பெண்களின் இனப்பெருக்க மண்டலத்தில் சினைப்பை (கருமுட்டைப்பை என்கிற ஓவரி) மிக முக்கியமானது. பெண்களுக்கு இரண்டு சினைப்பைகள் உள்ளன. முட்டை வடிவிலான சினைப்பை, கருப்பையின் இருபுறங்களிலும் இருக்கும். இனப்பெருக்கம் தொடர்பான இரண்டு பணிகளைச் சினைப்பை செய்கிறது. கருவுறுதலுக்கான சினை முட்டைகளை உற்பத்தி செய்கிறது. உடல்நலத்துக்குத் தேவைப்படும் ஈஸ்ட்ரோஜன், புரொஜஸ்ட்ரான் ஆகிய இரண்டு ஹார்மோன்களையும் உற்பத்தி செய்கிறது. இந்த இரண்டு ஹார்மோன்கள்தாம் மாதவிடாய்ச் சுழற்சியைக் கட்டுப் படுத்துகின்றன.
மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு அடுத்தபடியாகப் பெண்களைத் தாக்கிவருகிறது சினைப்பைப் புற்றுநோய் (Ovarian Cancer).
சினைப்பையில் சில கட்டிகள் திடீரென மாதவிடாய் ஒழுங்கற்று வருகிறது என்றால் அதற்கான காரணம் சினைப்பை சார்ந்ததாகவும் இருக்கலாம். சினைப்பையில் கட்டிகள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இந்தக் கட்டிகளில் நீர்க்கட்டியும் (சிஸ்ட்) உண்டு; உருண்டு, திரண்ட டியூமர் கட்டியும் உண்டு . நீர்க்கட்டியிலும் இரண்டு, மூன்று வகைகள் உண்டு. சின்னச் சின்னதாக உள்ள நீர்க்கட்டிகளை Polycystic Ovaries என்று சொல்வோம். பெரிய கட்டிகளாக ஓரிரண்டு கட்டிகள் இருந்தால் Ovarian Cyst ஆக இருக்கலாம். அல்லது எண்டோமெட்ரியாசிஸ் (Endometriosis) ஆகவும் இருக்கலாம். பல பெண்களுக்கு அல்ட்ரா சவுண்ட் பரிசோதனையில் தென்படும் கட்டி, ஓவேரியன் சிஸ்ட்டாக இருக்கும். எனவே, அதைப் புற்றுநோய்க் கட்டி என நினைத்து பயப்படத் தேவையில்லை. ஓவேரியன் சிஸ்ட்டினால் பெரிய பிரச்சினைகள் எதுவும் ஏற்படுவதில்லை. அடுத்தது சினைப்பைக் கட்டி. Dermoid கட்டி என்று சொல்லக்கூடிய கட்டி அரிதாக சிலருக்கு வரக்கூடும். சினைப்பையில் எந்தக் கட்டி இருந்தாலும் அதை அகற்றியே ஆக வேண்டிய அவசியமில்லை . புற்றுநோய் கட்டியாக இருந்தால் மட்டுமே அகற்ற வேண்டியிருக்கும். சாதாரண நீர்க்கட்டிகளை அகற்ற வேண்டியதில்லை.
குடும்பத்தில் ஏற்கெனவே யாரேனும் ஒருவர் மார்பகப் புற்றுநோய், சினைப்பைப் புற்றுநோய் என ஏதாவது ஒருவகைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு சினைப்பைப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது. மார்பகப் புற்றுநோய், கருப்பை அல்லது குடல் புற்றுநோயால் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் இந்தப் புற்றுநோய் ஏற்படக்கூடும். பருமன் பிரச்சினை உள்ளவர்களுக்கும் சினைமுட்டை உறுப்புப் புற்றுநோய் ஏற்படலாம்.
மெனோபாஸ் காலத்தைக் கடந்த பெண்களும் 45 – 50 வயதுடையவர்களும் சினைப்பை புற்றுநோய்க்கு அதிகம் ஆளாகிறார்கள். 20 – 30 வயது வரையுள்ள பெண்களில் 7 சதவிகிதம் பேர் ‘ஜெர்ம் செல் டியூமர்‘ என்கிற அரிதான ஒருவகை சினைப்பை புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
ஒரு லட்சத்தில் ஆறு முதல் எட்டு வரையிலான பெண்களே சினைப்பை புற்றுநோயின் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். ஆனால், இந்த வகைப் புற்றுநோயை மிகவும் தாமதமாகத்தான் கண்டுபிடிக்க முடியும். அதிகபட்சமாக 20 சதவிகித நோயாளிகளை மட்டுமே முன்கூட்டியே கண்டுபிடிக்க முடியும். 80 சதவிகித நோயாளிகளில் முற்றிய நிலையிலேயே சினைப்பை புற்றுநோய் கண்டறியப்படுகிறது.
கர்ப்பப்பைவாய் புற்றுநோயின் அறிகுறிகள் இதற்குப் பொருந்தாது. சீரற்ற மாதவிடாய் சுழற்சி, மாதவிடாய் நாள்களில் அதிக ரத்தப்போக்கு போன்ற வெளிப்படையான அறிகுறிகள் எதுவும் சினைமுட்டை உறுப்புப் புற்றுநோயில் இருக்காது. அவற்றை உற்றுநோக்கிதான் அறிய முடியும். வயிற்று உப்புசம், அஜீரணம், சிறிதளவு சாப்பிட்டாலே வயிறு நிரம்பியது போன்ற உணர்வு ஏற்படுவது போன்ற அறிகுறிகள் இருக்கலாம். ஆனால், இதே அறிகுறிகள் வயிறு சார்ந்த உடல்நலக் கோளாறுகளாலும் ஏற்படலாம் என்பதால் பயப்பட வேண்டாம். ஆனால், மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.
அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும். அவரது பரிந்துரைப்படி ஸ்கேன் மற்றும் சில ரத்தப் பரிசோதனைகள் செய்ய வேண்டியிருக்கும் அல்ட்ரா சவுண்ட் மூலம் கண்டறியப்படும் இந்தப் புற்றுநோய், சி.டி ஸ்கேன் மூலம் உறுதிசெய்யப்படும்.
ஓவரியன் புற்றுநோய் உறுதி செய்யப்பட்டால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். கட்டி, கர்ப்பப்பை, இரண்டு ஓவரி, நெரிக்கட்டி போன்றவை தேவைக்கேற்ப நீக்கப்படும். பாதிப்பு மற்ற இடங்களுக்கும் பரவாமல் இருக்க, புற்றுநோய்க்கட்டியை அகற்றுவது முதல் நிலை சிகிச்சை. நோயின் தன்மைக்கு ஏற்ப சிலருக்கு கீமோதெரபி போன்ற பின் சிகிச்சைகள் தேவைப்படலாம். மாதவிடாயில் தொடர்ந்து பிரச்சினை இருந்தாலோ, வயிறு பெரிதாவது போல தோன்றினாலோ, வலி இருந்தாலோ, மகப்பேறு அல்லது மகளிர் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று ஸ்கேன் செய்ய வேண்டும். இதை அலட்சியமாகக் கையாளக் கூடாது.
Dr கவிதா சுகுமார் MBBS, MD, MCH மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம், அறுவைசிகிச்சை புற்றுநோயியல் ஆலோசகர், காவேரி மருத்துவமனை, சென்னை
A lot of women now are being diagnosed with ovarian cysts. It is important to know the difference between the ovarian cysts and ovarian cancer.
Comment:*
Nickname*
Save my name, email, and website in this browser for the next time I comment.