொல்லான ‘ கல்பொருசிறுநுரை ‘ என்பதே அவரது பெயரானது. கல்பொருசிறுநுரை – அச்சொல் சொல்வதுதான் என்ன – கற்பாறையில் மீண்டும் மீண்டும் பொருதும் சிறுநுரை, அன்னையை நோக்கி மீண்டும் மீண்டும் செல்லும் குழவியா, தன்னம்பிக்கையின் மறு சொல்லா, தலைவனை நோக்கி செல்லும் தலைவியின் பெருங்காதலா, பேரிறை பிரமத்தினை நோக்கி செல்லும் நமது பலநூறு பிறவிகளா,இந்த சொல்லெழுப்பும் பலநூறு கற்பனை சொல்லித்தீராது. அதனாலேயே அவருக்கு அப்பெயர்க்கரணம்.
ஜார்ஜ் ஆர்வெல் என்ற ஆங்கிலேயயே இலக்கியவாதியின் உலகப்புகழ்பெற்ற அனிமல் பார்ம் என்ற குறுநாவல் தமிழில் மிருகங்களின் பண்ணை என்று திரு க ந சுப்பிரமணியம் என்ற இலக்கிய ஆளுமையால் மொழி பெயர்க்கப்பட்டது. எந்தக்கொள்கை உடையவர்களும் அதிகார அமைப்புக்க்குள்ளே வந்தவுடனே அதன் இரும்புக்கரமமும் இரக்கமற்ற தன்மையும் எவ்வாறு எளிய மனிதர்களை அழிக்கும் என்பதை, பெரும் பேரழிவுகளை பலவித கொள்கைகள் உருவாக்கிய காலகட்டத்திலேயே மிகுந்த அங்கதத்துடன் நக்கலுடனும் எழுதிய கலைஞன். ஆர்வெல்லின் மிருகங்கள், நாலு கால் நல்லது ரெண்டு கால் கெட்டது என்று கத்தும் வரி மிகப்பிரபலம்.
புதுமைப்பித்தன் என்னும் இலக்கிய மாமேதை மற்ற எந்த மேதைகளை போல் [ பாரதி, பட்டுக்கோட்டையார் போன்று] பூமியன்னை சீக்கிரமே திருப்பியனுப்பினாள். அவரது கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும், கயிற்றரவு,ஆற்றங்கரை பிள்ளையார் போன்றவை மாபெரும் படைப்புகள். சமூக ஏற்றத்தாழ்வுகளையும், மூடநம்பிக்கைகளையும் மிகுந்த அங்கதத்துடன் மற்றும் நய்யாண்டியும் கலந்து எழுதியவர் புதுமைப்பித்தன். நமது கலைவாணர் மற்றும் விவேக் போன்ற சமூக ஏற்றத்தாழ்வுகளை சாடிய நகைச்சுவை நடிகர்களுக்கு முன்னோடி.
எனது சிறு வயதில் ஸ்வாமியின் சிநேகிதி என்ற அனுராதா ரமணனின் சிறுகதை படித்த போது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஆன மிகச்சிறந்த நட்பு எப்படி இருக்குமென்றறிந்தேன்.
டால்ஸ்டாய் என்னும் ருஷ்ய இலக்கிய மேதை பற்றி கேள்விப்பட்டிருப்போம் அவரது போரும் அமைதியும், அன்னா கரீனா, உயிர்த்தெழுதல் போன்றவை பெரும் படைப்புகள். அன்பைப்பற்றியும் மனிதனின் உணர்வின் அலைக்கழிப்பையும் தன எழுத்தில் கொண்டு வந்தவர். இவர் ஒரு வகையில் நமது மகாத்மா காந்தியடிகளின் அஹிம்சை வழிப்போராட்டத்தின் முன்னோடி.
ருஷ்ய எழுத்தாளரான தஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும், கரமசோவ் சகோதரர்கள் மற்றும் வெண்ணிற இரவுகள் ஆகியவை அற்புதமான படைப்புகள்.
தமிழில் பாரதி, ல ச ராமாமிர்தம் , புதுமைப்பித்தன், க ந சு, ப சிங்காரம், கி ராஜநாராயணன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் முதல் ராமகிருஷ்ணன், ஜெயமோகன், பிரமிள், நாஞ்சில் நாடன் வரை வாசிக்க பெரும் நிரையே உள்ளது.
டால்ஸ்டாய், தஸ்தயெவ்ஸ்கி, காஃப்கா என்று உலகம் முழுதும் இலக்கியப்படைப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. வாசித்திடுவோம் வளர்ந்திடுவோம். நமது அகத்தினாலும்,உணர்வாலும் வளர்வோம், இனிக்கவினிக்க வாழ்ந்திடுவோம்.
Dr. Velmurugan Deisingh, M.B.B.S., D.A., D.N.B.(Anesthesiology)
Consultant Anaesthesiologist
Kauvery Hospital, Chennai