நுரையீரல் தொற்றினை உண்டாகக்கூடிய ஒரு வைரஸ் வகைதான் இன்ஃப்ளூயன்ஸா (Influenza). இது ஒரு RNA வைரஸ். இன்ஃப்ளூயன்ஸா புதிதாக உருவாகியுள்ள வைரஸ் அல்ல. 150 ஆண்டுகளாகவே இந்த வைரஸ் தொற்றுநோய்களை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஃப்ளூயன்ஸா ஆபத்துக்குரிய ஒரு RNA வைரஸ். இன்ஃப்ளூயன்ஸாவில் ஏ, பி, சி என 3 வகைகள் உள்ளன. ஏ வகை பொதுவானது. இதற்கடுத்து முக்கியமானது பி வகை இன்ஃப்ளூயன்ஸா பொதுவானதல்ல.
நம் உடலின் செல்களுக்குள் DNA உள்ளது. இந்த DNA-ல்தான் செல் எப்படி செயல்பட வேண்டும் என்கிற ப்ரோக்ராம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்தே RNA, புரதத்தயாரிப்பு என அடுத்தடுத்த செயல்பாடுகள் நிகழும்.
இன்ஃப்ளூயன்ஸா வைரஸில் DNA இல்லாததால் (DNA proof reading is last), அதில் நிறைய குளறுபடிகள் நடக்க வாய்ப்பிருக்கிறது. இந்த வைரஸில் அடுத்தடுத்த உருமாற்றங்கள் ஏற்படும் சாத்தியம் அதிகம். அதிலும் இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸில் உருமாற்றம் ஏற்படும் சாத்தியம் மிக அதிகம்.
கோவிட் வைரஸ் மனிதர்களிடமே பாதிப்பை ஏற்படுத்தியது. மிக அரிதாகவே விலங்குகளும் கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டது பதிவாகியிருக்கிறது. ஆனால், இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தொற்று மனிதர்களிடமும் விலங்குகளிடமும் காணப்படுகிறது.
இன்ஃப்ளூயன்ஸாவில் ஒரு வகையான ‘பறவைக்காய்ச்சல்’ பீதி சில நேரங்களில் தீவிரமாகிறது. குறிப்பிட்ட பறவைகளை அழிக்க வேண்டும் என்று அரசாங்கமே அவ்வப்போது உத்தரவிடுவதை நாம் அடிக்கடி செய்திகளில் கேள்விப்படுகிறோம். பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்று பரவிவிடக் கூடாது என்கிற முன் எச்சரிக்கைதான் இதற்குக் காரணம். குறிப்பாக கோழிப்பண்ணைகளில் கோழிகளுக்கு நெருக்கமாக மனிதர்கள் வேலை பார்க்கும்போது இது எளிதாக பரவிவிடலாம்.
மனிதர்களிடம் காணப்படும் இன்ஃப்ளூயன்ஸா வேறு. பறவைகளிடம் காணப்படும் இன்ஃப்ளூயன்ஸா வேறு. ஆனால், இதுபோன்ற சூழலில், முற்றிலும் புதிய வகை வைரஸ் உருவாகலாம். மக்கள்தொகை அதிகமான இந்தியா போன்ற நாடுகளில் இது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு அதிவேகமாகப் பரவும். புதுவகை வைரஸ் என்பதால் அதை எதிர்கொள்ளும் நோய் எதிர்ப்பு சக்தி எல்லோரிடமும் இருக்காது. உயிரிழப்புகள் அதிகமாகலாம்.
இருமல், மூக்கு ஒழுகுதல், காய்ச்சல், ஆக்சிஜன் தேவைப்படுவது, வெண்டிலேட்டர் சிகிச்சைக்கான நிர்ப்பந்தம் என கோவிட் தொற்றுக்கு சொல்லப்படும் அதே அறிகுறிகள் இன்ஃப்ளூயன்ஸா தொற்றுக்கும் ஏற்படும்.
குழந்தைகள், முதியவர்கள், நாள்பட்ட நோயுடையவர்கள், நுரையீரல் பிரச்சினை கொண்டவர்கள் மற்றும் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு இன்ஃப்ளூயன்ஸா தொற்று ஆபத்தை ஏற்படுத்தலாம்.
குறிப்பாக இதயக்கோளாறு, நுரையீரல் பிரச்சினை கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஆகியோருக்கு இதன் அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியம் சய்யக் கூடாது. ஏனெனில் இன்ஃப்ளூயன்ஸா தொற்று நிமோனியாவாக மாறும் வாய்ப்பு உண்டு. பொதுவாக சளி, காய்ச்சல் ஏற்பட்டால் தானாகவே சரியாகிவிடும் என்ற எண்ணம் நம்மிடையே பரவலாக உண்டு. மூன்று நாட்களுக்கு மேல் சளி, காய்ச்சல் குணமாகாவிட்டால் எச்சரிக்கை தேவை. மருத்துவரை சந்திப்பது அவசியம். பிசிஆர் சோதனையின் மூலம் இன்ஃப்ளூயன்ஸா தொற்று ஏற்பட்டிருப்பதை மருத்துவர் உறுதி செய்வார். இன்ஃப்ளூயன்ஸாவுக்கு பயனுள்ள மருந்துகள் உள்ளன. கவலை வேண்டாம்.
மழை மற்றும் குளிர்காலத்தில் இன்ஃப்ளூயன்ஸா தொற்று அதிகம் ஏற்படலாம். எனவே, தொற்று அபாயம் உள்ளவர்கள் வருடம் ஒருமுறை தடுப்பு மருந்து எடுத்துக்கொள்வது பாதுகாப்பானது. உலக சுகாதார நிறுவனம் மே மற்றும் அக்டோபர் மாதங்களை இதற்காக இந்தியாவுக்கு பரிந்துரைத்துள்ளது. தேவைக்கு உங்கள் மருத்துவரை அணுகவும். வரும் முன் காக்கும் முயற்சியாக தொற்று அபாயம் உள்ளவர்கள் முன்கூட்டியே தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது.
டாக்டர் ஸ்ரீனிவாஸ் ராஜகோபாலா MBBS, MD (உள் மருத்துவம்), DM(Pul. & Crit Care) இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் காவேரி மருத்துவமனை, சென்னை
Comment:*
Nickname*
Save my name, email, and website in this browser for the next time I comment.